You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்ஐசி: ரூ.2,467 கோடி பாலிசிகளை விற்ற இந்த முகவர் 40 ஆயிரம் பேரை சேர்த்தது எப்படி? கமிஷன் எவ்வளவு?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பல தசாப்தங்களாக, பாரத் பரேக் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் அச்சிடப்படும் மரண அறிவிப்புகளை கவனமாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நாக்பூர் நகரின் சுடுகாட்டில் கூட தினசரி நடக்கும் துக்க நிகழ்வுகளை கவனித்து வந்துள்ளார். ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை (Life Insurance Policy) விற்பதே அவரது வேலையாக இருந்ததால், பல தசாப்தங்களாக இது அவருடைய வாடிக்கையாக உள்ளது.
"ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அழைப்பு தேவையில்லை" என்கிறார் பரேக். "உடலை சுமந்து வருபவர் இறந்தவரின் உறவினராக இருந்தாலும், நீங்கள் அவர்களைச் சந்தித்து நான் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என்று சொல்லுங்கள். உங்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம் செட்டில் ஆக வேண்டுமானால் சொல்லுங்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். அப்படிச் சொல்லி, உங்கள் விசிட்டிங் கார்டைக் கொடுக்க வேண்டும்." என்கிறார் பாரத்.
துக்க நாட்கள் முடிந்துவிட்டதால், சில குடும்பங்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
பெரும்பாலும் அவராகவே இறந்தவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். அவர்கள் குடும்பத்திற்கு உதவுகிறார், சரியான நேரத்தில் இழப்பீடு பெற முயற்சிக்கிறார்.
ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தால் எவ்வளவு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, எவ்வளவு கடன் பாக்கி உள்ளது, போதுமான அளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா, அவர்களிடம் சேமிப்பு மற்றும் முதலீடுகள் உள்ளதா என்பதையும் அறிய முயல்கின்றார், பாரத்.
"ஒரு வீட்டின் தலைவிதி எனக்குத் தெரியும், நான் என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்தேன்."
55 வயதான பாரத் பரேக், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 13.6 லட்சம் முகவர்களில் ஒருவர்.
எல்ஐசி ஒரு லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது மற்றும் 28.6 கோடி பாலிசிகளை வழங்கியுள்ளது.
இந்த 66 வயதான ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதன் பொது வழங்கல் காரணமாக தற்போது செய்திகளில் உள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 90%க்கும் அதிகமான பாலிசிகள் பரேக் போன்ற காப்பீட்டு முகவர்கள் மூலம் எடுக்கப்படுகின்றன.
எல்ஐசியின் நட்சத்திர முகவர்களில் பாரத் பரேக் இடம் பெற்றுள்ளார்.
நேர்த்தியாக உடையணிந்துள்ள பாரத் ஒரு உற்சாகமான விற்பனையாளரைப் போல இருக்கிறார். அவர் ரூ. 2,467 கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டு பாலிசிகளை விற்றுள்ளார். அவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நாக்பூரில் உள்ளனர்.
சுமார் 40,000 பாலிசிகளை விற்றதாகவும் அவர்களிடமிருந்து நிலையான கமிஷனைப் பெறுவதாகவும் பாரத் கூறுகிறார். பிரீமியம் வசூல் மற்றும் செட்டில்மென்ட், க்ளைம் செட்டில்மென்ட் போன்ற சேவைகளை அவர் இலவசமாக வழங்குகிறார்.
35 ஊழியர்களை கொண்ட பரபரப்பான அலுவலகம்
பாரத் பரேக் காப்பீட்டு முகவர்கள் மத்தியில் ஒரு பிரபலமானவர் எனலாம்.
எல்ஐசியின் தலைவரை விட அவரது வருமானம் அதிகம் என்பதால், அவர் தற்போது ஊடக செய்திகளின் மூலம் வெளிச்சத்தில் இருக்கிறார்.
அவர் மூன்று தசாப்தங்களாக மில்லியன் டாலர் வட்ட மேசை உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது உலகின் முதன்மையான ஆயுள் காப்பீடு மற்றும் நிதிச் சேவை வல்லுநர்களிடையே அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் மற்றும் மேலாண்மைப் பள்ளிகளில் இருந்தும், விரிவுரை வழங்க இவருக்கு அழைப்புகள் வருகின்றன. அவர் ஒரு ஆடியோ கேசட் நிறுவனத்திற்கு விற்ற அவரது ஊக்கமளிக்கும் உரைகளில் ஒன்று: மீட் தி நம்பர் 1, பி தி நம்பர் 1 (Meet the number 1, Be the number 1)
பரத் பரேக்கின் பரபரப்பான அலுவலகத்தில் 35 பேர் பணியாற்றுகின்றனர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறனர்.
மிக முக்கியமான சேவை ஆயுள் காப்பீடு ஆகும். அவர் தனது மனைவி பபிதாவுடன் நாக்பூரில் உள்ள உயரடுக்கு பகுதியில் உள்ள ஒரு விசாலமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அவரது மனைவியும் இன்சூரன்ஸ் ஏஜென்ட். 18 மணிநேர வேலைக்குப் பிறகு ஓய்வெடுக்க நீண்ட தூரம் வாகனத்தில் செல்ல வேண்டியிருப்பதால், அவர் சமீபத்தில் ஒரு நவீன எஸ்யூவியை வாங்கினார்.
பாரத் மிக வேகமாக வளர்ந்தார். அவர் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார், அதில் அவர் தனது வாழ்க்கை வரலாற்றில், எவ்வாறு சேமிப்பது என்பது குறித்த ஆலோசனைகளும் செய்துள்ளார்.
அவர் தனது புத்தகத்தில், வால்ட் டிஸ்னி கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில், "உங்களால் கனவு காண முடிந்தால், அதை உங்களால் நிறைவேற்றவும் முடியும்,”என்கிறார்.
18 வயதிலிருந்தே பாலிசிகளை விற்கத் தொடங்கினார்
மில் தொழிலாளி குடும்பத்தின் மகனான பாரத்பாய்க்கு சிறுவயதில் கனவு காணக்கூட வாய்ப்பு இல்லை. அவர் ஒரு அறை வாடகை வீட்டில் வளர்க்கப்பட்டவர். அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்துள்ளார்.
பாரத்பாய் தனது 18வது வயதில் காலைக் கல்லூரி முடித்தவுடன் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கத் தொடங்கினார்.
வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை சந்திக்க செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.. ஒரு வாடிக்கையாளர் கிடைத்தவுடன், அதற்கான ஆவணப்பணிகளை அவரின் சகோதரிகள் பார்ப்பார்கள்.
ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் போது முதல் வாடிக்கையாளரிடம், "உங்கள் காரின் டயர் பஞ்சர் ஆகும்போது, மாற்று டயர் இருப்பதை போன்றது தான் ஆயுள் காப்பீடு" என்பன போன்ற பழமொழிகள் மற்றும் வாசகங்களுடன் பாலிசியை விற்று வந்தார்.
இதன் மூலம் மனமுவந்து சிலர் பாலிசியை எடுத்தனர், அதில் இருந்து பாரத்பாய்க்கு முதல்முறையாக ரூ.100 கமிஷன் கிடைத்தது.
ஆறு மாதங்களில் பாரத்பாய் ஆறு பாலிசிகளை விற்றார், அந்த ஆண்டின் இறுதியில் சுமார் 15000 ரூபாய் கமிஷன் பெற்றார்.
இந்த சம்பாத்தியத்தில் வீட்டை நடத்தினார். "இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பது மிகவும் கடினம். நான் பலமுறை அழுதுகொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறேன்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு நற்பெயர் இல்லை, மேலும் மக்களின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இழிவு செய்யப்படுவார்கள். இருந்த போதிலும் பாரத்பாய் தோற்கவில்லை.
உயிருடன் இருப்பவருடன் தொடர்புகொள்வதை விட மரணத்திற்குப் பிறகு தொடர்புகொள்வது எளிதானது என்று அவர் உணர்ந்தார்.
அவரது வாடிக்கையாளர்கள் தெருவோர வியாபாரிகள் முதல் வணிகர்கள் வரை உள்ளனர். அவர்களின் நட்பு கொள்வதிலும், நெட்வொர்க்கை உருவாக்குவதிலும் வல்லவர் இவர்.
தொழில்நுட்பத்துடன் கடின உழைப்பும்
ஐந்து தலைமுறை மில் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த மோஹ்தாவுக்கு, 16 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம். அவரது தாயாருக்கு 88 வயது. இளைய பேரக்குழந்தைக்கு ஒரு வயது.
அவர் பாரத்பாயிடம் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளார். "ஆயுள் காப்பீடு அவசியம், ஆனால் இன்னும் தேவைப்படுவது நீங்கள் நம்பக்கூடிய ஒரு முகவர் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் மோஹ்தா.
அவர் வெற்றியடைந்ததற்குக் காரணம், அவர் காலத்தை விட முன்னேறி தேவைக்கேற்ப செலவழித்ததாகவும் பாரத்பாய் நம்புகிறார்.
அவர் சிங்கப்பூரில் இருந்து தோஷிபா லேப்டாப்பை ஆர்டர் செய்து 1995 முதல் கணினிமயமாக்கப்பட்ட பதிவுகளை வைத்திருக்கத் தொடங்கினார்.
வெளிநாடு சென்று நிதி பயிற்சியும் எடுத்தார். மொபைல் போன்கள் இந்தியாவிற்கு வந்தன, அழைப்புக் கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும் உடனடியாக அவற்றை எடுத்துச் சென்றார்.
அவர் தனது ஊழியர்களுக்கு பேஜர்களைக் கொடுத்தார். ஒரு நல்ல அலுவலகத்தையும் செய்திருந்தார், கிளவுட் பேஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் மற்றும் அவர்களின் சொந்த பயன்பாடுகளையும் உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இரங்கல் பக்கத்தில் தங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளை தங்கள் வாடிக்கையாளர்களாக ஈர்ப்பதற்காக அவர்கள் குழந்தைகளுக்கான திட்டங்களை ஸ்பான்சர் செய்கிறார்கள்.
அகால மரணம் ஏற்பட்டால் பாதுகாப்பதற்காகவும், வரி செலுத்தும் போது நிவாரணத்திற்காகவும் காப்பீடு செய்து வருகின்றனர்.
இப்போது, எல்ஐசியின் சொந்த சேர்க்கையால், "மியூச்சுவல் ஃபண்டுகள், வங்கி வைப்புக்கள் மற்றும் சிறு சேமிப்புகள்" ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டி நிலவுகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது டிஜிட்டல் உலகில் தங்கள் இருப்பை வலுப்படுத்த விரும்புகின்றன, இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் காப்பீட்டை எளிதாக வாங்க முடியும்.
இது, பாரத்பாய் பரேக் போன்ற ஏஜெண்டின் வருவாயைக் குறைக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சம்மேளனத்தின் தலைவர் சிங்கர்பு ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "இல்லை அது முடியாது. முகவர்கள் இருப்பார்கள். காப்பீட்டிற்கு மக்கள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும், மேலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்."என்றார்.
வெற்றியின் 'ரகசியம்'
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நவீனமயமாக்கலை வரவேற்கும் பரேக், "இது வணிகத்தை அதிகரிக்கும், மேலும் எங்களுக்கு வேலை கிடைக்கும்" என்கிறார்.
இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, இறப்புகளைப் பதிவுசெய்த பிறகு, பரேக்கும் அவரது ஊழியர்களும் தொடர்ந்து வாழ்பவர்களைக் கொண்டாடுகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்புவதும் வழக்கம்.
"தினமும் நிறைய பேருக்கு பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துக்களை அனுப்ப வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
நாங்கள் சந்தித்தபோது கூட அவர் தனது தொலைபேசியைக் காட்டி, அதன் முன்னால் உள்ள இந்த பெயர்கள், முகவரிகள் மற்றும் எண்கள் மற்றும் அவற்றின் நிகழ்வுகளைப் பாருங்கள் என்று கூறினார். இன்று 60 வாடிக்கையாளர்களின் பிறந்தநாள் மற்றும் 20 திருமண நாள். அவர் கூறுகிறார், "நான் அனைவருக்கும் வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறேன், சிலருக்கு பரிசுகளை அனுப்ப விரும்புகிறேன்."
40,00 இன்சூரன்ஸ் செய்தவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் எப்படி நினைவில் கொள்கிறார் என்று அவரிடம் கேட்டேன்.
"அதுதான் ரகசியம்" என்று பரத் பரேக் மனம் நிறைந்த சிரிப்புடன் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்