விண்வெளியில் 'ஆக்சிஜன் கலன்' வெடித்த பிறகும் 3 வீரர்களை நாசா மீட்டது எப்படி?

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 11.04.1970 அன்று அப்போலோ 13 விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருந்தது. இதற்கு முன்பே, அப்போலோ - 11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் பஸ் ஆல்ட்ரின் ஆகியோரும் அப்போலோ 12 மூலம் சார்லஸ் பீட் கன்ராடு, ஆலன் எல். பீன் , ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் ஆகியோர் நிலவுக்கு சென்றிருந்தனர்.

அந்த வகையில் நிலவில் தரையிறங்கும் மூன்றாவது குழுவாக சரித்திரத்தில் இடம்பிடிப்பதில் அப்போலோ 13ல் பயணித்த குழுவினர் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்தனர்.

இந்த குழுவில் கேப்டன் ஜிம் லோவெல் மற்றும் அவரது சக விண்வெளி வீரர்களான ஜான் 'ஜாக்' ஸ்விகர்ட் , ஃப்ரெட் ஹைஸ் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இதில், கேப்டன் ஜிம் லோவேல் 1968ஆம் ஆண்டே மனிதனுடன் நிலவை சுற்றிவந்த நாசாவின் முதல் திட்டமான அப்போலோ 8ல் பயணம் செய்தவர். அப்போலோ 13 பயணம் மூலம் நிலவில் காலடி வைக்கும் அந்த தருணத்துக்காக அவர் காத்திருந்தார்.

ஆனால், அப்பல்லோ 13 திட்டமிட்டபடி வெற்றி பெறவில்லை. அப்போலோ13 திட்டத்தில் நடந்தது என்ன? அதன் மூலம் நாசா கற்றுகொண்ட பாடம் என்ன?

ஆக்சிஜன் கலன் வெடித்தது

நிலாவுக்கு சென்று அங்கு சில தகவல்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

அதற்கு ஓராண்டு முன்புதான் அப்போலோ 11இல் பயணித்த குழுவின நிலவில் முதன்முதலாக தரையிறங்கியிருந்தனர். நிலவை நோக்கிய பயணம் சிக்கலானதாக கருதப்படும் சூழலில் அப்பல்லோ 11-ன் வெற்றி பயணம் நாசாவுக்கு உத்வேகத்தை அளித்தது.

ஏப்ரல் 11, 1970 அன்று பிற்பகல் 2.13 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) மூன்று விண்வெளி வீரர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தங்கள் விண்கலத்தில் ஏறினர். நிலவில் பயணத்தவர்களின் பட்டியலில் தாங்களும் இணைய வேண்டும் என்று மூவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனினும், பயணம் தொடங்கிய 56 மணி நேரங்களில் அவர்களை ஆபத்து சூழ்ந்தது. அப்போது நிலாவுக்கு அருகே விண்கலம் சென்று கொண்டிருந்தது.

நிலாவில் தரையிறங்க வேண்டிய சூழலில், விண்கலத்தில் இருந்த ஆக்சிஜன் கலன் திடீரென வெடித்தது. ஆக்சிஜன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன.

நிலாவுக்குச் செல்லும் திட்டங்களில் நிலாவைச் சுற்றிவரும் ஒரு விண்கலமும் தரையிறங்கும் ஒரு விண்கலமும் இணைத்து அனுப்பப்படும்.

ஆக்சிஜன் கலன் உடைந்ததால் தரையிறங்கும் விண்கலம் துண்டிக்கப் பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படித் துண்டிக்கும்போது மேலும் அது விண்கலத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் இருந்தது.

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் இது குறித்து பேசும்போது, “அப்போலோ11, அப்போலோ12ஐ தொடர்ந்து அப்போலோ13-ம் நிலவில் தரையிறங்கியிருக்க வேண்டியது. நிலவுக்கு அருகே செல்லும்போது சில கருவிகளை பரிசோதனை செய்வார்கள். அப்படி செய்யும்போது ஒரு ஆக்சிஜன் கலம் வெடித்துவிட்டது. இதனால், அவர்களின் எரிபொருளும் வீண் ஆகிவிட்டது. "

"அப்போலோ10-ல் இந்த ஆக்சிஜன் கலத்தை பொருத்தி இருந்தார்கள். அதை வெளியே எடுக்கும்போது தவறுதலாக கீழே விழுந்துவிட்டது. அதையடுத்து அப்போலோ10-ல் வேறு ஆக்சிஜன் கலத்தை வைத்து அனுப்பி விட்டார்கள். இதை சரிசெய்யாமலேயே அப்பல்லோ 13-ல் வைத்து அனுப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டது” என்றார்.

இதையடுத்து அவர்கள் உயிர் பிழைப்பார்களா என்ற பரபரப்பு நிலவியதாகவும் த.வி. வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

விண்வெளி குழுவினர் தப்பித்தது எப்படி?

சூழலின் தீவிரத்தை உணர்ந்த குழுவினர் உடனடியாக பூமியில் இருந்த திட்டக்குழுவினரை தொடர்புகொண்டனர். அப்போது ஜேக் ஸ்விகர்ட் புகழ்பெற்ற, 'ஹூஸ்டன், எங்களுக்கு ஒரு பிரச்சனை' என்ற வாக்கியத்தை கூறினார்.

ஆக்சிஜன் கலன் வெடித்ததால், தாங்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் போகும் இக்ட்டான நிலையை அவர்கள் எதிர்கொண்டனர்.

பொதுவாக, சுவாசத்திற்காக மட்டும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவது இல்லை. விண்கலத்தின் அனைத்து மின்சாரம் சார்ந்த தேவைகளுக்கும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, அவர்கள் உடனடியாக தங்களுக்குள்ளும் திட்டக்கட்டுப்பாட்டு குழுவினருடனும் கலந்துபேசி உடனடியாக ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, விண்கலத்தில் இருந்த அனைத்து மின்சாதனங்களையும் அவர்கள் அணைத்து வைத்தனர்.

இதன்மூலம், முடிந்தளவு ஆஜ்சிஜனை அவர்களால் சேமிக்க முடிந்தது. அதே நேரத்தில், அனைத்து ஹீட்டர்களும் அணைக்கப்பட்டதால் தீவிர குளிரை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தண்ணீரை எப்படி மிச்சப்படுத்துவது, தங்களிடம் உள்ள உணவை எப்படி நீண்ட காலம் வைத்திருப்பது என்பது குறித்தும் திட்டமிட வேண்டிய அவசியம் மூவருக்கும் ஏற்பட்டது. எனவே, தங்களிடம் இருந்த தண்ணீரில் 5ல் ஒரு பங்கை மட்டுமே அவர்கள் குடித்தனர். மேலும், உயிர்வாழ உதவுவதற்காக ஹாட் டாக், `ஈரமான` உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றை சாப்பிட்டனர்.

தரையிறங்கியது எப்படி?

உயிருடன் இருக்க, விண்வெளி வீரர்கள் அப்போலோ லூனார் மாட்யூல் என்ற சிறிய கலனுக்கு மாற வேண்டியிருந்தது. மேலும், அதை தங்கள் உயிர் காக்கும் பொருளாக மாற்றி பூமியை நோக்கி திரும்பினர்.

லூனார் மாட்யூல் நிலவின் மேற்பரப்பில் இருந்து கீழே சென்றுவிட்டு பின் மீண்டும் மேற்பரப்பில் இருக்கும் கட்டளைப் பெட்டகத்துக்கு திரும்பும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், 2 பேரை குறுகிய தூரம் மட்டுமே ஏற்றிச்செல்லும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கும்போது, மூன்றுபேர் விண்வெளியில் இருந்து பூமிக்கு அதில் திரும்புவது என்பது சவாலான ஒன்று. இது குழுவினருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

பூமியின் உள்ள குழுவினருடன் அவர்கள் தொடர்புகொண்டு பேசியபோது, அவர்களின் பாராசூட்டுகள் வேலை செய்யுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால், எப்படியோ அவர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி தென் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு குழு தயார் நிலையில் இருந்தது.

அப்பல்லோ 13 திட்டம் வெற்றியா? தோல்வியா?

ஒருவகையில் பார்க்கும்போது இத்திட்டம் தோல்விதான். நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப வேண்டும் என்ற தனது இலக்கை அது அடையவில்லை.

ஆனால், ஒருசிலர் நாசாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று இதனை குறிப்பிடுகின்றனர். ஏனெனில், சேதமடைந்த விண்கலத்தில் இருந்து மூன்று பேருமே பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். விண்கலத்தில் பயணித்த கேப்டன் ஜிம் லோவெல் உட்பட பலர் இந்த நிகழ்வு தொடர்பாக புத்தகங்களை எழுதியுள்ளனர்.

இந்த நிகழ்வை வைத்து டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் திரைப்படமும் வெளியானது.

அப்பல்லோ 13: நாசா கற்றுக்கொண்ட பாடம் என்ன?

அப்போலோ 13 விண்கலம் தொடர்பாக ஏற்பட்ட இந்த அனுபவத்தில் இருந்து பல பாடங்களை நாசா கற்றுக்கொண்டது. அதே தவறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய ஏராளமான வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன. அனைத்து விண்கலங்களிலும் கூடுதல் ஆக்சிஜன் கலன்கள் சேர்க்கப்பட்டது, மேலும் தேவைப்பட்டால் மட்டுமே குழுவினருக்கு வழங்கும் வகையில் அவை தனிமைப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: