You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 3: பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான இடத்தைத் தேடும் விக்ரம் லேண்டர்
இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படிப்படியாக தரையிறங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் பாதுகாப்பாகத் இறங்குவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பான புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அனுப்பிக் கொண்டிருக்கிறது.
தற்போது நிலாவில் பாறைகள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து, பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் சிக்னல்களை பூமியில் இருந்து விஞ்ஞானிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC) எனப்படும் ஆபத்தான இடத்தைத் தவிர்க்க உதவும் கேமராவால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தனது வயிற்றில் பிரக்யான் என்ற உலவு ஊர்தியை சுமந்து சென்றிருக்கும் விக்ரம் லேண்டர் வரும் 23-ஆம் தேதியன்று மாலையில் நிலாவில் தரையிறங்க உள்ளது.
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலாவில் விழுந்து நொறுங்கிய நிலையில், சந்திரயானின் பயணம் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலாப் பயணம், தரையிறங்குவதற்கான சுற்றுப்பாதையில் சென்றபோது பிரச்னைகளைச் சந்தித்தது. பின்னர் அது தரையில் விழுந்து நொறுங்கிவிட்டதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.
“இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலாவின் தரையைத் மென்மையாகத் தொட இருக்கிறது. ஆபத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமராவின் துணையுடன் தரையிறங்கும் பகுதியை படங்களாக எடுத்து அனுப்புகிறது. தொடவிருக்கிறது, தரையிறங்கும் பகுதியை வரைபடமாக்கி படங்களை எடுத்து வருகிறது.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.
“இந்த கேமரா மூலம் அனுப்பப்படும் கருப்பு-வெள்ளை படங்கள் "பாறைகள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாத் பாதுகாப்பான தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய" உதவும் என்று இஸ்ரோ மேலும் கூறியிருக்கிறது.
நிலாவின் தூரப் பக்கம் அல்லது தென் துருவம் என்பது பூமியிலிருந்து விலகியிருக்கும் பக்கமாகும். இதை "நிலாவின் இருண்ட பக்கம்" என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் இது பற்றி அதிகம் அறியப்படவில்லை. அங்கு தரையிறங்குவது ஒரு சவாலான விவகாரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் தென் துருவத்தில் உறைந்த நீர் அல்லது விலைமதிப்பற்ற தாதுக்கள் இங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுவதால், இந்த பகுதியை ஆய்வு செய்வதில் நிறைய ஆர்வம் உள்ளது.
நிலாவைச் சுற்றி 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் தற்போது விக்ரம் லேண்டர் சுற்றிக் கொண்டிருக்கிறது என ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரோ அறிவித்தது.
சந்திரயான்-3 வெற்றி பெற்றால், சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையையப் பெறும். அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலாவில் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்
இந்தியாவின் நிலா ஆய்வுத் திட்டத்தில் சந்திரயான் -3 மூன்றாவது பகுதியாகும். 2008 இல் நாட்டின் முதல் நிலா பயணத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலாவது சந்திரயான திட்டம் நிலாவின் வறண்ட மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்ததுடன், பகல் நேரத்தில் சந்திரனுக்கு வளிமண்டலம் இருப்பதையும் உறுதிப்படுத்தியது.
சுமார் 601 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், ஏற்கெனவே சந்திரயான்-2-இல் ஏற்பட்ட கோளாறுகளை துல்லியமாகச் சரி செய்திருப்பதாக இஸ்ரோ கூறுகிறது.
சந்திரயான் -2 விபத்தின் தரவுகளை கவனமாக ஆய்வு செய்து புதிய உத்திகளை வகுத்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்குவதற்கான புதிய உத்தி என்ன?
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள்.
இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.
கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போது தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது.
ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். விக்ரம் லேண்டரும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் 14 நாள்கள் அங்கிருந்தபடியே ஆய்வுகளைச் செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்