விசாகப்பட்டினத்தில் திடீரென உள்வாங்கிய கடல் 2 நாளாகியும் இயல்பு நிலைக்கு வராதது ஏன்?ஆபத்தின் அறிகுறியா?

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?
படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள்
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

ஏன் பாறைகள் அதிகமாக தென்படுகின்றன என்று நல்லபாபுவிடம் கேட்டபோது, ​​“கடற்கரை உள்வாங்கியதால், நான்கு நாட்களாக இப்படித்தான் இருக்கிறது” என்றார்.

ஆர்.கே கடற்கரையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடல் உள்வாங்கியது ஏன்? சூறாவளியும், சுனாமியும் இல்லாத சூழலிலும் கடல் உள்வாங்குவதற்கான காரணங்கள் என்ன?

செய்தி சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் பிபிசி குழுவினர் ஆர்.கே கடற்கரைக்கு சென்ற போது கடல் சாதாரணமாக இருந்தது. கடற்கரையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்தும் கடற்கரையில் எந்த மாற்றமும் இல்லை.

"கடலோர அலைகள், அலைகளின் உயரம் மற்றும் வேகம் ஆகியவற்றில் இதுபோன்ற மாற்றங்களை நாம் கவனிக்க விரும்பினால், குறைந்தபட்சம் 6 மணிநேரம் கடலைக் கவனித்தால் மட்டுமே வித்தியாசத்தைக் கண்டறிய முடியும்" என்று, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கடலியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பி. சீதாராமுலு ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"கடல் ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்வாங்குகிறது. ஆனால், அது நாம் கவனிக்கும் அளவில் இல்லை. ஆனால், இப்போது கடல் உள்வாங்கியதை எல்லோராலும் கவனிக்க முடிகிறது. அதிக பாறைகள் வெளியே தெரிந்தன” என்றார்.

“கடந்த வாரத்தில் இருந்து கடல் உள்வாங்கியதாகத் தெரிகிறது. சில நாட்களாக இப்படி நடப்பது புதிது. ஒரு கட்டத்தில் 200 மீட்டர் வரை கடல் உள்வாங்கியிருக்கலாம். ஆனால், 400 மீட்டர் என்பது தவறான செய்தி” என்று சீதாராமுலு ரெட்டி பிபிசியிடம் விளக்கினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன காரணம்?

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?

தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் (கிழக்கு கடற்கரை) தலைமை விஞ்ஞானி வி.வி.எஸ்.எஸ்.சர்மா கூறுகையில், “சுனாமி, சூறாவளி, கடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், கடல் நீரோட்டங்கள் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு மாறுதல் ஆகிய காரணங்களால் கடல் உள்வாங்குகிறது” என கூறினார்.

ஆனால், தற்போது விசாகப்பட்டினம் கடற்கரையில் அப்படியொரு நிலை இல்லை. ஓய்வுபெற்ற பேராசிரியர் சீதாராமுலு ரெட்டி, என்னென்ன வானிலை நிகழ்வுகளில் கடல் உள்வாங்குகிறது என்பதை விளக்கினார்.

“ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடல் காற்று அதிகமாக இருக்கும். இந்த காற்று கடற்கரைக்கு இணையாக வலுவாக இருக்கும்போது, ​​அவை கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரை இடமாற்றம் செய்து கடற்கரையிலிருந்து மீண்டும் கொண்டு செல்கின்றன. இது உடனடியாக நிகழலாம், அல்லது பல மணிநேரங்கள், நாட்கள் கூட ஆகலாம். இது உள்ளூர் வானிலையைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.

தற்போது தங்களிடம் உள்ள `இன்காயிஸ் விண்ட் டேட்டா' (கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) எனப்படும் காற்றின் வேகம் குறித்த தகவலின்படி, விசாகப்பட்டினத்தில் கடல் மேற்பரப்பில் வீசும் காற்றால்தான் கடல் உள்வாங்கியது என்றார்.

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?

பட மூலாதாரம், BSR Reddy

படக்குறிப்பு, காற்று தரவுகள்

கடற்கரையில் குவியும் மக்கள்

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?
படக்குறிப்பு, கடல் உள்வாங்கி, பாறைகள் வெளியே தெரிவதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கடல் உள்வாங்கி, பாறைகள் வெளியே தெரிவதால், கடற்கரைக்கு வருபவர்கள் அவற்றில் ஏறி புகைப்படம் எடுக்க ஆர்வமாக உள்ளனர்.

இதையடுத்து, புகைப்பட கலைஞர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

“இப்போதெல்லாம் செல்போன்கள், தனிநபர் கேமராக்கள் புழக்கம் அதிகமாகி விட்டதால் கடற்கரையில் எங்களிடம் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை. கடல் உள்வாங்கியதன் மூலம் அதிகளவில் பாறைகள் தென்பட்டிருப்பதால், இங்கு நல்ல புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மக்கள் எங்களிடம் வருகின்றனர். அதனால்தான் நாங்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறோம்" என்று கடற்கரை புகைப்படக் கலைஞர் ரவி பிபிசியிடம் கூறினார்.

“நான் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கடற்கரைக்கு வருவேன். ஆனால், சமீப காலமாக, இதுபோன்ற பாறைகள், பாசி படிந்து இருப்பதையோ, கடல் உள்வாங்குவதையோ நான் பார்த்ததே இல்லை,'' என்றார், கடற்கரைக்கு வந்திருந்த நீரஜா.

மற்ற கடற்கரைகளில் என்ன நிலை?

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?
படக்குறிப்பு, பி. சீதாராமுலு ரெட்டி, ஓய்வு பெற்ற பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம்

விசாகப்பட்டினம் கடற்கரையில் மட்டும் தான் கடல் உள்வாங்கியதா அல்லது மற்ற கரைகளிலும் இது தென்பட்டதா என, ஓய்வுபெற்ற பேராசிரியர் சீதாராமுலு ரெட்டியிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

அவர் கூறுகையில், “விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரை, கோக் பார்க், ருஷிகொண்டா, பீமிலி என ஆங்காங்கே கடல் உள்வாங்கியதை காணலாம். ஆனால், மற்ற கடலோர பகுதிகளில் இப்படி இருக்க வாய்ப்பில்லை. பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற சூழல்களில் மட்டுமே, மிகவும் தீவிரமாக கடலோரப் பகுதிகளில் கடல் உள்வாங்குகிறது. விசாகப்பட்டினத்தில் கடல் உள்வாங்கியதற்கு உள்ளூர் வானிலையே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது” என்றார்.

மீனவர்கள் கூறுவது என்ன?

விசாகப்பட்டினம்: கடல் உள்வாங்குவது ஏன்? அதன் ஆபத்துகள் என்ன?
படக்குறிப்பு, மீனவர் நல்லபாபு

கடல் உள்வாங்கியது குறித்து வழக்கமாக அங்குள்ள மீனவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடல் உள்வாங்குவது உண்மைதான் என மீனவர்கள் நல்லபாபு, தனராஜூ ஆகியோர் தெரிவித்தனர்.

கடல் எப்போதெல்லாம் உள்வாங்கும் என, நல்லபாபுவிடம் கேட்டபோது, ​​”சமீபத்தில் இப்படி நடந்ததில்லை. கடந்த சிவராத்திரியின் போது கடல் இப்படி உள்வாங்கியதை நான் பார்த்தேன். தற்போது மீண்டும் பார்க்கிறேன்” என்று கூறினார்.

400 மீட்டர் கடல் உள்வாங்கியது உண்மையா என்று தனராஜிடம் கேட்டபோது, ​​அவ்வளவு தூரம் உள்வாங்கவில்லை என்றார்.

முன்னெச்சரிக்கைகள் தேவை

எட்டு மீட்டர் புதைகுழியால் உள்ளிழுக்கப்பட்ட ஆந்திர பெண் : மீட்க முடியாமல் திணறும் மலேசிய அரசாங்கம்
படக்குறிப்பு, விசாகா கடற்கரை

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விசாகப்பட்டினம் வருபவர்கள் அலைகளின் தீவிரம் மற்றும் கடற்கரையின் நிலைமைகளை கண்காணிக்க வேண்டும் அல்லது அதுகுறித்த தகவல்களை அறிய வேண்டும் என்று சீதாராமலு ரெட்டி கூறினார்.

“கரையிலிருந்து கடல் வெகுதூரமாக இருக்கிறது என நினைத்து, கடலை நோக்கி செல்லும்போது, உள்வாங்கிய கடல் மீண்டும் வரும்போது விபத்துகள் ஏற்படும். கடல் உள்வாங்கியதால் வெளிப்படும் பாறைகள் பாசியால் மூடப்பட்டிருக்கும். அங்கு புகைப்படம் எடுக்கும் போது, வழுக்கி விழும் அபாயம் உள்ளது,'' என்றார்.

பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி அதிகாரிகள் கடற்கரையில் காவலர்களை நியமித்துள்ளனர். பார்வையாளர்கள் உள்ளே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)