You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் முடிவுகளை முன்வைத்து பங்குச் சந்தையில் முறைகேடா? ராகுல் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
முன்கூட்டியே பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதியன்று லாபம் பெறலாம் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் கூறியதன் மூலம், பெரும் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி. அவரது குற்றச்சாட்டின் பின்னணி என்ன? ஒரு விளக்கம்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு என்ன?
கடந்த வியாழக்கிழமையன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை வீழ்ந்ததில் பிரதமர் நரேந்திரமோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை சரிந்ததில், முதலீட்டாளர்களின் 30 லட்சம் கோடி ரூபாய் சந்தையிலிருந்து காணாமல்போனதாக அவர் குற்றம்சாட்டினார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவரது குற்றச்சாட்டின் சாரம் இதுதான்.
"மே மாதத்தில் ஒரு மிகப் பெரிய வர்த்தகக் குழுமத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் பேட்டியளித்தனர். அந்தப் பேட்டியின்போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் ஜூன் 4ஆம் தேதி (தேர்தல் முடிவுகள் வெளிவரும் தினம்) பங்குச் சந்தை உயரும். அதனால், நல்ல லாபத்தைப் பெற முடியும் என்று கூறினர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. அதை நம்பி பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். ஆனால், ஜூன் நான்காம் தேதி பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் லாபம் சம்பாதித்தனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் ஐந்து கோடி இந்திய குடும்பங்களின் பணம் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பாக முடிந்தது. எதற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதுபோன்ற ஒரு முதலீட்டு ஆலோசனையை வழங்கினர்? பங்குச் சந்தையில் லாபம் ஈட்டிய வெளிநாட்டு நிறுவனங்கள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பா.ஜ.கவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்".
பேட்டியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொன்னது என்ன?
மே 19ஆம் தேதி பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோதி, மக்களவையில் பா.ஜ.க. வரலாறு காணாத இடங்களைப் பிடிக்கும் என்றும் அன்று புதிய உச்சத்தைத் தொடும் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல, மே மாதம் 13ஆம் தேதி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என எதிர்பார்ப்பதால், அதற்கு முன்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பா.ஜ.கவின் பதில் என்ன?
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என பா.ஜ.க. புறம்தள்ளியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பா.ஜ.கவின் மூத்த தலைவர் பியூஷ் கோயல், பா.ஜ.கவின் ஆட்சிக் காலத்தில்தான் பங்குச் சந்தை வெகுவாக வளர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கூறும்போது, "ஏப்ரல், மே மாதங்களில் சந்தை உயர்ந்தபோது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றார்கள். அதனைப் பயன்படுத்தி இந்திய முதலீட்டாளர்கள் அந்தப் பங்குகளை வாங்கினார்கள். கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வின் பலன்களை இந்திய முதலீட்டாளர்களே அனுபவித்தனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்த தினத்தன்று பங்குகளை நல்ல விலைக்கு விற்ற இந்திய முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொண்டனர்." என்றார்.
மேலும், "சுமார் 6,850 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக விலையில் வாங்கினார்கள் என்றும் அதனை விற்று லாபம் பார்த்தது இந்திய முதலீட்டாளர்கள் என்றும் அப்படி முதலீடு செய்தவர்கள் ஜூன் 4ஆம் தேதி குறைந்த விலைக்கு விற்றபோது, இந்திய முதலீட்டாளர்கள் அதனை வாங்கினார்கள் என்றும் தெரிவித்தார். ஆகவே இந்திய முதலீட்டாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார் பியூஷ் கோயல்.
ஜூன் 3, 4-ஆம் தேதிகளில் பங்குச் சந்தைகளில் என்ன நடந்தது?
ஜூன் 1ஆம் தேதி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின. அன்று சனிக்கிழமை என்பதால் ஜூன் 3ஆம் தேதிதான் அதற்கடுத்த வர்த்தக நாளாக அமைந்தது. ஜூன் 3ஆம் தேதி பங்குச் சந்தைகள் வெகுவாக உயர்ந்தன. சென்செக்ஸ் குறியீட்டு எண் 3.39 சதவீதம் அதாவது 2,507 புள்ளிகள் உயர்ந்து, 76,468ஐத் தொட்டது. நிஃப்டி 3.25 சதவீதம் உயர்ந்தது.
ஜூன் 4ஆம் தேதி வாக்குகளின் எண்ணிக்கை துவங்கிய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காத நிலையில், பங்குச் சந்தை கீழே விழ ஆரம்பித்தது. சென்செக்ஸ் 5.7 சதவீதம் அதாவது 4,389 புள்ளிகளை இழந்தது. நிஃப்டி 5.9 சதவீத புள்ளிகளை இழந்தது. கடந்த ஆறு நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவு வெளிவரும் தினங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதுதான் மிக மோசமான இழப்பைச் சந்தித்த தினமாக அமைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு ஜூன் 3ஆம் தேதி ரூ. 425.92 லட்சம் கோடியாக இருந்தது ஜூன் 4ஆம் தேதி ரூ. 394.84 லட்சம் கோடியாக சரிந்தது. ஆகவே, கிட்டத்தட்ட 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்த நிகழ்வில் யார் இழப்பைச் சந்தித்திருப்பார்கள்?
நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த ஏற்ற இறக்கத்தில் இழப்பைச் சந்தித்திருக்க மாட்டார்கள். அதாவது ஒரு முதலீடாக பங்குகளை வாங்கி, சில மாதங்களுக்குப் பிறகோ, சில ஆண்டுகளுக்குப் பிறகோ நல்ல விலைக்கு விற்க நினைத்து முதலீடு செய்திருப்பவர்கள் இந்த நாட்களில் இழப்பைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், தினம்தோறும் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இழப்பைச் சந்தித்திருக்கக்கூடும். பா.ஜ.க. வெற்றிபெற்றால் ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தைகள் உயரும் என்ற கணிப்பில் சந்தையில் யூக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்திருப்பார்கள்.
"மே 31ஆம் தேதி அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வருவதற்கு முன்பு சந்தை இயங்கிய தினத்தில் பங்குகளில் முதலீடு செய்தவர்கள், ஜூன் 7ஆம் தேதிவரை சந்தையில் இருந்தால், அவர்களுக்கு எந்த இழப்பும் இருக்காது." என்கிறார் பங்குச் சந்தை நிபுணரான விவேக் கார்வார்.
"அதேபோல சந்தையில் ஓராண்டிற்கு முன்பாக முதலீடு செய்தவர்கள், தற்போது நல்ல லாபத்தைச் சந்தித்திருப்பார்கள். ஜூன் 7ஆம் தேதி மதியம் பங்குச் சந்தை 76500 புள்ளிகளைத் தொட்டது. ஜூன் மூன்றாம் தேதி சந்தை நல்ல உயரத்தில் இருந்தபோது முதலீடுசெய்தவர்கள்கூட, இப்போதுவரை காத்திருந்தால் லாபம் அடைந்திருக்க முடியும்." என்கிறார் கார்வார்.
"ஆனால், Futures and options போன்ற யூக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஜூன் 4ஆம் தேதி பெரும் இழப்பைச் சந்தித்திருப்பார்கள். மேலும், ஜூன் 4ஆம் தேதி சந்தை வீழ்ச்சி அடைந்தபோது முதலீடு செய்தவர்கள் இன்று நல்ல லாபத்தைச் சந்தித்து இருப்பார்கள்" என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)