You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்மலா சீதாராமன், எல். முருகனுக்கு மோதி அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு - இது அண்ணாமலைக்கு உணர்த்தும் செய்தி என்ன?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய பிரதமராக நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற யூகங்கள் தவறாகியுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து மோதியின் முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த எல்.முருகனுக்கு இந்த அமைச்சரவையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெயசங்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம், தமிழக பாஜகவுக்கும் அதன் தலைமைக்கும் என்ன செய்தியை வழங்குகின்றது?
2014, 2019 தேர்தல்களைப் போல பெரும்பான்மையை இந்த தேர்தலில் பாஜக எட்டவில்லை. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றுள்ளார். மூன்றாவது முறையாக மோதி பிரதமராக பதவியேற்றபோது அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில், 30 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோதி பிரதமரானாலும், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியை சந்தித்தது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகை ராதிகா சரத்குமார் என நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கினாலும், பாஜக நேரடியாக போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில், 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த தேர்தலில் 11.24 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் இரட்டை இலக்கத்தைத் தொட்டிருக்கிறது. முதன்முறையாக, பாஜகவின் வாக்கு சதவிகிதம் இரட்டை இலக்கத்தில் உயர்ந்துள்ளது.
நிர்மலா சீதாராமன், எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு
கடந்த தேர்தல்களிலும் பாஜக தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகனுக்கு இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
அதேபோன்று, மோதியின் தற்போதைய அமைச்சரவையிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே எழுந்த வண்ணம் இருந்தன.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தைக் கூட பெறவில்லையென்றாலும், வாக்கு சதவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதுகுறித்த செய்திகளும் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வலம் வரத்தொடங்கின. அண்ணாமலைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற செய்திகள் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகின.
ஆனால், மத்திய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, முந்தைய மோதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் படித்தவர். மோதி 1.0 அமைச்சரவையில் 2014 மே முதல் 2017 செப்டம்பர் வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பின்னர், 2017 முதல் இரண்டு ஆண்டுகள் ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்தார். 2019-2024 வரையிலான மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவி வகித்தார். 1970-71 வரை, பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி நிதித்துறையை தன் பொறுப்பில் வைத்திருந்தார். இதையடுத்து, அந்த துறையின் அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது பெண் என்ற பெயர் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்தது.
அதேபோன்று, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம், எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய அளவில் கவனம் பெற்ற அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பு ஜூலை, 2021-ம் ஆண்டு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பதவியேற்றதிலிருந்தே திமுக மீது தொடர்ச்சியாக விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பிவந்தார். தன்னுடைய அதிரடியான பேச்சுகள், நடவடிக்கைகளால் தேசியளவில் பாஜகவின் தென்னிந்திய முகமாக அண்ணாமலை அறியப்பட்டாலும், பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலையின் ‘வார் ரூம்’ செயல்படுவதாக பாஜகவிலிருந்த காயத்ரி ராகுராம் குற்றம் சாட்டினார். ஊடகங்களிடம் அவர் நடந்துகொள்ளும் போக்கு குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை நிறுத்தப்பட்டதிலிருந்து அந்த தொகுதி தேசியளவில் கவனம் பெற்றது. முக்கிய ஊடகங்கள் அத்தொகுதிக்கு வந்து அண்ணாமலையை பேட்டி கண்டன.
பாஜக வளர்ச்சிக்கு உதவுமா?
தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய முகமாக அறியப்படும் அண்ணாமலைக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம்.
“அண்ணாமலை தோற்றுவிட்டார் என்பதால் அமைச்சர் பதவி வழங்கி, மாநிலங்களவை பதவி தருவது கட்சிக்கு நெருக்கடியாக இருக்கும். வருங்காலத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.
கட்சியின் வளர்ச்சியில் இது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என கேட்டதற்கு, “சொந்த கட்சிக்காரர்களை வைத்து தலைவர்களை வீழ்த்துவது, அதன்மூலம், தனக்கான இமேஜை உயர்த்திக்கொள்வது என பல்வேறு வேலைகளை செய்துவருகிறார் அண்ணாமலை. தமிழக அரசியலில் இவையெல்லாம் அவருக்கு எதிர்மறையாக உள்ளன. எனினும், தமிழ்நாட்டிலிருந்து துடிப்பான அமைச்சர் வேண்டும் என தேசிய தலைமை நினைத்தால் எதிர்காலத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம்." என்றார்.
"நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழ்நாட்டின் அடையாளமாகக் கருத முடியாது. ஜெய்சங்கர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது டெல்லி. தமிழ்நாட்டில் அவருக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை. அவர் ஓர் முன்னாள் அரசு அதிகாரி. அதேபோன்று நிர்மலா சீதாராமன், தமிழ்நாடாக இருந்தாலும் அவர் ஆந்திராவின் மருமகள், பெங்களூருவில் தான் வசிக்கிறார். எல்.முருகன் தமிழ்நாட்டின் அடையாளம் தான். எனினும் துடிப்பானவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் கட்சியை தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாடு என்ன மாதிரியான மாநிலம் என்பதை பாஜக கடந்த 10 ஆண்டுகளில் புரிந்துகொண்டிருக்கும் எனக்கூறும் குபேந்திரன், கோவில், சாமி என்று பேசினால் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது என்பதை பாஜக உணர்ந்திருக்கும் என்கிறார்.
தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடாதது குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து கடந்த மார்ச் மாதம் பதிலளித்த நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை, என்றார்.
ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து கூறுகையில், “இதுகுறித்து விமர்சனங்கள் வரும். ஆனால், ஒரு கட்சிக்கு களத்தில் பணிகளை கவனிப்பவர்களும் வேண்டும். அறிவுஜீவியாக இருப்பவர்களும் வேண்டும். அதனால், நிர்மலா சீதாராமனுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றார்.
"எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம்"
மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறித்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், “ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், எல். முருகன் ஆகியோர், தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி. தமிழ்நாடு பாஜக, கட்சியை கிராமங்கள் வரை மிகவும் முனைப்பாக கொண்டு சென்றுள்ளது. மக்களிடமும் பாஜகவை நோக்கி எழுச்சி இருப்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அண்ணாமலை அமைச்சரானால் சந்தோஷம், இல்லையென்றால் மாநில தலைவராக இப்போது இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம். அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும்” என்றார்.
தமிழகத்தில் பாஜகவிலிருந்து எம்.பிக்கள் இல்லாதது வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “முந்தைய பாஜக அரசுகளிலும் தமிழ்நாட்டுக்கு அதிகமான திட்டங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு எம்.பிக்கள் இல்லை என்பதால் குறைவாக திட்டங்கள் வரும் என அர்த்தம் இல்லை” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)