'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி

பட மூலாதாரம், AskAnandSrinivasan
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்திருப்பது, மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்திருப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன். இந்த நிதிநிலை அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அவரின் பேட்டியிலிருந்து...
- கேள்வி: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்: முதலில் மத்திய அரசின் வருவாய்க்கும் மாநில அரசின் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு தனது வருவாயை எப்படி வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ள முடியும். எந்த வரியை வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ள முடியும்.
ஆனால், மாநில அரசிடம் இதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. மாநில அரசின் முக்கிய வரி வருவாயே, விற்பனை வரிதான். ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு, எல்லோரும் சேர்ந்துதான் அதனை உயர்த்துவதைப் பற்றி முடிவெடுக்க முடியும். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு கட்சியின் ஆதிக்கத்தால் அதில் பன்முகத் தன்மை கிடையாது.
தமிழ்நாடு அரசின் வரி வருவாயைப் பொறுத்தவரை, விற்பனை வரி, எரிபொருள் வரி, கலால் வரி, பத்திரப் பதிவு, வாகனப் பதிவு வரி ஆகியவற்றில் இருந்துதான் வருவாய் வருகிறது. இதில் விற்பனை வரி வருவாய்தான் முக்கியமானது என்பதால், மாநில நிதியமைச்சரைப் பொறுத்தவரை, எவ்வளவு நிதி கிடைக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அவருக்கு கூடுதல் நிதி வேண்டுமானால், புதிய வரிகளை விதிக்கும் வாய்ப்புக் குறைவு. அரசு என்பதில் வரி விதிக்கும் அதிகாரம்தான் முக்கியமானது. அது இங்கே முடக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசித்த நிதி நிலை அறிக்கைக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த நிதி நிலை அறிக்கைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. நிர்மலா சீதாராமன் எந்த எண்களையும் குறிப்பிடவில்லை. எதைக் கேட்டாலும் பின்னிணைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
ஆனால், மாநில நிதி நிலை அறிக்கையில் 20 கோடி ரூபாய் வரையுள்ள எல்லா செலவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் வெளிப்படையாக இருக்கிறார். நிர்மலா சீதாராமன் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப் போல பேசினார். இவர் ஒரு நிதியமைச்சரைப் போல பேசினார்.
இந்த நிதி நிலை அறிக்கையில் முக்கியமான விஷயம், காலை சிற்றுண்டித் திட்டத்தை 6,000 பள்ளிகளில் இருந்து முப்பதாயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வருவது இதனால் அதிகரிக்கும். சத்துக்குறைபாடும் இதனால் நீங்கும்.
அடுத்ததாக புதுமைப் பெண் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கல்லூரி செல்லும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அளித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், ஒரு குடும்பத்தையே படிக்க வைக்கிறீர்கள், ஒரு தலைமுறையையே படிக்க வைக்கிறீர்கள் என அர்த்தம். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பெரும்பாலான பெண்கள் முதல் தலைமுறை மாணவிகள்.
அதேபோல, வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மிக முக்கியமான திட்டம். காரணம், இது நோய்கள் வரும் முன்பே காக்கும் திட்டம். இந்தியாவில் எங்குமே இதுபோல வீட்டிலும் பணியிடத்திலும் உடல்நலத்தைப் பரிசோதிக்கும் திட்டம் அமலில் கிடையாது. ஸ்காண்டிநேவிய நாடுகளில் மட்டும் உள்ள திட்டம் இது. இதன் மூலம், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றை முன்பே கண்டுபிடித்துவிடலாம். விரைவாக சிகிச்சை அளிக்கலாம்.
மேலும், தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே எந்த அளவுக்கு மானியம் அளிக்கப்படுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்.
வருவாய் பற்றாக்குறை எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் சுமார் 60,000 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. அதனை முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருக்கிறார். மேலும் குறைப்பார் என எதிர்பார்க்கிறேன். வருவாய் பற்றாக்குறை மூன்றரை சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகச் சொல்லிவிட்டு அதைக் கொடுக்கவில்லை என்று கூறிவந்தார்கள். தற்போது அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு 7,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு என அறிவித்துள்ளனர். இந்த உதவி யாருக்கு தேவையோ, அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.
தமிழ்நாட்டில்தான் பொது விநியோகத் திட்டத்தில் அதிக அளவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரசை விமர்சிப்பவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஐந்து கிலோதான் வழங்குகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, மாதாமாதம் எரிவாயுவின் விலை உயரும் நிலையில், மாதம் ஒரு சிலிண்டரை அரசு இலவசமாக வழங்குவதாகவே நினைக்கிறேன். அவர்கள் மீது இருக்கும் சுமை குறையும்.

பட மூலாதாரம், Getty Images
- கேள்வி: இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தைப் பொறுத்தவரை, தகுதியானவர்களுக்கு என அறிவிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. முன்பு, இது போன்ற சமூக நலத் திட்டங்கள் எல்லோருக்குமானவையாக அறிவிக்கப்பட்டன.
பதில்: முன்பு விருப்பப்படி வரி விதிக்கும் அதிகாரம் இருந்தது. இப்போது அப்படி வரி விதிக்கும் அதிகாரம் கிடையாது. அந்த உரிமையை விட்டுதர முடியாது என ஜெயலலிதா சொன்னார். ஆனால், இவர்கள் அரசைக் காப்பாற்றுவதற்காக கையெழுத்திட்டார்கள். அப்படி உரிமையை விட்டுத்தந்தவர்கள் கேள்வி கேட்க முடியாது. ஒரு மாநில அரசின் முக்கிய வருவாய், விற்பனை வரிதான். அதனை ஏற்ற முடியாத நிலையில் வைத்துவிட்டு, கேள்வி கேட்கக்கூடாது. யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டுமே அளிப்பதில் தவறில்லை.
- கேள்வி: GST இல்லாமல் மத்திய அரசிடமிருந்து பெரும் நிதியின் அளவு 2014 உடன் ஒப்பிட்டால், தற்போது மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதாகவும் அதன் மதிப்பு இந்த ஆண்டு 24,000 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இது 28 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்குமென்றும் சொல்லியிருக்கிறார். இது எப்படி நடக்கிறது?
பதில்: மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கும் தொகையைக் குறைத்துக்கொண்டே வருகிறது. அதனால்தான் இது நடக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் இருந்து அதிக வரி கட்டப்படுகிறது. ஆனால், திரும்பி வருவது இங்குதான் குறைவு.
இதுபோக வடமாநிலத்தவருக்கு வேலை கொடுப்பதும் தென் மாநிலங்களாகத்தான் இருக்கின்றன. வடமாநிலத்தவர் இங்கு வரலாம். பணியாற்றலாம். இந்தியா ஒரே நாடு. ஆனால், வட மாநிலங்கள் முன்னேறவில்லை என பணத்தை இங்கே இருந்து எடுத்து அங்கே கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகக் கொடுத்தும் முன்னேறவில்லையென்றால் என்ன செய்வது?
இந்தப் பணத்தை தென் மாநிலங்களுக்குக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக செய்யலாமே? அவர்களால் வேலை வாய்ப்பு அளிக்க முடியவில்லை, ஒழுங்காக ஆட்சி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தென் மாநிலங்களின் பணத்தை தென் மாநிலங்களுக்கே அளித்தால், வட மாநிலத்தவருக்கு இன்னும் சிறப்பான வசதிகளைச் செய்யலாமே.
பல வட மாநிலத்தவர் இங்கேயே குடியிருக்க ஆரம்பித்துவிட்டார்கள். வரவேற்கலாம். ஆனால், பணத்தை மட்டும் ஏன் தொடர்ந்து அங்கே செலுத்தவேண்டும்?
- கேள்வி: வருவாய் பற்றாக்குறையை சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறார். இது எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கும்?
பதில்: மிக முக்கியம். இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும். அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டி ஆகியவைதான் அரசின் செலவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் பற்றாக்குறையைக் குறைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், கூடுதல் கடன் வாங்கி, அதற்கான எதிர்காலத் தலைமுறை வட்டியைக் கட்ட வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், TNDIPR
- கேள்வி: தரவுகளின் அடிப்படையில் திட்டமிட்ட நோக்கங்களுக்கும் தகுதியான பயனாளிகளுக்கும் மட்டுமே பணத்தைச் செலவிடவேண்டும் என இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எல்லோருக்குமான சமூக நலத் திட்டங்கள் போன்ற வழக்கமான பாதையிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லையா?
பதில்: அப்படி விலகுவது சரிதான். கடந்த பத்தாண்டுகளில் எந்த முக்கியமான திட்டமும் மத்திய அரசால் தமிழகத்திற்கு தரப்படவில்லை. ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்? இன்னும் கட்டவில்லை. சென்னை மிகவும் வளர்ந்துவிட்டது. ஏன் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் போக்குவரத்து இல்லை? அதைச் செய்து தரலாமே?
அந்த நிலையில், மாநில அரசு என்ன செய்ய முடியும்? திட்டமிட்டுத்தான் செலவழிக்க முடியும்.
- கேள்வி: மாநில அரசு இந்த ஆண்டும் பெரிய தொகையைக் கடன் வாங்குகிறது. அது சரியா?
பதில்: வேறு வழியே கிடையாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கடன் தொகையைப் பொறுத்தவரை, அந்தக் கடன் தொகை மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் எனப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் கடன் இருக்கக்கூடாது. வருவாயை மீறி கடன் வாங்கினால்தான் சிக்கல். இப்போது தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள்தான் கடன் இருக்கிறது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் முதல்முறையாக மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போல மிகத் திறமையான, அந்தத் துறை பற்றிய அறிவுடைய ஒருவர் நிதியமைச்சராகியுள்ளார். அதனால்தான் அவர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திட்டம் எனப் பேசுகிறார்.
நிர்மலா சீதாராமன் பேச்சையும் இவரது பேச்சையும் இவரது பேச்சையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அதில் என்ன புள்ளிவிவரம், தகவல்கள் இருந்தன, இதில் என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.
மத்திய அரசு ரத்தத்தை உறிகிறது. இந்த பட்ஜெட்டில் அதுபோல ஒரு அம்சமும் கிடையாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












