தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

பட மூலாதாரம், TNDIPRNEWS
தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால் இந்த பட்ஜெட் வெகுவாக கவனம் பெற்றது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அவையில் நிதியமைச்சர் பேசத் தொடங்கியதும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்
பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிய கட்டடங்கள் கட்டவும் ரூ.7,000 கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ரூ.2,000 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறை, கழிப்பறை என ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் 1 முதல் 3ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் கணித அறிவு பெறுவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம், வரும் நிதியாண்டில் ரூ. 110 கோடி செலவில் 4ஆம் மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும் பராமரிக்கவும் கோரிக்கைகள் வந்தன. எனவே ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது, ரூ.500 கோடி செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்.
மதுரையில் 2 லட்சம் சதுர அடியில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் நூலகத்தில் முதல் கட்டமாக கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், மருத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் 3,50,000 நூல்கள் இடம்பெறும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
தென் தமிழகத்தின் அறிவாலயாகத் திகழவுள்ள இந்த நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயருடன் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும் முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500இல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு கடன் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்த நிதியமைச்சர், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்காக 39 ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் பெரியார் பெயரில் காட்டுயிர் சரணாலயம் அமைக்கப்படும்.

பட மூலாதாரம், TNDIPR
இலங்கைத் தமிழர் நலன்
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
"இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7, 469 புதிய வீடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது.
இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்டுவதற்கு வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்."
தமிழ் வளர்ச்சி, பண்பாடு
தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்குப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு 'தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ் மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.
நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும் இந்தப் பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், "உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்," என்று அறிவித்தார் நிதியமைச்சர்.

பட மூலாதாரம், TNDIPR
மேம்பாலம், மெட்ரோ
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழிச் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்கு மேல் கட்டப்படும் இந்த மேம்பாலம் சாதனையாக அமையும் என்றும் இந்த மேம்பாலம் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
சென்னை - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடம் டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று அறிவித்தவர், "மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவையில் அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் சாலை வரை மெட்ரோ ரயில் வழித்தடம் செயல்படுத்தப்படும்," என்றும் தனது உரையில் குறிப்பிடார்.
பெண்கள்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர் புதிய தொழில்களைத் தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TNDIPR
விலங்குகள் நலன்
விலங்குகளின் நலனைப் பேணிக் காக்க தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை
தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பலத்த கரவொலி எழுப்பினர்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலரிப்பைத் தடுத்து, கடலோரப் பன்மயத்தை அதிகரித்து, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மாசுபாட்டைக் குறைக்க "தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்" ரூ.2,000 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
கோவை மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சி மேற்கொள்ள அனைத்து மக்கள் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்.

பட மூலாதாரம், TNDIPR
சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு
சென்னை தீவுத்தடலை மேம்படுத்த ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் இயற்கை தரம் வாய்ந்த நகர பொது சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்படும்.
சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ஒரு லட்சம் பேருக்குக் கூடுதலாக வழங்கப்படும். இதனால், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும்.
அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்பு நிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலம் வாங்குவோரின் சுமையைக் குறைக்க பதிவு கட்டணம் நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாகக் குறைக்கப்படும்.
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, இன்றைய பட்ஜெட் முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்.
"வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்"
பட்ஜெட் உரையின்போது "கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேறும்போது சுமார் 62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்துள்ளோம்," என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"வரிகளை உயர்த்தியதுதான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு"
பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இதையெல்லாம் கண்டித்தும், பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய அமல் படுத்தவில்லை என்பதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்," என்று தெரிவித்தார்.
மேலும், "மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்தபோதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியதுதான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு," எனக் கூறினார்.
அதோடு, "அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் என அறிவித்துள்ளனர். எந்த அடிப்படையில் அதற்கான தகுதியைத் தேர்வு செய்கிறார்கள்?" என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












