கமலா ஹாரிஸ் - ஒபாமா நட்பும் 20 ஆண்டு அரசியல் பயணமும் - 6 முக்கிய தருணங்கள்

    • எழுதியவர், கோர்டினே சுப்ரமணியன்
    • பதவி, பிபிசி செய்திகள்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோவில் நடைபெற்று வரும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டு (DNC) மேடையில் செவ்வாய்க்கிழமை அன்று முக்கிய உரையை ஆற்றினார். தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த தன்னுடைய அறிமுக மாநாட்டிற்குப் பிறகு 20 வருடங்கள் கழித்து இந்த மாநாட்டில் அவர் முக்கிய உரையை ஆற்றினார்.

ஜனநாயகக் கட்சியின் மிகவும் பிரபலமான பிரமுகர்களில் ஒருவருக்கு இது ஒரு மிக முக்கியமான தருணமாகும்.

தன்னுடைய வெற்றியின் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் வெள்ளை இனத்தை சாராத பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என்பது எத்தகைய வரலாற்றுத் தன்மையை கொண்டுள்ளது என்று அவர் பேசினார். அதே நேரத்தில், தன்னுடைய பதவி காலத்தில் துணை அதிபராக பதவியாற்றிய, தன்னுடைய எழுச்சிக்கு காரணமாக அமைந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும் தன்னுடைய மரியாதையை செலுத்தினார்.

ஒபாமா அமெரிக்க செனட் உறுப்பினராக முயற்சியை தொடங்கியது முதலே ஒபாமா (63), மற்றும் கமலா ஹாரிஸ் (59) இருவரின் அரசியல் வாழ்க்கையும் அவ்வப்போது குறுக்கிட்டே வந்துள்ளன. இருவரும் தத்தம் அரசியல் பயணத்தில் படிப்படியாக வளர்ந்து வந்த சூழலில் 2004ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில் சந்தித்துக் கொண்டனர்.

ஆரம்பத்தில் ஒபாமா ஆதரவாளராக இருந்த கமலா ஹாரிஸ் பின்னர் தாமே அதிபராக வேண்டி தனக்கான பிரசாரத்தை முன்னெடுத்தார். 2008ம் ஆண்டு ஒபாமா வெற்றியை உறுதி செய்ய கமலா ஹாரிஸ் உதவினார். கமலா ஹாரிஸின் பரப்புரையில் கட்சி உற்சாகம் அடைந்திருக்கும் நிலையில் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் தங்களது ஆதரவை கமலாவுக்கு வழங்கி அவரை வெள்ளை மாளிகைக்கு அனுப்ப உதவ முன்வந்துள்ளனர்.

"கமலா பற்றியும், கமலாவின் தேர்தல் பங்களிப்புகள் குறித்தும் பேசி ஒபாமாவால் மக்களை உற்சாகப்படுத்த இயலும் என்று நான் நினைக்கிறேன். அதைத்தான் இன்று செய்யப் போகிறார்" என்று கமலா ஹாரிஸின் பரப்புரை ஆலோசகர் டேவிட் ப்ளூஃப் கூறியுள்ளார். அவர் ஒபாமாவின் 2008ம் ஆண்டு தேர்தலில் பரப்புரை ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

இந்த இரண்டு தலைவர்களின் 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 6 முக்கிய தருணங்களை நாம் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2007ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக தயாரான பாரக் ஒபாமா

பிப்ரவரி 2007ம் ஆண்டு இல்லினாய்ஸ் தலைநகரான ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள பழைய மாகாண தலைமைச் செயலகத்தின் படிகளில் நின்று கொண்டு, வெள்ளை மாளிகை தான் இலக்கு என்று கூறினார் ஒபாமா. அப்போது ஒரு ஜூனியர் செனட்டராக இருந்த அவர் 15 ஆயிரம் மக்கள் கூடியிருந்த இடத்தில் இதனை தெரிவித்தார். அந்த 15 ஆயிரம் நபர்களில் ஒருவராக நின்று கொண்டிருந்தார் கமலா ஹாரிஸ். அவர் அப்போது சான் ஃப்ரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

2008ம் ஆண்டு அவர் அயோவா கூட்டத்திற்கு முன்பு, பாரக் ஒபாமாவின் தேர்தல் பரப்புரைக்காக வீடுவீடாக சென்று நிதி திரட்டினார் கமலா ஹாரிஸ். பிறகு ஒபாமாவின் கலிபோர்னியா மாகாண பிரசார இணைத் தலைவராக பணியாற்றினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அட்டர்னி ஜெனரல் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்ட போது ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டினார். பிபிஎஸ் செய்திகளின் நீண்டகால தொகுப்பாளரான க்வென் இஃபில், கமலா ஹாரிஸை "பெண் பராக் ஒபாமா" என்று அன்புடன் அழைத்தார். அந்த போட்டி மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது.

அந்த தேர்தல் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இழப்புகளைச் சந்தித்த ஒபாமா, 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றார். அங்கே ஹாரிஸை என் அன்புக்குரிய நண்பர் என்று கூறினார்.

"எல்லோரும் கமலாவுக்கு துணை நின்று சரியானதை செய்ய வேண்டும்," என்று அவர் அந்த கூட்டத்தில் பேசினார். கமலா அந்த தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரசியல் பயணத்தை துவங்கினார்.

2012ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியது என்ன?

2012ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிட்ட போது ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேச கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கமலா ஹாரிஸ் ஏற்கனவே கலிபோர்னியாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தனக்கென ஒரு பெயரைப் பெற்றிருந்தார். சான் ஃபிரான்சிஸ்கோவின் முதல் பெண் மாவட்ட வழக்கறிஞர் ஆவார். வெள்ளை இனத்தை சாராத ஒருவர் அந்த பொறுப்பை வகித்ததும் அதுவே முதல் முறை. அந்த மாகாணத்தின் முதன்மை வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் தெற்காசிய அமெரிக்கருமாக கமலா ஹாரிஸ் இருந்தார்.

ஆனால் அட்டர்னி ஜெனரலாக, அவர் அரசு அட்டர்னி ஜெனரலுக்கும், நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கும் இடையேயான நிதி தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் உறுதியாக நின்றார். அதற்காக அதிகம் பாராட்டப்பட்ட கமலா ஹாரிஸ் வீட்டு உரிமையாளர்களுக்காக 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் பெற்றுத் தந்தார்.

அவர் தனது சாதனையைப் பற்றி பேசினார். தன்னுடைய சொந்த கதையை கூறினார். மேலே கூறிய வீட்டுக்கடன் நெருக்கடியின் போது மக்களின் பக்கம் ஒபாமா நின்றதைக் குறிப்பிட்டு பாராட்டினார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னியைத் தாக்கி பேசிய கமலா ஹாரிஸ், ரோம்னியை 'வால் ஸ்ட்ரீட்டின் கூட்டாளி' என்று குறிப்பிட்டார்.

நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தன்னுடைய உரையில் கூறியதை 2024ம் ஆண்டு பரப்புரையிலும் பயன்படுத்தினார். "ஒபாமா, உழைக்கும் குடும்பங்களுக்காக போராடுவார். பொருளாதாரத்தை நிலை நிறுத்த போராடுவார். என்னுடைய குடும்பம் பெற்றிருக்கும் அனைத்து வாய்ப்பு மற்றும் வசதிகளை ஒவ்வொரு அமெரிக்கருக்கும் வழங்க அவர் போராடுவார்," என்று அந்த மாநாட்டில் பேசினார்.

தேசிய ஜனநாயகவாதிகள், தரகர்கள் மற்றும் முக்கிய நன்கொடையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உத்தரவாதம் அளித்து பில் கிளிண்டன் பேசிய சில மணி நேரத்திற்கு முன்பு கமலா ஹாரிஸ் இதனை பேசியிருந்தார்.

சிறந்த தோற்றம் கொண்ட அட்டர்னி ஜெனரல் என அழைத்த பாரக் ஒபாமா

கலிபோர்னிய அரசியலில் வளர்ந்து வந்த கமலா ஹாரிஸுக்கு ஒபாமா அமைதியாக ஆதரவை வழங்கி வந்தாலும் கூட, 2013ம் ஆண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை வெளியிட்டார் ஒபாமா. "இந்த நாட்டில் மிகவும் சிறந்த தோற்றத்தை கொண்ட அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ்," என்று அவர் குறிப்பிட்டார்.

"நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கமலா முதலில் ஒரு புத்திசாலி. அர்ப்பணிப்பு கொண்டவர். கடினமானவர். சட்டத்தை நிர்வகிக்கும் எவரிடமும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் அவரிடம் உள்ளது. அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நபர் அவர்,” என்று ஒபாமா கூறினார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய அவர்,"இதுவரை இந்த நாடு கண்ட அட்டர்னி ஜெனரல்களில் மிகவும் சிறப்பான தோற்றத்தைக் கொண்ட நபராக கமலா ஹாரிஸ் இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

ஆனால் சில மணி நேரத்தில், கமலா ஹாரிஸிடம் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதற்காக அழைத்தார் ஒபாமா.

"அவர்கள் பழைய நண்பர்கள் மற்றும் நல்ல நண்பர்கள் மற்றும் கமலாவின் சாதனைகளை அவர் எந்த வகையிலும் குறைக்க விரும்பவில்லை" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

2016 - கமலா ஹாரிஸை செனட்டிற்கு ஒபாமா பரிந்துரை

பாரக் ஒபாமா இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்த போது கலிஃபோர்னியா செனட் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கினார். ஓய்வு பெறும் செனட்டர் பார்பரா பாக்ஸருக்கு மாற்றாக களம் இறங்கும் முயற்சியில் இருந்தார் கமலா ஹாரிஸ்.

அந்த ஆண்டு ஜூலை மாதம் ஒபாமாவும் அப்போது துணை அதிபராக இருந்த ஜோ பைடனும் தங்களின் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு அதிகாரப்பூர்வமாக அளித்தனர். கமலா ஹாரிஸ் அப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், சக கட்சியைச் சேர்ந்தவருமான லொரேட்டா சான்செஸூடன் போட்டியிட்டார். கலிபோர்னியாவில், கட்சி பேதமின்றி அதிக வாக்குகளை பெறும் முதலிரு வேட்பாளர்கள் தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

"தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கலிபோர்னியாவின் மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியவர் கமலா ஹாரிஸ். அதே அணுகுமுறையை தான் அவர் அமெரிக்க செனட் சபையிலும் கையாளுவார்," என்று கமலா ஹாரிஸின் பிரசாரத்தின் போது ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னுடைய மகன் பூ பைடன் மூலமாகவே தனக்கு கமலாவை தெரியும் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார். டெலாவரின் அட்டர்னி ஜெனரலாக இருந்த போது இருவரும் நண்பர்களானார்கள்.

அந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். அமெரிக்க செனட் சபையில் இடம் பெற்ற இரண்டாவது கறுப்பர் கமலா ஹாரிஸ்.

2020 வெற்றியும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரும்

2020ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான தன்னுடைய முதல் பிரசாரத்தை கமலா ஹாரிஸ் அவருடைய சொந்த ஊரான கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் துவங்கினார். 20 ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் திரண்டனர். ஜனநாயகக் கட்சியின் மற்ற வேட்பாளர்களைப் போலவே அவரும் தன்னுடைய வேட்புமனுவை ஒபாமாவிடம் கொடுத்தார்.

ஆனால், ஒபாமாவோ, தனது துணை அதிபர் ஜோ பைடனும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்ததால், கட்சியே அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்வு செய்யும் வரை இந்த அரசியல் நகர்வுகளில் இருந்து விலகியிருக்க விரும்பினார்.

அதிபர் வேட்பாளர் ஆவதற்கான கமலா ஹாரிஸின் பிரசாரம் ஓராண்டுக்குள்ளாகவே முடிவுக்கு வந்தது. துணை அதிபர் பதவியை கமலாவுக்கு வழங்கினார் பைடன். பள்ளிகளில் இனம் சார்ந்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக முன்னாள் துணை அதிபர் பேசியிருந்தது குறித்து பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டன. ஆனாலும், கமலா ஹாரிஸை துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்ய ஒபாமா ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.

தனது முன்னாள் துணை அதிபர் தனக்கான துணை அதிபரை சிறப்பாக தேர்வு செய்தார் என்றார் ஒபாமா.

"ஒரு துணை அதிபரை தேர்ந்தெடுப்பது ஒரு அதிபர் எடுக்கும் முதல் முக்கியமான முடிவு. நீங்கள் ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, ​​கடினமான பிரச்னைகளை எடை போட்டு, நீங்கள் எடுக்கும் தேர்வு முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். அப்போது நீங்கள் எடுக்கும் முடிவு சரியா என்பதை தீர்மானிக்க ஒருவர் உங்களுக்கு தேவை," என்று ஒபாமா அந்த நேரத்தில் ஓர் அறிக்கையில் கூறினார் .

2020ஆம் ஆண்டில் இருந்து ஒபாமா, ஹாரிஸுடன் தொடர்ந்து பேசி வருகிறார். ஆலோசனை வழங்குகிறார். தேவைப்படும் சமயங்களில் சேர்ந்து ஒரு குழுவாக இருவரும் செயல்படுகின்றனர்.

பைடன் பின்வாங்கிய பிறகு ஒபாமா ஆதரவு

மிட்செல் மற்றும் பாரக் ஒபாமா இருவரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதற்கு சில நாட்கள் காத்திருந்தனர். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லை என்பதும், கட்சியின் தேர்வும் கமலா ஹாரிஸ் தான் என்பது உறுதியாகும் வரை அவர்கள் காத்திருந்தனர். தங்களின் அதிகாரப்பூர்வ ஆதரவை அவர்கள் வீடியோ மூலம் வெளியிட்டனர்.

“நாங்கள் ஒருவரையொருவர் 20 வருடங்களாக அறிவோம். நீங்கள் வகித்த ஒவ்வொரு பதவியிலும் நீங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்,” என்று ஒபாமா கமலாவிடம் தொலைபேசியில் பேசும் போது குறிப்பிட்டார்.

"அந்த கடின உழைப்பு அங்கீகரிக்கப்படுவதைப் பார்ப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. உங்களை அதிபராக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம் என்பதைத்தான் உங்களுக்கும், டக் எம்ஹாப்புக்கும் (கமலாவின் கணவர்)தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அவர்கள் கூறினர்.

கடந்த சில மாதங்களாக, கொள்கை, ஆலோசனை, நிதி திரட்டுதல் என அனைத்து வகையிலும் கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு நல்கியுள்ளார். இருவரும் பல வகையிலும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க ஒபாமாவின் பழைய பிரசார உறுப்பினர்களையும் நண்பர்களையும் நம்பியுள்ளார். ஒபாமாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய எரிக் ஹோல்டர், துணை அதிபருக்கான இறுதிப்பட்டியலை சரிபார்க்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். அதே நேரத்தில் ப்ளூஃப் இப்போது கமலாவின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுகிறார்.

கமலா ஹாரிஸ் பிரசாரம் ஒபாமாவின் இதர உதவியாளர்களை பயன்படுத்தியுள்ளது. ஜெனிஃபர் ஓ'மல்லி டில்லியன் அவரது பிரசாரக் குழு தலைவராக பணியாற்றுகிறார். மூத்த ஆலோசகர் ஸ்டெபானி கட்டரும் கமலாவின் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஒபாமாவின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெனிஃபர் பால்மீரியும் ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப்பிற்கு உதவுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)