You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிபர் வேட்பாளராகும் முன்பே இஸ்ரேலிடம் கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ்- காரணம் என்ன?
இஸ்ரேல் பிரதமருடன் ''வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான'' என அவர் அழைக்கும் பேச்சுவார்த்தையை நடத்தியதாக அமெரிக்கத் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படுபவருமான கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேஸ்- காஸா விவகாரத்தில் பைடனை விட கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ், காஸாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தனது "கவலைகளை" தெளிவுபடுத்தியதாகக் கூறினார். மேலும் நெதன்யாகுவிடம், இஸ்ரேல் தன்னை எவ்வாறு பாதுகாத்தது என்பதும் முக்கியமானது என்று கூறியதாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு, "இந்தப் போர் முடிவடையும் நேரம் இது," என்று கமலா ஹாரிஸ் கூறினார்.
'இரு நாடுகள் தீர்வு'க்கான அவசியத்தையும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு முன்னதாக, அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடனை நெதன்யாகு சந்தித்தார்.
அமெரிக்கக் காங்கிரஸ் சபையில், நெதன்யாகு உரையை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
ஹமாஸுக்கு எதிராக "முழு வெற்றி'க்கு உறுதி பூண்டுள்ளதாக காங்கிரஸ் சபையில் நெதன்யாகு கூறினார். அவர் உரை நிகழ்த்தியபோது ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவாளர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இஸ்ரேல்- காஸா போர் ஒன்பது மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெதன்யாகு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.
பைடன் இஸ்ரேலுக்கு அளித்த உறுதியான ஆதரவு பல இடதுசாரி ஆர்வலர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் ஜனநாயகக் கட்சியினருக்கு அவர்களின் ஆதரவு தேவைப்படலாம்.
அதிபர் தேர்தலில் பைடனுக்கு மாற்று வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் கருதப்படும் நிலையில், இஸ்ரேல் குறித்து அவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றி பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
நெதன்யாகு உடனான சுமார் 40 நிமிடங்கள் சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேல் மீது தனக்கு "அசையாத அர்ப்பணிப்பு" இருப்பதாகவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் கூறினார்.
அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு மோதல் தொடங்கியதாக கூறிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல் நாட்டின் கணக்கின்படி இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 39 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
''இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. அது எப்படி தற்காத்துக்கொள்கிறது என்பதும் முக்கியமானது,” என்று ஹாரிஸ் கூறினார். மேலும் காஸாவில் உள்ள "மோசமான மனிதாபிமான நிலைமை" குறித்து கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.
"துன்பத்தை பார்த்து உணர்வற்றவர்களாக இருக்க நாம் நம்மை அனுமதிக்க முடியாது. நான் அமைதியாக இருக்க மாட்டேன்," என்று அவர் கூறினார்.
''போரை முடிவுக்குக் கொண்டுவரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவோம். பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டு வருவோம்'' என்றார் அவர்.
குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, நெதன்யாகு வெள்ளிக்கிழமையன்று சந்திக்க உள்ளார்.
முன்னதாக பைடனை சந்தித்தபோது, அவரை 40 ஆண்டுகளாகத் தெரியும் என்று பிரதமர் நெதன்யாகு கூறினார்.
அடுத்த சில மாதங்களில் ''பெரிய பிரச்சனைகள்" குறித்து பைடனுடம் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)