You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜனநாயகக் கட்சி மாநாடு: ‘அமெரிக்காவுக்கு என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன்’- கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன்
- எழுதியவர், அந்தோனி ஸர்ச்சர்
- பதவி, பிபிசி நிருபர், வட அமெரிக்கா
அதிபர் பதவிக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் ஒரு உணர்ச்சிகரமான சொற்பொழிவை இந்த ஆண்டு கொடுப்போம் என அமெரிக்க அதிபர் பைடன் நினைத்திருக்க மாட்டார். அதுவும் இந்த தேர்தல் சூழலில்.
ஆனால் ஒருவரது அதிர்ஷ்டம் எவ்வளவு விரைவாக மாறும் என்பதை யாராவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள பைடனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையே சான்றாகும்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்துவரும், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் (நேற்று), மக்கள் நிறைந்த அரங்கத்தில் உரையாற்றினார் பைடன்.
தனது ஆட்சி காலத்தின் நடவடிக்கைகளை முழுவதுமாக நியாயப்படுத்தி அவர் பேசினார். 2020 மற்றும் 2024 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் தான் எழுப்பிய பிரச்னைகள் குறித்தும், ஜுலை மாதத்தில் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்தும் பேசினார்.
"உங்களில் பலரைப் போலவே, நானும் என் இதயத்தையும் ஆன்மாவையும் இந்த தேசத்திற்காக கொடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர் நிகழ்த்திய உரையின் முடிவில் "நன்றி, ஜோ" போன்ற பைடனுக்கு ஆதரவான குரல்கள் அரங்கம் முழுவதும் ஒலித்தது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'கமலா மிகவும் தைரியமான பெண்'
தனது மனைவி ஜில் மற்றும் மகள் ஆஷ்லே ஆகியோரது அறிமுக உரைக்குப் பிறகு, மேடையேறினார் பைடன்.
“அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் எடுத்த முடிவு என்பது அவர் தீவிரமாக ஆராய்ந்து எடுத்த முடிவு, " என்று ஜில் அந்த அறிமுக உரையில் தெரிவித்தார்.
மேடையேறிய பைடன், தனது மகள் ஆஷ்லியை ஆரத்தழுவி, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்ததைக் காண முடிந்தது.
பிறகு அதிபர் பைடன் தனது நெஞ்சின் மீது கைவைத்து, நிமிர்ந்து நின்று, ஒரு புன்னகையுடன் கூட்டத்தினரைப் பார்த்தபோது அவர்கள் ஆரவாரம் செய்தனர்.
அவரது உரையில் பெரும்பாலும், அமெரிக்க வரலாற்றில் தனக்கான இடத்தைப் பற்றி பேசினாலும் கூட, துணை அதிபரான கமலா ஹாரிஸை புகழ்வதிலும் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட்டார்.
"கமலாவை எனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததே, நான் அதிபர் வேட்பாளர் ஆனவுடன் எடுத்த முதல் முடிவாகும். அதுமட்டுமல்லாது இது எனது அரசியல் பயணத்தில் நான் எடுத்த சிறந்த முடிவும் அதுதான்" என்று அவர் கூறினார்.
"கமலா மிகவும் தைரியமான, அனுபவம் வாய்ந்த பெண். அவரிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உள்ளது." என்றும் அவர் கூறினார்.
'பைடனை போன்ற இரக்கக்குணம் கொண்ட மனிதரை சந்தித்ததே இல்லை'
நான்கு வாரங்களுக்கு முன்பு அவரது ஓவல் அலுவலகத்தில் வைத்து பேசியது போலல்லாமல், ஒரு புதிய தலைமுறையிடம் பொறுப்பை அளிப்பது குறித்து அவர் நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் சொல்ல வந்த செய்தி தெளிவாகப் புரிந்தது.
அதிபர் தனது கருத்துகளைக் கூறி முடித்த பிறகு, பைடனையும் அவரது மனைவி ஜில்லையும் கட்டித் தழுவ, ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் மேடைக்கு வந்தனர்.
"உங்கள் மீது பேரன்பு உள்ளது" என்று துணை அதிபர் கமலா, பைடனிடம் கூறுவதைக் காண முடிந்தது.
பைடன் தனது உரையின் முடிவில், கணிசமான பகுதியை கமலா ஹாரிஸைப் புகழ்வதற்காகச் செலவிட்டார். இருப்பினும், பிற பேச்சாளர்கள் தற்போதைய அதிபர் பைடனைப் பாராட்டியே அதிகம் பேசினார்கள்.
பின்னர் மேடையில் பேச கமலா ஹாரிஸ் முன்வந்தபோது, மக்களின் பெரும் உற்சாகம், அரங்கம் முழுவதும் எதிரொலித்த கைத்தட்டல்களில் வெளிப்பட்டது.
"ஜோ, உங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைமைக்கும், எங்கள் தேசத்திற்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும், நீங்கள் தொடர்ந்து செய்யப்போகும் அனைத்திற்கும் நன்றி," என்று கூறினார்.
"நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்றும் கூறினார் கமலா ஹாரிஸ்.
பின்னர், டெலாவேர் மாநில செனட்டரும் பைடனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கிறிஸ் கூன்ஸ், அதிபரைப் பற்றி பாராட்டிப் பேசினார்.
"ஜோ பைடனை போன்ற ஒரு இரக்கக்குணம் கொண்ட மனிதரை நான் சந்தித்ததே இல்லை," என்று அவர் கூறினார்.
"தனிப்பட்ட இழப்புகளைக் கடந்து, நம்பிக்கையோடு பலரின் எதிர்காலத்திற்காக இவ்வளவு விஷயங்களைச் செய்த ஒரு மனிதனை நான் ஒருபோதும் அறிந்ததில்லை." என்றார்.
பைடனின் அரசியல் வாழ்க்கை
அதற்கு முன்னதாக மாலையில் மேடையில் பேசிய ஹிலாரி கிளிண்டன், "வெள்ளை மாளிகை இழந்த கண்ணியம், நேர்மை மற்றும் ஆற்றலை மீண்டும் கொண்டு வந்தவர் ஜோ பைடன்" என்று கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பாக 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர் ஹிலாரி கிளிண்டன். அவர் மேடையேறியபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.
''அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை தன்னால் படைக்க முடியவில்லை, ஆனால் அதிபராக கமலா ஹாரிஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது அது நிறைவேறும்’' என்று அவர் கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு கிடைத்த வரவேற்பும் அதே அளவில், பெரும் உற்சாகத்துடன் இருந்தது.
சிகாகோவில் கூடியிருந்த ஜனநாயகக் கட்சியினர் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ஆனால் பைடனுக்கு அவர்கள் வெளிப்படுத்திய உற்சாக அலை என்பது, தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிப்பதன் அடையாளமாக இருக்கலாம் அல்லது அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கான ஒரு பிரியாவிடையாகவும் இருக்கலாம்.
பைடனின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1972இல். அமெரிக்க அரசின் அவையான காங்கிரசுக்கு அவர் தனது 29வது வயதில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை பராக் ஒபாமா இந்த மாநாட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். புதன்கிழமை, பில் கிளிண்டன் உரையாற்றுவார். இருவரும், தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முன்னாள் அதிபர்கள்.
பைடனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அவரால் ஒருமுறை மட்டுமே அமெரிக்க அதிபராக இருக்க முடிந்தது. அந்த பதவிக்காலத்தை குறித்து விளக்கவும் நியாயப்படுத்தவும் அவர் இந்த உரையில் கவனம் செலுத்தினார்.
அடுத்த ஐந்து மாதங்களில் முக்கிய தேசிய நிகழ்வு ஏதும் இல்லை என்றால், கணிசமான அமெரிக்க தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன் அவர் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கும்.
உரையின் முடிவில், ‘அமெரிக்காவின் கீதம்’ என்ற பாடலில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டினார்.
"எனது பணி நிறைவடையும்போது, நான் ஒன்றை மனதில் நினைவுபடுத்திக் கொள்கிறேன், அமெரிக்கா, அமெரிக்கா, நான் உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கினேன்," என்று அவர் கூறினார்.
மீண்டும் அரங்கம் மக்களின் கைத்தட்டல்களால் நிறைந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இத்தகைய ஒரு ஜனநாயகக் கட்சி மாநாட்டையும், கட்சியினரின் பாராட்டுகளையும், மக்களின் உற்சாகத்தையும் அவரால் காண முடியவில்லை.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பைடனுக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தருணமாக இது இருந்தது.
பைடன் தனது உரையை முடித்ததும், அரங்கை விட்டு வெளியேறி, ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் விடுமுறைக்காக கலிபோர்னியாவிற்குச் சென்றார். சிகாகோவில் நடக்கும் இந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்காக அவர் ஒதுக்கியது சில மணிநேரங்கள் மட்டுமே, நாட்கள் அல்ல.
அதேபோல, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் அதிபராக மேலும் சில ஆண்டுகள் இருப்போம் என்ற ஆசை அவர் மனதில் இருந்தபோதிலும், இப்போது அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சில மாதங்களே.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)