You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவை ஆத்திரமூட்டுமா?
பிரதமர் நரேந்திர மோதி கடந்த மாதம் தான் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு பிரதமர் மோதி மேற்கொண்ட முதல் ரஷ்ய பயணமாக இது அமைந்தது.
மாஸ்கோ சென்றடைந்தவுடன் பிரதமர் மோதியும் ரஷ்ய அதிபர் புதினும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டது மேற்கத்திய ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கிக்கு புதின் - மோதி இடையிலான இந்த நெருக்கம் பிடிக்கவில்லை.
ஜூலை 9, 2024 அன்று, "இன்று ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்" என்று ஸெலென்ஸ்கி கூறி இந்த சந்திப்பை விமர்சித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியா மீது ரஷ்யா கோபம் கொள்ளுமா?
"யுக்ரேனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியது. அத்தகைய நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், மாஸ்கோவில் உலகின் மிகக் கொடிய கொலைக் குற்றவாளியை ஆரத் தழுவுவது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்."
இது நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பிரதமர் மோதி யுக்ரேனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார்.
பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23ஆம் தேதி யுக்ரேன் செல்கிறார். 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேன் செல்வது இதுவே முதல் முறை.
பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவை சங்கடப்படுத்தக் கூடும் என்று பலர் நம்புகிறார்கள். அதே சமயம் ரஷ்ய அதிபர் புதினின் சீன பயணத்தின் போது இந்தியா இதேபோன்ற சங்கடத்தை உணர்ந்திருக்கும் என்றும் கூறலாம்.
யுக்ரேன் சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து அதன் தாக்குதலை தீவிரப்படுத்திய சமயத்தில், பிரதமர் மோதியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ரஷ்யாவின் சில பகுதிகளையும் யுக்ரேன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா விரைவில் பெரும் தாக்குதலை நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழலில் பிரதமர் மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்வது சரியா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோதி ஏன் யுக்ரேன் செல்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மோதியின் யுக்ரேன் பயணத்தின் நோக்கம் என்ன?
சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் பிரம்மா செலனி தனது எக்ஸ் பக்கத்தில், "ஆகஸ்ட் 23 அன்று யுக்ரேன் சுற்றுப்பயணம் செல்வது மோசமான நேரம் மட்டுமல்ல, அதன் நோக்கமும் தெளிவாக இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேனின் சமீபத்திய ஆக்கிரமிப்பு போர் நிறுத்த முயற்சிகளுக்கு பலத்த அடியாக உள்ளது. யுக்ரேன் சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு இந்தியப் பிரதமரும் அங்கு சென்றதில்லை. பிரதமர் மோதி யுக்ரேன் செல்வதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. குறிப்பாக அங்கு யுத்தம் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் பிரவீன் சாவ்னி, "யுக்ரேனின் டான்பாஸில் பல முனைகளில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் நோக்கம் என்ன?" என்று கேட்கிறார்.
ஜேஎன்யுவில் உள்ள பேராசிரியர் ஹேப்பிமேன் ஜேக்கப், பிரதமர் மோதி ஏன் யுக்ரேன் சுற்றுப்பயணம் செல்கிறார்? என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பேராசிரியர் ஜேக்கப், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் 'தி இந்தியா வே' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "உலக முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை வளர்ந்து வரும் சக்திகள் உணர்ந்து, தங்கள் தேசிய நலன்களை முன்னேற்றுவதற்கு பயன்படுத்துகின்றன." என்று குறிப்பிட்டிருந்தது.
பிப்ரவரி 2022இல் ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோதியும் ஸெலென்ஸ்கியும் இரண்டு முறை சந்தித்துள்ளனர்.
மே 2023 இல், ஜப்பானில் மோதி மற்றும் ஸெலென்ஸ்கி இடையே ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. ஜூன் 2024இல், இரு தலைவர்களும் இத்தாலியில் சந்தித்தனர்.
பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செலனி, "இந்த சூழலில் மோதி யுக்ரேன் பயணிப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலால்” என்று எழுதியுள்ளார்.
யுக்ரேன் ஊடுருவலுக்குப் பிறகு, ரஷ்யா அதன் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது. இங்கு போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை.
வங்கதேசம் பற்றி குறிப்பிட்ட பிரம்மா செலனி, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம் செலுத்துமாறு மோதிக்கு அறிவுறுத்தினார்.
மோதி வருகை குறித்து யுக்ரேன் கருத்து
பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்த தகவல்களை இந்தியா மற்றும் யுக்ரேன் வெளியுறவு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோதியின் ரஷ்ய பயணத்திற்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள் காரணமாக யுக்ரேன் செல்கிறாரா? என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளரிடம் (மேற்கு) செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தன்மய் லால், "ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் இந்தியா வலுவான மற்றும் சுதந்திரமான உறவுகளைக் கொண்டுள்ளது." இது ஒருவருக்கு லாபம் மற்றொருவருக்கு நஷ்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது. பிரதமர் மோதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் பிரதமர் ஸெலென்ஸ்கியையும் பலமுறை சந்தித்துள்ளார். தற்போது இரு தலைவர்களும் யுக்ரேனில் சந்தித்து பேசுகின்றனர். தொடர்ந்து நடக்கும் மோதல்கள் குறித்தும் பேசப்படும்.” என்று கூறியுள்ளார்.
ரஷ்யா-யுக்ரேன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தன்மய் லால் கூறுகையில், “இந்தியா மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த மோதலை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். இது நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும், எனவே உரையாடல் மிகவும் முக்கியமானது." என்றார்.
தன்மய் லால் கூறுகையில், "இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் விருப்பங்கள் மூலம் மட்டுமே நிரந்தர அமைதியை அடைய முடியும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்" என்றார்.
பிரதமர் மோதியின் வருகை குறித்த தகவலை யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
யுக்ரேனின் கொடி தினமான ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்யவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் யுக்ரேன் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும். இந்தியா மற்றும் யுக்ரேன் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - யுக்ரேன் உறவு
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா மற்றும் யுக்ரேன் இடையே வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சக தரவுகளின்படி, 2021-22 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 3.3 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமார் 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்தது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை இந்தியா ஒருபோதும் கண்டித்தது இல்லை. ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கவில்லை. அதேநேரத்தில், இந்தியா யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
தன்மய் லால் கூறுகையில், "இந்தியாவில் இருந்து சுமார் 135 டன் பொருட்கள் யுக்ரேனுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் ஆகியவை இதில் அடங்கும்." என்கிறார்.
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கிய போது, இந்திய மாணவர்களும் அங்கு சிக்கி இருந்தனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் நான்காயிரம் ஆக இருந்தது.
இந்த மாணவர்களை வெளியேற்றுவதில் போலந்து முக்கிய பங்கு வகித்தது. யுக்ரேன் செல்வதற்கு முன்னதாக இந்திய பிரதமர் மோதி போலந்தும் செல்ல உள்ளார். 40 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோதி ஆவார்.
யுக்ரேன் - ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற்ற போது, அழுத்தம் கொடுத்த போதிலும் யுக்ரேனை இந்தியா அழைக்கவில்லை. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற பெரும்பாலான முக்கிய மாநாடுகளில் ஸெலென்ஸ்கி பங்கேற்றார்.
அக்டோபர் 2022 இல், யுக்ரேனின் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கும் அங்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அப்போது இந்தியா இந்த தீர்மானத்தில் இருந்து விலகி இருந்தது.
ஜூலை 2024 இல் கூட, ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும் இந்தியா இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது.
பிப்ரவரி 2022 முதல் இப்போது வரை, ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கி கொண்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு மற்றும் தடைகளை மீறி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தது. இதன் மூலம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் கிடைத்தது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் முடிவை பல சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தி வருகிறார்.
டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் கூட்டறிக்கையில் ரஷ்யா தொடர்பாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு ரஷ்யா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளும் உடன்படுவதாகத் தெரிந்தது.
ரஷ்யாவையும் யுக்ரேனையும் இந்தியா எதிர்கொள்ள முடியுமா?
இந்தியா நீண்ட காலமாக பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவையே நம்பியிருக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவை, இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடு என்று வர்ணித்து வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1965 போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சோவியத் யூனியன் மத்தியஸ்தராக இருந்தது. 1971ல் இந்தியா பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்ட போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
1971 இல் இந்தியாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத் யூனியன் சரிந்த போது, இந்த ஒப்பந்தம் ஜனவரி 1993 இல் இந்திய-ரஷ்ய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மாற்றப்பட்டது.
யுக்ரேனை போன்று கடந்த காலங்களில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு குறித்து இந்தியா மௌனம் காத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. 1956 இல் ஹங்கேரி, 1968 இல் செக்கோஸ்லோவாகியா 1979இல் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு செய்த போது இந்தியா மெளனம் காத்தது.
யுக்ரேன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வேறுபட்டதல்ல.
ரஷ்யா - யுக்ரேன் போரில் இந்தியா எந்த பக்கமும் நிற்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம், இந்தியா ரஷ்யாவுடன் உறவுகளைப் பேணுகிறது, மறுபுறம் அது யுக்ரேனுக்கும் தொடர்ந்து உதவுகிறது.
பிரதமர் மோதி பிப்ரவரி 2022-க்குப் பிறகு சில தருணங்களில் ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்.
ரஷ்யா - யுக்ரேன் போரில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுடன் உள்ளன. இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமும் இதையே எதிர்பார்க்கின்றன. ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் இந்தியா இந்த அழுத்தத்துக்கு உட்படவில்லை.
போரின் போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்த வர்த்தகம் இதற்கு சாட்சி.
பேராசிரியர் ஜேக்கப் ஒரு கட்டுரையில், "ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பிரச்னையே தவிர இந்தியாவின் பிரச்னை அல்ல" என்று கூறியிருந்தார்.
"நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பிரச்னை, இந்தியாவின் பிரச்னை அல்ல. இந்தியாவின் பிரச்னை சீனா. இந்த பிரச்னையை சமாளிக்க இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள் தேவைப்படும். அதாவது யுக்ரேன் அல்லது ரஷ்யாவுடனான உறவை இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்கிறது." என்பது அவரது கருத்து.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)