கொல்கத்தா பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள் - ஒரே மகளையும் இழந்த பெற்றோர் கண்ணீர்

    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி ஹிந்தி

“62 வயதில் எனது கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன. குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”

கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது. அவரது தந்தை அவர்களின் பூர்வீக வீட்டில் எங்களுடன் பேசினார்.

சாதாரணமான அந்த வெள்ளை நிற வீடு அவரது மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு, ஊடகத்தினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்தக் கட்டுரையில் பெண் மருத்துவரின் குடும்பத்தினரின் பெயர்களும் மற்ற விவரமும் தரப்படவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"எங்கள் மாநிலம், நமது நாடு, இந்த ஒட்டுமொத்த உலகமும் என் மகளின் மரணத்திற்கு நீதி கேட்கிறது" என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் அவருக்குப் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஜூனியர் மருத்துவர், ஆகஸ்ட் 9 அன்று இரவுப் பணியின்போது, அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் (Seminar Hall) ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கொடூரமான முறையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு, இரவு 11 மணியளவில் அவர் தன் அம்மாவிடம் பேசியிருக்கிறார்.

அவரது தாயார் தொலைபேசியில் மகள் பேசிய கடைசி வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்: "தயவுசெய்து அப்பாவை சரியான நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட சொல்லுங்கள். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்." என்று அந்த பெண் மருத்துவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

“அதுதான் கடைசியாகப் பேசியது. அடுத்த நாள், அவரது போன் ஒலித்துக்கொண்டே இருந்தது." என்றார் அவர்.

அவருடைய தந்தைக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பதால், சரியான நேரத்தில் மாத்திரைகள் சாப்பிடுவது முக்கியம்.

"நான் சரியான நேரத்துக்கு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பாள். ஒரு டோஸ் கூட தவற விடாமல் பார்த்துக் கொள்வாள்" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் மகளை பற்றி நினைவு கூர்ந்தார் அவரது தந்தை.

“ஒருமுறை, நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து தீர்ந்து போய் விட்டது. அதனை ​​மறுநாள் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போது இரவு சுமார் 10 அல்லது 11 மணி இருக்கும். இதனை தெரிந்து கொண்ட என் மகள், 'அப்பா மருந்து இங்கே வரும் வரை இந்த வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள்' என்றார் " என்று அன்றைய நிகழ்வை தந்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.

"என் மகளின் இயல்பு இது தான். அவர் என்னை எதற்கும் கவலைப்பட விட மாட்டார்." என்றார் அவர்.

இந்திய தலைநகர் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை நினைவூட்டுகிறது. அவரது உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன.

டெல்லி மருத்துவ மாணவி சம்பவத்தைத் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன.

ஆனால் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்திய பெண்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், பணியிடத்தில் மருத்துவப் பணியாளர்களை - குறிப்பாக பெண்களை - பாதுகாக்க தேசிய அளவிலான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவர்களிடம் இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியை மேலாண்மை செய்யும் தேசிய மருத்துவ ஆணையம், பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வது குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஓர் உயிர் பறிபோனது

கொல்கத்தாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குறுகிய தெருவில் பெண் மருத்துவரின் குடும்பத்தை நாங்கள் சந்தித்தோம்.

அங்கு போலீஸ் தடுப்பு போடப்பட்டிருந்தது. அதன் அருகே பல செய்தி சேனல்களின் கேமராக்கள் வரிசை கட்டி நின்றன. அங்கு ஒவ்வொரு கணத்தையும் கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன.

மறுபுறம், 10 முதல் 15 போலீஸ் அதிகாரிகள் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர்.

போலீஸ் போட்டிருக்கும் தடுப்பை தாண்டி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பூர்வீக வீட்டை ஊடகங்கள் அடைந்துவிட கூடாது என்பதே காவல் அதிகாரிகளின் நோக்கம்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, 36 மணி நேரமாக பணியில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட அந்த ஜூனியர் டாக்டர், கருத்தரங்கு கூடத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தார்.

காலையில், ஒரு பகுதி ஆடைகளுடன் அவரது இறந்த உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது.

இந்த குற்றச்செயலின் கோர முகம் இந்தியா முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கொல்கத்தாவில் மட்டுமல்ல, பல இந்திய நகரங்களிலும் போராட்டக்காரர்கள் நீதி கோரி பேரணி நடத்தினர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் ‘ரிக்ளைம் தி நைட்’ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

"பணியின் போது என் மகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் மருத்துவமனை வளாகத்தில்" என்று அவரது தந்தை கூறினார். பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் இப்படி நடந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள்

பெண் மருத்துவரின் இழப்பால் ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போயுள்ளது.

அவர் எப்பொழுதும் மற்றவர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதை அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார்: “ என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் கட்டத்தில் இருந்தது. ஆனால் அவள், என் பொருளாதார சூழலை எண்ணி, 'அப்பா, உங்களால் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்? கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னாள்" என்கிறார் அவர்.

பெண் மருத்துவரின் தந்தை இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே பின்னே இருந்த தாயின் விசும்பல் கேட்டது.

ஒரு தையல் இயந்திரம், நூல் கண்டு, ஒரு கனமான இரும்பு, தரையில் சிதறிக் கிடந்த துணிகள்.. வரவேற்பறையில் தென்பட்ட இந்த காட்சி அவர் ஒரு தையல்காரர் என்பதை பிரதிபலித்தன. அவரின் வாழ்நாள் முழுவதும் அந்த தையல் மெஷின் முன் இருந்துள்ளார்.

வரவேற்பறைக்கு அடுத்ததாக ஒரு படிக்கட்டு மற்ற அறைகள் மற்றும் கொலையுண்ட பெண் மருத்துவரின் படுக்கையறை வரை செல்கிறது.

கடந்த 11 நாட்களாக அந்த அறைபூட்டியே கிடக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு அவரது பெற்றோர் மகளின் அறையில் கால் வைக்கவே இல்லை.

"என் மகள் சிறுமியாக இருந்தபோது, ​​நாங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டோம்," என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார். "அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவளுக்கு பழங்கள் பிடிக்கும் குறிப்பாக மாதுளை என்றால் என் மகளுக்கு கொள்ளைப் பிரியம். அவளை அழைத்துச் செல்லும் போது வழியில், மாதுளையை பார்த்து, ‘பாபி, பூஜைக்கு மாதுளை பழம் வாங்க மாட்டாயா?’ என்று கேட்டாள்.”

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தந்தை உடைந்து அழுதுவிட்டார்.

“அழாதே, தைரியமாக இரு” என்று அருகில் நின்றிருந்த உறவினர் அவரிடம் மெதுவாக சொன்னார்.

இந்த நெருக்கடியான சூழலில் குடும்பத்தில் தைரியமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவரது தோள்களில் சுமையாக இருந்தது.

கொலையுண்ட பெண் மருத்துவர், அவர்களுக்கு ஒரே குழந்தை ஆவார். சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் கொண்ட மகள், பள்ளியில் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.

"என் மகள் சிறியவளாக இருந்த போது, ​​அவளுடைய ஆசிரியர்கள் அவளை தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார்கள்" என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். எங்களிடம் உள்ள ஒவ்வொரு பொருளும் நாங்களே பாடுபட்டு உருவாக்கியது." என்று அவர் கூறினார்.

"உங்களால் உங்கள் மகளை மருத்துவராக்க முடியாது" என்று சுற்றியிருக்கும் சிலர் கூறினார்கள். ஆனால் என் மகள் அவர்களது கூற்று தவறு என்று நிரூபித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாள்." என்று கூறினார்.

அவருடைய அம்மா தன் மகளின் நினைவுகளை அமைதியாக தனக்குள் நினைவுப்படுத்தி கொண்டார்.

அவருடைய கைகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்களுக்கு இடையில் இருந்த ஒரு தங்க வளையலை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்து கொண்டார். அது அவரது மகள் வாங்கி கொடுத்த வளையல்.

ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தனது மகள் நாட்குறிப்பில் எழுதி வைக்கும் குறிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

“மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எழுதியிருந்தார். அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதுடன் எங்களையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்”என்று தாயார் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)