அமெரிக்காவின் 10 முக்கிய பிரச்னைகளில் கமலா ஹாரிஸ் நிலைப்பாடு என்ன?

    • எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட்
    • பதவி, பிபிசி நிருபர், அமெரிக்கா மற்றும் கனடா

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள் மற்றும் உற்சாகமான பேரணிகளால் நேர்மறையான சூழலில் இயங்கி வருகிறார்.

சாதகமான சூழல் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்புள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?

இதுவரை, அவர் தன் நிலைப்பாட்டை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை. ஆனாலும், கலிபோர்னியா செனட்டர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த காலகட்டம், 2020ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளராவதற்கான பிரசாரம் மற்றும் துணை அதிபராக வெள்ளை மாளிகையில் செயல்பட்ட விதம் ஆகியவை கமலா ஹாரிஸ் பல கொள்கைகளில் எந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்பதை பிரதிபலிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் சில விஷயங்களில் அவருடைய நிலைப்பாடுகள் மாறிவிட்டன. அவர் தன் கொள்கைகளை வரையறுக்க போராடியதாக சிலர் கூறினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவரது `கொள்கை செயல் திட்டம்’ இப்போது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள பிபிசி முயன்றது. 2024 அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸின் சமீபத்திய பேச்சுகள் மற்றும் பொது அறிக்கைகள், துணைத் தலைவராக அவரது செயல்பாடுகள் மற்றும் 2020 அதிபர் வேட்பாளராக அவரது அரசியல் வரலாறு, கலிபோர்னியா செனட்டர் மற்றும் வழக்குரைஞராக அவரது நிலைப்பாடு ஆகியவற்றை பிபிசி ஆய்வு செய்தது.

கமலா ஹாரிஸின் பிரசாரக் குழுவினர் பிபிசியிடம், அவரது சமீபத்திய கருத்துகளை உற்றுநோக்கினால் அவரது நோக்கங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் என்று கூறினர்.

"பிக் பார்மாவை தோற்கடித்து, கிட்டத்தட்ட 16 மில்லியன் வேலைகளை உருவாக்கி, முப்பது ஆண்டுகளில் முதல் துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் வரலாற்று கொள்கை செயல்திட்டத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னெடுத்துச் செல்வார்." என்று அவரின் பிரசார செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 10 முக்கிய பிரச்னைகளில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

பொருளாதாரம்

ஒரு செனட்டராக, கமலா ஹாரிஸ், ஊதியத்துடன் கூடிய குடும்ப விடுப்பு, மலிவு விலையில் வீடுகள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச கல்வி உட்பட பல முற்போக்கான கொள்கைகளை முன்வைத்தார்.

துணை அதிபராக, முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார சட்டத்தை இயற்றுவதில் பைடனுடன் முக்கிய பங்களித்துள்ளார். இந்த சட்டத்தை ‘பைடனோமிக்ஸ்’ (Bidenomics) என்று குறிப்பிடுவார்கள். இதில் உள்கட்டமைப்பு மற்றும் பசுமை ஆற்றலில் முக்கிய முதலீடுகள் அடங்கும்.

ஆனால் பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை தொடர்ந்து பாதிப்பதால், பல வாக்காளர்கள் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

வெள்ளி அன்று, கமலா ஹாரிஸ் தனது பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டார், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அடமான உதவி, பச்சிளம் குழந்தைகளின் பெற்றோருக்கு வரிச் சுமையை குறைப்பது மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மளிகைப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.

குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை போலவே, அவரும் taxing tips-க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

"அதிபர் என்ற முறையில், நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் கண்ணியத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நான் கவனம் செலுத்துவேன். ஒன்றாக இணைந்து, நாம் அனைவருக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம்," என்று அவர் வெள்ளிக்கிழமை உரையில் கூறினார்.

குடியேற்ற கொள்கைகள்

கமலா ஹாரிஸ் முதன்முதலில் அதிபர் பதவிக்கான பந்தயத்தில் பங்கேற்றதில் இருந்து குடியேற்றப் பிரச்னைகளில் மிகவும் முற்போக்கான நிலைப்பாடுகளை கொண்டிருந்தார். குடியேற்ற தடுப்பு மையங்களை மூடுவதாக உறுதியளித்தார்.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் குடியேற்றம் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளை மேற்பார்வையிடுமாறு கமலா ஹாரிஸிடம் பைடன் கேட்டுக்கொண்டார்.

பல குடியரசுக் கட்சியினர் அவரை "எல்லையின் ஜார்" (border tsar) என்று வர்ணித்துள்ளனர். ஆனால் அவரது பணி, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து குடிமக்கள் அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்கான "மூலக் காரணங்களை" நிவர்த்தி செய்வதே ஆகும்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் 2023இல் 3 பில்லியன் டாலர் திரட்டியதாக அறிவித்தார். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து இது திரட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள சமூகங்களில் முதலீடு செய்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு புலம்பெயர மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர் நம்பினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், எல்லைச் சுவர் கட்டுமானத்திற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிக்கு அவர் உதவினார்.

ஆனால் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்தார். பைடனின் எல்லைக் கொள்கைகள் "ஒவ்வொரு அமெரிக்க சமூகத்திலும் மரணம், அழிவு மற்றும் குழப்பத்தை" ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

ஹாரிஸின் பிரசாரக் குழு, அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த இருதரப்பு தீர்வுகளுக்கு உறுதியுடன் இருப்பார் என்று கூறியது.

கருக்கலைப்பு உரிமை

கருக்கலைப்பு விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பெண்களின் உரிமையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார்.

நவம்பர், 2024 தேர்தலுக்கு கருக்கலைப்பு உரிமைகள் விவகாரத்தை மையப்படுத்துவதற்கான பைடன் பிரசாரக் குழுவின் முயற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் நீண்ட காலமாக கருத்தடை சம்பந்தமான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை ஆதரித்தார்.

அவரின் நிலைப்பாடு மாறவில்லை.

ஜார்ஜியாவின் அட்லாண்டா நகரில் தனது பிரசார பேரணியில், "அமெரிக்காவின் அதிபராக, கருக்கலைப்பு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றும் போது, ​​நான் அந்த சட்டத்தில் கையெழுத்திடுவேன்," என்று அவர் கூறினார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2022இல் ரோ வி. வேட் வழக்கை ரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேசுவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். தனிப்பட்ட சுதந்திரம் என்ற தலைப்பை அடிக்கடி முன்வைத்தார். கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்ற முதல் துணை அதிபர் இவர்தான்.

நேட்டோ மற்றும் யுக்ரேன் விவகாரம்

கமலா ஹாரிஸ் அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். 2017இல் செனட்டராக வாஷிங்டனுக்குச் சென்றதிலிருந்து, அவர் உலக அரங்கில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.

செனட்டராக, அவர் ஆப்கானிஸ்தான், இராக், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். துணை அதிபராக 150 உலக தலைவர்களை சந்தித்து 21 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு மியூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் நேட்டோவுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டார், அது தனிமைப்படுத்தலைக் கண்டித்தது.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் யுக்ரேனால் கூட்டப்பட்ட "அமைதி மாநாட்டில்" கமலா ஹாரிஸ் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அவரது வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள், 350 முன்னணி அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு வல்லுநர்கள், பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியினர், சர்வதேச விவகாரங்களில் நாட்டை வழிநடத்த "சிறந்த தகுதி வாய்ந்த நபர்" என்று ஒப்புதல் அளித்து ஒரு கடிதத்தை வெளியிட்டனர்.

இஸ்ரேல்-காஸா போர்

கமலா ஹாரிஸ் இரு நாடுகள் தீர்வுக்காக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறார். துணை அதிபராக, அவர் பைடனை விட இஸ்ரேல்-காஸா போரின் போது இஸ்ரேலை வெளிப்படையாக விமர்சித்தார்.

"உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்த அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர், "பாலத்தீனர்களுக்கான மனிதாபிமான பேரழிவு" குறித்து கவலைகளை எழுப்பினார். இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார்.

மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

ஜூலை மாதம் வாஷிங்டனுக்கு பயணம் செய்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் "வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான அவர், காஸாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தனக்கு "அதிக கவலைகள்" இருப்பதாகவும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதம் முக்கியமானது என்றும் நெதன்யாகுவிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நேருக்கு நேர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, "இந்தப் போர் முடிவடையும் நேரம் இது" என்று கூறினார். அமெரிக்க இடதுசாரிகள் சிலர் அழைப்பு விடுத்தது போல, இஸ்ரேல் மீதான ஆயுதத் தடையை அவர் ஆதரிக்கவில்லை.

அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பில் கார்டன், எக்ஸ் தளத்தில், “அவர் தெளிவாக இருக்கிறார். இரான் மற்றும் இரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை அவர் எப்போதும் உறுதிப்படுத்துவார்" என்று கூறினார்.

வரிகள்

2017ஆம் ஆண்டில் செனட்டராக இருந்த போது ​​கமலா ஹாரிஸ் பல முற்போக்கான வரித் திட்டங்களை ஆதரித்தார். முதலீடுகள் மீதான வரி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் முதியோருக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான மசோதாவை பெர்னி சாண்டர்ஸுடன் இணைந்து அறிமுகப்படுத்தினார்.

2019இல் அதிபர் வேட்பாளராக முயன்ற போது, அவர் கார்ப்பரேட் வரி விகிதத்தை 21% இல் இருந்து 35% ஆக அதிகரிப்பதை ஆதரித்தார்.

இது அதிபர் பைடனின் முன்மொழிவை விட மிகவும் அதிகமாக இருந்தது, அவரும் 28% ஆக அதிகரிப்பதை ஆதரித்தார்.

அமெரிக்கர்களில், 400,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மீது வரிகளை உயர்த்தக் கூடாது என்ற அதிபர் பைடனின் முன்மொழிவை துணை அதிபர் தொடர்ந்து ஆதரிப்பார் என்று பிரசார அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுகாதாரம்

கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக, கமலா ஹாரிஸ் மற்றும் அவரது அலுவலகம், காப்பீட்டாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் வாடிக்கையாளர் செலவுகளை உயர்த்துவதைத் தடுக்க, Anti -trust சட்டங்களைப் (antitrust laws) பயன்படுத்தியது.

அவர் அமெரிக்க செனட்டராகவும் பின்னர் 2020ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளருக்கான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த போது, ​​​​அவர் பைடனை விட முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார். மருத்துவ காப்பீடு மற்றும் பொது நிதியுதவி வழங்கும் சுகாதார திட்டங்களை ஆதரித்தார்.

`மெடிகேர்’ என்பது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள இளையவர்களை ஆதரிக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதி அளிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் ஆகும்.

கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டை ஆதரித்தார். இது அமெரிக்காவின் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீடு வழங்கும் திட்டமாகும். இது பைடன் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னர் பல முற்போக்கு ஜனநாயகவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

அதே காலகட்டத்தில், அவர் தனியார் மருத்துவக் காப்பீட்டை அகற்றுவதை ஆதரித்தார். பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். தனது 2020 அதிபர் பிரசாரத்தின் போது ஒரு திட்டத்தை வெளியிட்டார். இது 10 ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவியுடன் கூடிய உடல்நலக் காப்பீட்டை வழங்கும். ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை முழுமையாக அகற்றாது.

இனி அப்படி இல்லை. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘single-payer system’ முறையை ஆதரிக்க மாட்டார் என்று அவரது பிரசாரக் குழு பிபிசியிடம் தெரிவித்தது.

அவர் துணை அதிபராக இருந்த போது, ​​வெள்ளை மாளிகை பரிந்துரைக்கப்பட்ட மருந்து விலைகளைக் குறைத்தது. இன்சுலின் விலையை 35 டாலராகக் குறைத்தது.

குற்றச்செயல்

குழந்தைகளை துன்புறுத்துபவர்கள் மற்றும் தொழிலுக்காக மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்குகள் மூலம் கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராகவும், அதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும் விகிதம் அவரது திறமையான வாதத்தால் அதிகரித்தது. ஆனால் இது முற்போக்கான இடதுசாரிகளின் விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இது சில சமயங்களில் அவரை "ஒரு போலீஸ்காரர்" என்று முத்திரை குத்தியது.

இதற்கிடையில், அவர் குற்றத்திற்கு எதிராக மென்மையாக நடந்துகொள்வதாக வலதுசாரி குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வழக்கறிஞராக, அவர் ஒரு போலீஸ்காரரைக் கொன்ற ஒருவருக்கு எதிராக மரண தண்டனையை ஆதரிக்க மறுத்துவிட்டார். ஆனால் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக, அதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மாநில உரிமைக்காக அவர் போராடினார்.

2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது உள்பட 34 மோசடி வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்பை தனது வழக்கறிஞர் அனுபவத்தின் அடிப்படையில் கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.

காலநிலை மாற்றம்

கமலா ஹாரிஸ் நீண்ட காலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை முன்வைத்தார்.

ஒரு வழக்கறிஞராக, ஹாரிஸ் கலிபோர்னியாவின் காலநிலை சட்டங்களை ஆதரித்தார் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தனது 2020 அதிபர் பிரசாரத்தின் போது "பசுமை புதிய ஒப்பந்தம்" மூலம் காலநிலை மாற்றக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். அவற்றில் சில தற்போதைய நிர்வாகத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளன.

2019 இல் சிஎன்என் அதிபர் விவாதத்தின் போது, ​​பாறையில் இருந்து ஷேல் எரிவாயு எடுப்பதற்கான "ஃபிராக்கிங்(fracking) செயல்முறையை தடைசெய்ய ஆதரவாக இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.

துணை அதிபராக, அவர் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை நிறைவேற்ற உதவினார். இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார வாகன வரிக் கடன் மற்றும் தள்ளுபடி திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஈட்டியது.

கடந்த ஆண்டு, அவர் ஒரு உரையில் "இது நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய காலநிலை முதலீடு" என்று குறிப்பிட்டார். தீவிர காலநிலை மாற்றத்திற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

துப்பாக்கி சட்டங்கள்

கமலா ஹாரிஸ் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் துப்பாக்கி பாதுகாப்பு விதிமுறைகளை ஆதரித்து வந்துள்ளார். கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இருந்த போது, அந்த மாகாணத்தின் துப்பாக்கிச் சட்டங்களுக்கு எதிரான சட்டரீதியான சவால்களை வெற்றிகரமாக வாதிட்டு வென்றார்.

துணை அதிபராக, அவர் துப்பாக்கி வன்முறை தடுப்புக்கான வெள்ளை மாளிகை அலுவலகத்தை மேற்பார்வையிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தங்களுக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைக்கக் கூடியவர்களாக கருதப்படும் நபர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்கும் சட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆதார மையங்களை உருவாக்குவதாக அறிவித்தார்.

கூடுதலாக, பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தால் ‘நெருக்கடி தீர்வு திட்டங்களுக்கு’ ஒதுக்கப்பட்ட 750 மில்லியன் டாலர்கள் கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்துமாறு அவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)