நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாமில் தற்கொலை முயற்சி

sri lanka refugees
படக்குறிப்பு, வியட்நாமில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்து, வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என அகதிகள் கூறி வருகின்ற பின்னணியில், தங்களை இலங்கைக்கு மீள நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிவித்தே இவர்கள் நவம்பர் 18ஆம் தேதி இரவில் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர்களின் சக அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, வியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இன்னொருவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

யார் இந்த அகதிகள்? நடுக்கடலில் மீட்கப்பட்டது எப்படி?

refugees in sea representative image

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் 303 இலங்கையர்கள், சட்டவிரோதமான முறையில் கனடா நோக்கி செல்ல அண்மையில் முயற்சித்திருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிங்களவர்கள் உள்ளனர் என்றும் மியான்மரில் இருந்து பிபிசி தமிழுக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தகவல்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

முன்னதாக இலங்கையிலிருந்து உரிய விசா நடைமுறைகளின் ஊடாக, இந்த இலங்கை அகதிகள் மியான்மருக்கு விமானத்தின் மூலம், கடந்த சில மாதங்களின் வெவ்வேறு காலகட்டங்களில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு மியான்மர் சென்ற இலங்கை அகதிகள், அங்கு சில மாதங்கள் ஆட்கடத்தல்காரர்களால் வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கப்பல் ஒன்றின் ஊடாக, கனடா நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், துவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள் இலங்கை கடற்படையின் மீட்பு மையத்திற்கு நவம்பர் 6ஆம் தேதி தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படை இது குறித்த தகவலை சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு அறிவித்தது.

அகதிகள் இருந்த கப்பலை முதலில் கண்டுபிடிக்க சிங்கப்பூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், அந்தக் கப்பலுக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பான் சரக்கு கப்பலுக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஜப்பான் சரக்கு கப்பலின் மூலம், நவம்பர் 7ஆம் தேதி அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜப்பான் சரக்கு கப்பல் மாலுமிகள் வியட்நாமிடம் ஒப்படைத்துள்ளனர்.

'இலங்கை திரும்ப விரும்பவில்லை'

sri lanka refugees

வியட்நாமில் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களில் சிலர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

தாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என அதிகாரிகளிடம் அகதிகள் கூறியுள்ளனர்.

அவ்வாறு இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்கும் பட்சத்தில், தற்கொலை செய்துகொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த அகதிகளை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே, இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அகதிகளை அழைத்து வர இலங்கை நடவடிக்கை

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா?

இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர்
படக்குறிப்பு, நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ் போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிஹால் தல்துவ கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: