90s கிட்ஸ்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறைந்து கொண்டே போவதற்கு என்ன காரணம்?

    • எழுதியவர், ஆதர்ஷ் ரத்தோர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே ஆண்டுகளில் அந்த வாழ்க்கை கசந்தது. அதாவது 2020இல் மணீஷ் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான திருமண உறவில் விரிசல் ஏற்பட்டது.

“திருமண வாழ்வில் எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்த போதிலும், எங்களுக்கு இடையிலான தாம்பத்திய உறவு குறையத் தொடங்கியது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இந்தச் சிக்கல் எங்களின் அகவாழ்வை பாதிக்கத் தொடங்கியதை உணர்ந்தோம். இதற்கு மேல் அந்த பாதிப்பை அனுமதிக்க முடியாது என்று உணர்ந்தபோது நானும், எனது மனைவியும் இதுகுறித்து உரிய ஆலோசகரை அணுகினோம்” என்று தாங்கள் சந்தித்த பிரச்னை குறித்து விளக்குகிறார் மணீஷ்.

மணீஷ் மற்றும் அவரின் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் இளம் தம்பதி. மணிஷ், அவரது மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் இளம் தம்பதி. இவர்களைப் போன்றோர், புறவாழ்வில் சந்திக்கும் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக அகவாழ்வின் முக்கிய அம்சமான உடலுறவில் சிக்கல்களைச் சந்திப்பு அசாதாரணமான விஷயமல்ல.

உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில், குறிப்பாக 1980 -1990 களுக்கு இடையே பிறந்த மில்லினியல் அல்லது Generation Y எனப்படும் தலைமுறையினரிடம் உடலுறவு மீதான ஆர்வம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

தற்போது 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இந்த தலைமுறையினர், திருமண வாழ்வில் உடலுறவு மீதான ஆர்வம் மேலோங்கி இருக்கும் காலகட்டமாகக் கருதப்படும் நடுத்தர வயதினராக இருக்கின்றனர்.

ஆனால் இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோருக்கு உடலுறவு மீதான நாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இளம் தம்பதியினர் மத்தியில் பாலியல் ஆர்வம் குறைந்து வருவதற்கு என்னென்ன காரணிகள் காரணங்களாக உள்ளன என்பதை இங்கு காண்போம்.

நான்கில் ஒருவருக்கு உடலுறவு மீது குறைந்த நாட்டம்

இண்டியானா பல்கலைக்கழகத்தின் கின்சி இன்ஸ்டிடியூட் மற்றும் ‘லவ் ஹனி’ என்ற பாலியல் பொம்மைகள் விற்பனை செய்யும் நிறுவனம், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் 2021ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பாலியல் மீதான ஆர்வக் குறைவு, மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்த தம்பதிகள் மத்தியில் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

அதாவது இந்த தலைமுறையைச் சேர்ந்த தம்பதிகளில் 25.8 சதவீதம் பேருக்கு உடலுறவில் நாட்டம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

இதுவே ‘ஜெனரேஷன் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் 1965 -1980க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்த தம்பதிகளில் 21.2 சதவீதம் பேருக்கும், ஜெனரேஷன் இசட் என்று கருதப்படும் 1990களின் இறுதியிலும், 2010க்கு முன்பும் பிறந்த தம்பதிகளில் 10.5 சதவீதம் பேருக்கும் பாலியல் ஆர்வம் குறைவாக இருப்பதையும் அந்த ஆய்வு உணர்த்தியது.

உடலுறவு இல்லாத இல்லற வாழ்க்கை

“இளம் தம்பதிகள், குறிப்பாக மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்த தம்பதிகள் மத்தியில் உடலுறவு மீதான ஆர்வம் குறைந்திருப்பதன் காரணமாக, அவர்களில் பலர் பெயரளவில் மட்டுமே தமது இணையுடன் உடலுறவு வைத்துக்கொள்கின்றனர்,” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ஷிவானி மிஸ்ரி சாது.

பெயரளவிலான உடலுறவோ அல்லது முற்றிலும் உடலுறவே இல்லாத திருமண வாழ்க்கை வாழ்பவரோ, பாலியல் இல்லாத மண வாழ்க்கை வாழ்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இவர்களின் இல்லற வாழ்வில் பாலியல் உறவு அனேகமாக இருப்பதே இல்லை. ஓராண்டுக்கு 10 முறைக்கும் குறைவாக மட்டுமே செக்ஸ் வைத்துக் கொள்ளும் தம்பதிகள், பாலியல் பந்தமற்ற இல்லற வாழ்க்கை வாழ்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.

“ஒரு தம்பதியில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அல்லது இருவருக்குமோ செக்ஸ் மீது நாட்டம் குறையத் தொடங்கும்போது, அவர்களின் அந்தரங்க வாழ்வில் சுவாரஸ்யம் குறையத் தொடங்குகிறது.

பாலியல் உறவின் மீதான இந்த ஆர்வக் குறைவு, அவர்களை பாலியல் பந்தமற்ற தம்பதியாக மாற்றுகிறது” என்று கூறுகிறார் கின்சி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளரான ஜஸ்டின் லெஹ்மில்லர்.

தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் குறைவது ஏன்?

“பாலியல் உறவில் தம்பதிகளுக்கு இடையே விருப்பம், நெருக்கம் குறைவது என்பது மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டிய விஷயம்.

இதில் நாம் தீவிர கவனம் செலுத்தாவிட்டால், காலப்போக்கில் இந்த பிரச்னை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது” என்று எச்சரிக்கிறார் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த பாலியல் சிகிச்சை நிபுணரான கிறிஸ்டின் லோசானோ.

இல்லற வாழ்வின் முக்கியமான இந்தப் பிரச்னையைக் களைய தம்பதியில் ஒருவர் மட்டும் மீண்டும், மீண்டும் முயற்சிகளை முன்னெடுக்கும்போது, மற்றொருவர் அதைப் புறக்கணித்தால், அது அவரின் சுயமரியாதையை பாதிக்கச் செய்யும்.

மேலும் உடலுறவை புறக்கணிக்கும் நபரும் அவரின் இந்தச் செயலால் வருத்தப்பட நேரிடும். இவற்றின் விளைவாக பாலியல் தூண்டுதல் பாதிக்கப்படும் சூழல் உருவாகத் தொடங்கும் என்கிறார் அவர்.

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்கள்

“உடலுறவை வலி நிறைந்ததாகக் கருதுவதோ அல்லது கடினமானதாக, விருப்பமற்றதாக உணர்வதோ அதன் மீதான ஆர்வத்தைக் குறைத்து விடுகிறது.

இதேபோன்று, தம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக் கொள்ளாததும் பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைவதற்குக் காரணமாக அமைகிறது.

பணிச்சுமையும் அவர்களின் புதிதாகப் பிறந்த குழந்தைகளும் தம்பதிகளின் உடலுறவு மீதான நாட்டம் குறைவதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளன,” என்கிறார் கிறிஸ்டின் லோசானோ.

மூன்றே ஆண்டுகளில் குறைந்து போகும் செக்ஸ் ஆர்வம்

குறிப்பிட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்த தம்பதிகள் மட்டும் இந்தப் பிரச்னையைச் சந்திக்கவில்லை. ஆனால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தில் நாளுக்கு நாள் மிகப்பெரிய வேறுபாடுகளைக் காண முடிவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“முன்பெல்லாம் திருமணம் முடிந்து 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், தம்பதிகளுக்கு இடையே உடலுறவு மீதான ஆர்வம் குறையத் தொடங்கும். ஆனால் தற்போது மணமுடித்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் இளம் தம்பதிகளின் பாலியல் மீதான நாட்டம் குறையத் தொடங்கி விடுகிறது,” என்கிறார் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த செலஸ்ட் ஹெர்ஷ்மேன்.

“முப்பது ஆண்டுகளுக்கு முன், 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள்தான் பெரும்பாலும் பாலியல் உறவில் சிக்கலைச் சந்தித்து வந்தனர். வயது காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் ஹார்மோன்களில் உண்டாகும் மாற்றங்கள் போன்றவை அவர்களிடையே பாலியல் நாட்டம் குறைந்ததற்குக் காரணங்களாக இருந்தன.

ஆனால் தற்போது 45 வயதுக்கும் கீழே உள்ள தம்பதிகளும் இந்தச் சிக்கலுக்கு ஆளாகின்றனர்,” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை உதவிப் பேராசிரியரும், பாலியல் சிகிச்சை நிபுணருமான கிம்பர்லி ஆன்டர்சன்.

பல்வேறு அழுத்தங்கள்

அளவுக்கு அதிகமான மன அழுத்தமும் உடலுறவு மீதான ஒருவரின் ஆர்வத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முந்தைய தலைமுறையினரை ஒப்பிடும்போது, மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்று கூறுகிறார் கின்சி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளரான ஜஸ்டின் லெஹ்மில்லர்.

இளம் தலைமுறையினர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிலேட்’ எனும் ஆய்வு நிறுவனம், இதுதொடர்பாக 2018இல் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

61% பேருக்கு செக்ஸ் ஆர்வம் குறைவு

அதில், “தற்போது 30 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தம்பதிகளில் 61% பேர் உடலுறவு மீது குறைவான நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். தங்களின் சிறு குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் உடலுறவில் அவர்களுக்கு ஆர்வம் இயல்பாகக் குறைகிறது,” என்று அந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும் 31% பேர், தங்களுக்கு குழந்தை பிறந்ததும் பாலியல் மீதான விருப்பம் காணாமல் போய்விட்டதாக ஒப்புக் கொண்டனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குழந்தை வளர்ப்பு என்பதைத் தவிர பணிரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெறவேண்டிய நிர்பந்தமோ, அவசியமோ மில்லினியல் தலைமுறைக்கு அதிகம் இருக்கிறது. இதனால் உண்டாகும் பணிச்சுமையின் காரணமாக அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மன அழுத்தத்திற்கு அதிகம் ஆளாகும் பெண்கள்

“மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 38% பேர் வேலைப்பளுவின் விளைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இவர்களில் 36 சதவீதம் பேர் ஆண்கள்; 41 சதவீதம் பேர் பெண்கள்” என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கிறது சர்வதேச ஆலோசனை நிறுவனமான டெலாய்ட். இளம் தலைமுறையினர் சந்திக்கும் மன அழுத்தம் தொடர்பாக இந்த நிறுவனம் ஐந்து வெவ்வேறு நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

“மில்லினியல்ஸ் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர், உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவிய 2008 காலகட்டத்தில் தங்களது நிறுவனப் பணியை தொடங்கியவர்களாக உள்ளனர்.

அண்மையில் உலகம் சந்தித்த கொரோனா பெருந்தொற்றும் இந்த தலைமுறையினரை பணிரீதியான நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது,” என்கிறார் ஜஸ்டின் லெஹ்மில்லரி.

மேலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாகவும், அவர்கள் மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. பணி தொடர்பான இதுபோன்ற அழுத்தங்களால் உடல்ரீதியாக ஏற்படும் சோர்வு, ஒரு நாளின் முடிவில் அவர்களின் செக்ஸ் ஆர்வத்தைக் குறைத்து வருகிறது என்கிறார் அவர்.

சமூக ஊடகங்கள், ஆபாச இணையதளங்களின் தாக்கம்

சமூக ஊடகங்கள், ஆபாச இணையதளங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் இன்றைய இளம் தலைமுறையினரின் அந்தரங்க வாழ்வை பாதிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

உடல் அழகு குறித்து சமூக ஊடகங்களில் சொல்லப்படும் சில கற்பிதங்கள், நிஜ வாழ்வில் சிலருக்கு தங்களின் புற அழகு தொடர்பான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அவர்கள்.

தாழ்வு மனப்பான்மை

“முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 37 சதவீதம் பேருக்கு தங்களின் உடல் அழகு குறித்த தாழ்வு மனப்பான்மை உள்ளது. இதன் விளைவாக அவர்கள் செக்ஸ் வாழ்வில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கின்றனர்,” என்று ரிலேட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேநேரம், “மில்லினியல் தலைமுறையினர் வளர்ந்த காலத்தில், இணையதள தொழில்நுட்பமும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வந்தது.

பல்வேறு இணையதள சேவைகளைப் பயன்படுத்துவதில் நன்கு பரிச்சயமான இந்தத் தலைமுறையினரில் சிலர், தமது இணையுடன் உடலுறவு கொள்வதைவிட, இணையதளங்களில் ஆபாச படங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைபவர்களாக உள்ளனர்,” என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பாலியல் சிகிச்சை நிபுணர் ஸ்டீபன் ஸ்னைடர்.

செக்ஸ் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

போட்டிகள் அதிகம் நிறைந்த இன்றைய நவீன உலகில், ஒருவரை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் காரணிகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. சமூக ஊடகங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களின் ஆதிக்கத்தையும் முற்றிலும் அழித்துவிட முடியாது.

அப்படியானால், இந்தக் காரணங்களால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து, அதன் விளைவாக திருமண வாழ்க்கை, பாலியல் உறவில்லாமல் மாறி வருவதை எப்படித் தடுப்பது?

கணவன் -மனைவி இருவருக்கும் திருப்திகரமான உடலுறவை மேற்கொள்வதில் விருப்பமும், ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும் என்பதுடன், தங்களுக்கான விருப்பங்கள் மற்றும் எல்லைகளை உணர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாகத் திகழவேண்டும்.

தம்பதிக்கு இடையே அவ்வப்போது உடலுறவு நிகழ்கிறதா என்பதைவிட, இந்த உறவில் நெருக்கமும், மகிழ்ச்சியும் இருக்கிறதா என்பதே மிகவும் முக்கியம் என்கிறார் உளவியல் ஆலோசகர் ஷிவானி மிஸ்ரி சாது.

உறவு முறையில் நல்ல தொடர்பு, இன்பம், திருப்தி, முழுமை உணர்வு இருப்பதே சிறப்பான செக்ஸ் வாழ்க்கை என்கின்றனர் நிபுணர்கள்.

ஆனால் உண்மையில், ஒருவர் தன் வாழ்க்கைத் துணையுடனான உடலுறவில் ஆர்வமில்லாமல் இருக்கிறார் என்பது அவர் தமது இணையுடன் பேசுவதைத் தவிர்க்க கையாளும் ஓர் உத்தியாகவும் இருக்கலாம் என்கின்றனர் பாலியல் சிகிச்சை நிபுணர்கள்.

இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் இளம் தம்பதி, இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு உடனே உளவியல் ஆலோசகரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: