You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரேகா பாய்: நடன மங்கையை இரும்பு பெண்மணியாக மாற்றிய 'கோத்தா' வாழ்க்கை
- எழுதியவர், செரிலன் மோலன்
- பதவி, பிபிசி நியூஸ்
"நான் இருட்டில் நடனமாடினேன். அந்த இருட்டறைக்குள் மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் நடன நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கு தான் எனது விதி என்று நம்பினேன்."
அது 1962ம் ஆண்டு. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக போர் வெடித்ததை அடுத்து அப்போது இந்திய அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தது.
நகர்ப்புறங்களில் எங்கு பார்த்தாலும் சைரன் ஒலிகள் கேட்டன. பல நாட்கள் மின்தடை தொடர்ந்தது. இது போன்ற நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியதால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கினர். இதுமட்டுமில்லாமல் எப்போது என்ன நடக்குமோ என்ற நிலை தொடர்ந்ததால் எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றியது.
ஆனால் ரேகாபாய் தனது விதியை உயிர் பயமும், இது போன்ற சூழல்களும் நிர்ணயிக்க அனுமதிக்கவில்லை. அந்த நடன மங்கை, பிற நடன மங்கைகளைப் போல் தொழிலையும் கைவிடவில்லை. ஒவ்வொரு இரவிலும் அழகான சேலை அணிந்து, தனது கோத்தாவில் தன்னை நாடி வரும் ஆண்களுக்காக பாட்டு பாடி, நடனமாடுவதைத் தொடர்ந்தார். கோத்தா என்பது, ஆண்களுக்காக ஒரு பெண் நடனமாடி மகிழ்விக்கும் இடத்தைக் குறிக்கும் இந்திச் சொல் ஆகும்.
வாழ்க்கையில் வேதனைகளும், கஷ்டங்களும் பெரும்பாலும் நல்ல வாய்ப்புகளுக்கான நுழைவாயில் அல்லது குறைந்தபட்சம் உயிர்வாழ்வதற்கு வழிவகுக்கும் என ரேகாபாயின் வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ரேகாபாயின் கொந்தளிப்பான வாழ்க்கை, இப்போது அவரது மகன் மணிஷ் கெய்க்வாட் எழுதியுள்ள 'கடைசி நடன மங்கை - என் தாயின் சுயசரிதை' (The Last Courtesan - Writing My Mother's Memoir') என்ற புத்தகத்தின் கருப்பொருளாக உள்ளது.
"என் அம்மா எப்பொழுதும் தன் கதையை அனைவருக்கும் சொல்ல விரும்புவார்," என்று கெய்க்வாட் கூறுகிறார். மேலும், "அதை விவரிப்பதில் எனக்கு எந்த அவமானமும் சங்கடமும் ஏற்படவில்லை. எனது குழந்தைப் பருவத்தின் பிற்பகுதி வரை அவருடன் கோத்தாவில் வாழ்ந்ததால், அவரது வாழ்க்கை குறித்து எனக்கு எல்லாம் தெரியும். எதுவும் ரகசியம் கிடையாது," என்கிறார்.
"கோத்தாவில் வளர்வதால், ஒரு குழந்தை தனக்குத் தேவையற்ற காட்சிகளைக்கூட பார்க்கிறது என்பதை என் அம்மா அறிந்திருந்தார். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை," என்கிறார் கெய்க்வாட். அவரது புத்தகம், அவரது அம்மா அவரிடம் தெரிவித்த நினைவுகளிலிருந்து எழுதப்பட்டது. 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு இந்திய நடன மங்கையின் வாழ்க்கையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்களுடன் தகவல்களைக் கொண்டிருகிறது இந்தப் புத்தகம்.
புகழ்பெற்ற கலாச்சாரங்களில் 'தவைஃப்கள்' என்று அழைக்கப்படும் நடன மங்கைகள், இந்தியத் துணைக் கண்டத்தில் கிபி 2ம் நூற்றாண்டிலிருந்து இருந்துள்ளனர் என்று ஒடிசி நடனக் கலைஞரும், 'Courting Hindustan: The Consuming Passions of Iconic Women Performers of India' என்ற நூலின் ஆசிரியருமான மதுர் குப்தா கூறுகிறார்.
"அவர்கள் அரச குடும்பத்தினர் மற்றும் கோமான்களை மகிழ்வித்து மகிழ்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்," என்று குப்தா கூறுகிறார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வருவதற்கு முன்பு, இந்த நடன மங்கைகள் மரியாதைக்குரிய கலைஞர்களாக பார்க்கப்பட்டனர் என்றும், அவர்கள் கலைகளில் உயர் பயிற்சி பெற்றவர்கள் என்றும், செல்வந்தர்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த போது மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களிடம் ஆதிக்கம் செலுத்துமளவுக்கு இருந்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
"ஆனால் அவர்களை ஆண்கள் மற்றும் சமூகத்திடமிருந்து சுரண்டலை அனுபவித்தனர்," என குப்தா கூறுகிறார். ஆங்கிலேயர்கள் அவர்களை "நாட்ச் கேர்ள்கள்" (நடன மங்கைகள்) அல்லது வெறும் பாலியல் தொழிலாளர்கள் என்று கருதியதால் இந்த நடைமுறையைத் தடுக்கும் நோக்கில் சட்டங்களை இயற்றினர். இதைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த நடன மங்கை கலாச்சாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவர்களின் நிலை மேலும் சரிந்தது. பல நடன மங்கைகள் தங்களது வாழ்க்கையை நடத்திச் செல்ல பாலியல் தொழிலுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்த நடைமுறை முற்றிலுமாக அழிந்து விட்டது. ஆனால் புகழ்பெற்ற நடன மங்கைகளின் கதைகள் மற்றும் அவர்களின் கவர்ச்சிகரமான வாழ்க்கை குறித்த தகவல்கள் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் திருமபத் திரும்பச் சொல்லப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு கதைதான் ரேகாபாய் கதை.
புனேவின் மேற்கு நகரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 10 உடன்பிறந்தவர்களில் ஆறாவது பெண்ணாகப் பிறந்தார் ரேகாபாய். அவருக்கு அவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து சரியான ஆண்டு அல்லது தேதி நினைவில் இல்லை. பிறந்த நேரம் பற்றி மங்கலாக அவருக்கு நினைவிருக்கிறது. ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றதால் சோர்வடைந்த அவரது தந்தை, குடிபோதையில் அவரை குளத்தில் மூழ்கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவருக்கு 9 அல்லது 10 வயது ஆனபோது, குடும்பக் கடன்களைத் தீர்ப்பதற்காக அவர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். பின்னர் அவரது மாமனார் வீட்டினரால் கிழக்கு கொல்கத்தா நகரத்தின் பவ்பஜார் பகுதியில் உள்ள ஒரு கோத்தாவுக்கு விற்கப்பட்டார்.
அவர் நடனப் பயிற்சியைத் தொடங்கிய போது அவருக்கு வெறும் பத்து வயது தான். இப்பயிற்சியின் போது, பாடவும், நடனமாடவும் அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய வாழ்க்கையும், சம்பாத்தியமும் அங்கே ஏற்கனவே நடன மங்கையாக இருந்த ஒரு பெண் உறவினர் பொறுப்பில் இருந்தது.
இந்தியா-சீனா போரின் போது, அந்த உறவினர் பெண் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதைத் தொடர்ந்து ரேகாபாய் தனது சொந்த வாழ்க்கையை பொறுப்பேற்று நடத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது இரவு நேர நடன நிகழ்ச்சிகள் அவர் சுதந்திரமாக இருக்க உதவின. மேலும், அவர் தைரியமாக இருந்தால், தனது சொந்த வாழ்க்கையைத் திறம்பட நடத்திச் செல்ல முடியும் என்பதையும் உணர்ந்துகொண்டார்.
இதுவே அவரது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கொள்கையாக இருந்தது. ரேகாபாய், உம்ராவ் ஜான் மற்றும் பகீசா படங்களில் நடித்த பாலிவுட்டின் பிரபல பாலிவுட் நடிகைகளைப் போல் இல்லாமல், எப்போதும் ஒரு ஆணைச் சார்ந்திருக்காத வாழ்க்கையை நடத்தினார். சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்களில் தொடங்கி, பணக்கார ஷேக்குகள் மற்றும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் வரை அவர் திருமணம் செய்ய ஏராளமான ஆண்கள் இருந்தும், ஒரு போதும் மறுமணம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஏனென்றால், அவர் திருமணம் செய்துகொண்டால் கோத்தாவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பதை அவர் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார்.
கோத்தா - அவர் வாழ்ந்த, நடன நிகழ்ச்சிகளை நடத்திய, குழந்தையை வளர்த்த, மற்றும் வெவ்வேறு காலங்களில் அவரது குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிறிய இடம் - அவருக்கு சுதந்திரம் மற்றும் சக்தியை அளிக்கும் அடையாளமாக மாறியது.
இருப்பினும், அது மோதல்கள் மற்றும் கஷ்டங்கள் நிறைந்த இடமாக இருந்தது. பெரும்பாலும் அங்கு நிலவிய சூழ்நிலைகள் மிக மோசமான அனுபவங்களைத் தரும் விதமாகவே இருந்தன.
கெய்க்வாட் தனது புத்தகத்தில் அவரது தாயார் கூறும் சில ஆழமான, துயரமான நினைவுகளை விவரிக்கிறார். ஒரு குற்றவாளி ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள ரேகாபாயை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
மற்றொரு இடத்தில், ரேகாபாய் தனது வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற நடன மங்கைகளிடம் இருந்து தான் எதிர்கொண்ட கொடுமைகளை விவரிக்கிறார். அவரது அறைக்கு வெளியே குண்டர்களை அனுப்பி சிலர் அவரை மிரட்ட முயன்றனர்; மற்றவர்கள் அவரை ஒரு விலை மாது என்று அழைத்தார்கள் என்பதை கெய்க்வாட் கூறியுள்ளார்.
ஆனால் கோத்தா வாழ்க்கை அவரை ஒரு இரும்புப் பெண்ணாக மாற்றியது. அதன் பின், ஒரு நடனக் கலைஞராக அவர் தனது முழுத் திறமையைக் கண்டுபிடித்தார். இதுமட்டுமின்றி அவருடைய பாதுகாப்பின்மையைப் பயன்படுத்தி அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள், மிரட்டல் விடுத்தவர்கள் என அனைத்து பிரச்னைகளிலிருந்தும் தப்பும் சக்தியைக் கண்டறிந்தார். தனிப்பட்ட முறையில் ஏற்படும் மனச்சோர்வை வெல்வது எப்படி என்பதையும் அவர் கண்டறிந்தார்.
ஆண்களை அவருடன் பழகிய விதத்தைக் கொண்டே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்டறியத் தெரிந்துகொண்ட ரேகாபாய், சிக்கலான நேரங்களில் அவர்களைக் கையாளவும் கற்றுக்கொண்டார். அதே நேரம் அவருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்களை கடுமையாக எதிர்த்துப் போராடவும் தனது சக்தியை வளர்த்துக்கொண்டார்.
"நான் கோதாவின் மொழியில் பேச முழுமையாக தேர்ச்சி பெற்றிருந்தேன். தேவைப்பட்டால் நான் பேச வேண்டும் என்பதையும் நன்றாகப் புரிந்துவைத்திருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இந்த வசீகரமான கோதாவில் புத்திசாலித்தனமான நடன கலைஞராக விளங்கிய, ரேகாபாய் தனது மகனுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க அவரால் முடிந்த அனைத்தையும் செய்துவந்தார். மேலும், தனது மகனுக்கு ஒரு கண்ணியமான, கடுமையான, ஆனால் பாதுகாப்பான தாயாக மாறுவதையும் அவர் கண்டார்.
ஒரு குழந்தையாக, அவர் தனது மகனை கோத்தாவில் தனக்கு நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை அழும் சத்தம் கேட்டால் நடன நிகழ்ச்சிக்கு இடையே ஓடிப்போய் பார்த்து, அதற்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததை ரேகாபாய் நினைவுகூர்ந்தார்.
பின்னர், அவர் அந்தக் குழந்தையை ஒரு உறைவிடப் பள்ளிக்கு அனுப்பினார். சில ஆண்டுகள் கழித்து அவரது மகன் தனது நண்பர்களை அழைத்துவருவதற்கென்றே ஒரு வீட்டையும் வாங்கினார் ரேகாபாய்.
தன் மகன் வளர்ந்து வந்த நிலையில், அந்த ஆங்கில வழிக்கல்வி கற்றுக்கொடுக்கும் உறைவிடப் பள்ளியின் நேர்த்தியான வளர்ப்பு, உடன் பழகிய மாணவர்கள் என அனைத்தும் ரேகாபாய்க்கு பெருமை அளிக்கும் விதத்தில் இருந்தன. மேலும், அந்தப் பள்ளியில் கோத்தாவில் இருந்த சூழ்நிலைகளுக்கு முற்றிலும் மாற்றான சூழ்நிலை இருந்ததால் அதுவும் அவருக்கு மனநிறைவை அளித்தது.
இதயத்தைத் தூண்டும் வகையில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த ரேகாபாய், ஒரு முறை தனது மகன் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது தான் சாப்பிட ஒரு அழகான கரண்டியும், முற்கரண்டியும் கேட்டபோது, அவற்றை வாங்கிக் கொடுத்தது பற்றிக்கூறினார்.
"எனக்கு முட்கரண்டியைப் பற்றித் தெரியும். ஆனால் அதன் ஆங்கிலப் பெயரை நான் அதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. அது என்ன என விளக்கிய போது, கடைக்குச் சென்று அதை வாங்கி வந்தேன்," என்று ரேகாபாய் கூறியதாக இந்த புத்தகத்தில் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டுக்குப் பின் இந்த 'நடன மங்கை' கலாச்சாரம் படிப்படியாக முற்றிலும் மறைந்துவிட்டது. ரேகாபாய் கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் வசிக்க கோத்தாவை விட்டு வெளியேறிய காலம் அது.
அவர் ஒரு பிப்ரவரி மாதம் மேற்கு மும்பையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கெய்க்வாட் தனது தாயார், அவரது துணிவு, திறமை மற்றும் வாழ்க்கையின் மீதான ஆர்வம் ஆகியவை குறித்து எப்போதும் பிரமிப்புடன் இருந்து வந்ததாகக் கூறுகிறார்.
"ஆண்கள் இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் படிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றும், மேலும், "இந்திய ஆண்கள் தாய் என்பவர் எப்போதும் தூய்மையின் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அவரைச் சுற்றிக் கட்டமைக்கிறார்கள்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"ஆனால், இந்த புத்தகம் மக்கள் தங்கள் தாய்களின் தனித்துவத்தை அடையாளம் காணவும், அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், பிள்ளைகளிடம் அவர்கள் ஒரு சுதந்திரமான உறவைப் பேணவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவும் உதவும் என்று நம்புகிறேன்," என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்