You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'யாசிதி' பெண்களை அடிமைகளாக விற்கும் ஐ.எஸ். - 3 குழந்தைகளுடன் சிக்கிய பெண்ணின் திகில் அனுபவம்
- எழுதியவர், ரேச்சல் ரைட்
- பதவி, பிபிசி உலக சேவை
கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது.
அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை.
நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர்.
வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன்பு நுழைந்த ஐ.எஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட பல யாசிதி பெண்களில் பஹாரும் ஒருவர். ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக இராக்கில் வாழும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யாசிதிகள் ஐ.எஸ் போராளிகளால் ‘காஃபிர்’களாகக் (இஸ்லாத்துக்கு எதிரானவர்களாக) கருதப்பட்டனர்.
அவரது கணவர் மற்றும் மூத்த மகன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சுடப்பட்டு கூட்டுப் புதைகுழியில் புதைக்கப்பட்டதாக பஹார் நம்புகிறார்.
தானும் தனது மூன்று குழந்தைகளும் ஒரு அறையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டபோது, ஐ.எஸ். போராளிகளால் தங்களின் தலைத் துண்டிக்கப்படும் என்று எண்ணி தாங்கள் அழுத தருணத்தை பஹார் நினைவுகூர்ந்தார். ஆனால் அவர்கள் எண்ணியதற்கு மாறாக, நான்கு பேரும் விற்கப்பட்டதால் அவர்களின் தலை தப்பியது.
ஆனால், அதன் பிறகுதான் அவர்களின் வாழ்வில் திகில் பயணம் தொடங்கியது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் தான் அவர்களின் சொத்தாகவே மாறிவிட்டதாக கூறுகிறார் பஹார். “தேவைப்பட்டால் அவர்களின் மனைவியை போல் பணிவிடைகள் செய்ய வேண்டும். அவர்கள் ஆத்திரத்தில் அடித்தால் அதையும் வாங்கி கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.
ஐ.எஸ். அமைப்பினர் தம்மை கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 10 வயதுக்குட்ட தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தினர் என்கிறார் அவர். அவரது ஒரு மகள் துப்பாக்கியால் தாக்கப்பட்டார் என்றும் கூறுகிறார் பஹார்.
பஹார் நான்காவது முறையாக அபு கட்டாப் எனும் துனிசிய தேசத்தைச் சேர்ந்தவருக்கு விற்கப்பட்டார். அவர் தன் குழந்தைகளுடன் அபுவின் வீட்டில் தங்கியிருந்தபோது, இரண்டு ஐ.எஸ். தளங்களில் துப்புரவு பணியை மேற்கொள்ள பணிக்கப்பட்டார். அபு கட்டாப்பின் கட்டளைப்படி துப்புரவுப் பணி மேற்கொண்ட இடங்களில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
“நான் பணிபுரிந்த பகுதியில் அவ்வப்போது விமானத் தாக்குதல்கள் நடந்தன. ஐ.எஸ்.அமைப்பினர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆயுதங்கள் பெற்றுக் கொள்வார்கள் அல்லது குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க மறைந்திருப்பார்கள். அதுவொரு பயங்கரமான கனவை விட மோசமான தருணம்,” என்கிறார் பஹார்.
இதனிடையே, ஒரு நாள் பஹாரும், அவரது குழந்தைகளும் அபு கத்தாபின் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் அருகே கறுப்பு ஜன்னல்களை கொண்ட வெள்ளை நிற கார் வந்து நின்றது. நீண்ட தாடியுடன் கருப்பு நிறத்தில் உடை அணிந்த காரின் ஓட்டுநர் பார்ப்பதற்கு ஐ.எஸ். பயங்கரவாதி போலவே இருந்தார்.
அவரை பார்த்ததும் தானும், தன் குழந்தைகளும் மீண்டும் வேறு யாருக்கோ விற்கப்பட போவதாக பஹார் உணர்ந்தார். அந்த சூழலை மீண்டும் எதிர்கொள்ள விரும்பாத அவர், தன்னைக் கொன்று விடுமாறு அந்த நபரிடம் கத்தினார்.
ஆனால் அதன்பின் நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
அவர்கள் காரில் பயணித்து கொண்டிருந்தபோது, “உன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று பஹாரிடம் கார் ஓட்டுநர் கூறினார். பஹருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை அல்லது அந்த நபரின் வார்த்தையை அவர் நம்பவில்லை. அவர் வெறித்தனமாக கத்த ஆரம்பித்தார். உடனே காரை நிறுத்திய ஓட்டுநர், யாரையோ போனில் அழைத்து, அவரிடம் பஹாரை பேச சொன்னார்.
பல பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்க ஏற்பாடு செய்த அபு ஷுஜாவின் குரல் செல்ஃபோனில் ஒலித்தது. தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றும் நோக்கத்தில் காரின் ஓட்டுநர் தங்களை விலைக்கு வாங்கிவிட்டதை பஹார் அப்போது உணர்ந்தார்.
சிரியாவில் ரக்கா எனும் இடத்திற்கு அருகில் உள்ள ஓர் கட்டுமான தளத்திற்கு பஹர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை இறக்கிவிட்ட கார் ஓட்டுநர், ஒரு நபர் உங்களை தேடி வருவார். ‘சயீத்’ என்ற குறியீட்டு வார்த்தையை செல்ல வேண்டும் என்று பஹாரை ஓட்டுநர் அறிவுறுத்திவிட்டு சென்றார். அவர் அறிவுறுத்தியதை போலவே சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் அங்கு வந்தார்.பஹர் மற்றும் அவரின் மூன்று குழந்தைகளையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொள்ளும்படி அவர் பணித்தார்.
அத்துடன், “ தாங்கள் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் இருப்பதால் போகும் வழியில் சோதனைச் சாவடிகள் வரும். அங்கு பணியில் இருப்பவர்கள் வாகனத்தை நிறுத்தி, உங்களிடம் ஏதாவது கேட்டால், நீங்கள் எதுவும் பேசக்கூடாது. அப்படி பேசினால் உங்களை அவர்கள் யாசிதிகள் என்று அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள்” என்று அந்த நபர் பஹருக்கு அறிவுறுத்தினார்.
இராக்கின் யாசிதிகளுக்கு என்ன ஆனது?
2017 இல் ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்டதில் இருந்து அரண்டு போயிருந்த யாசிதி சமூகம் அடிமைத்தனத்தில் இருந்த மீள முயன்று வருகிறது. ரேச்சல் ரைட் அறிக்கையின்படி, இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாசிதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் \முகாம்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அந்த நபர் தங்களை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றதாக பஹார் கூறினார். “அந்த வீட்டில் இருந்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாக இருந்தனர். நாங்கள் அங்கு நன்றாக குளித்தோம். அவர்கள் எங்களுக்கு உணவு பரிமாறியதுடன், வலி நிவாரணிகளையும் அளித்தனர். இப்போது நீங்கள் பாதுகாப்பான நபரின் கைகளில் இருக்கிறீர்கள் என்று அவர்கள் கூறினார்கள்” என ஐ.எஸ். பிடியில் இருந்து தப்பித்த தருணத்தை விவரித்தார் பஹர்.
அந்த வீட்டில் இருந்த மற்றொரு நபர், பஹர் மற்றும் அவரின் குழந்தைகளின் படங்களை எடுத்து அபு ஷுஜாவுக்கு அனுப்பினார். பின்னர் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் பஹர் மற்றும் அவரது குழந்தைகள் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு வேறொரு இடத்திற்கு செல்ல புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டனர். பஹார் யாருடைய வீட்டில் தங்கியிருந்தாரோ அந்த வீட்டின் நபர், தனது தாயின் அடையாள அட்டையை அவரிடம் கொடுத்து, பயணத்தின் வழியில் யாராவது நிறுத்திக் கேட்டால், மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூற வேண்டும் என்று அந்த நபர் அறிவுறுத்தினார்.
“பல ஐ.எஸ். சோதனைச்சாவடிகளை கடந்து நாங்கள் பயணித்தோம். ஆனால் வழியில் யாரும் எங்களைத் தடுக்கவில்லை” என்று பஹார் கூறினார்.
திகில் நிறைந்த அந்த பயணத்தின் முடிவில் அவர்கள் இராக் -சிரியா எல்லையில் அமைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தனர். அங்கு தான் அபு ஷுஜா மற்றும் அவரது சகோதரர்களை பஹர் முதன்முறையாக சந்தித்தார்.
“நான் அப்போது மூர்ச்சையாகும் நிலையில் இருந்தேன். அதன் பிறகு நிகழ்ந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை” என்கிறார் பஹார்.
வடக்கு இராக் பகுதியில் அமைந்துள்ள சின்ஜார் மாவட்டத்தை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றிய பிறகு, அந்தப் பகுதியை சேர்ந்த 6,400க்கும் மேற்பட்ட யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் விற்கப்பட்டதாக கருதப்படுகிறது. அத்துடன் 5000 யாசிதிகள் கொல்லப்பட்டனர். ஐ.நா. இதை ஓர் இனப்படுகொலை என்று கூறுகிறது.
ஆன்லைனில் விற்கப்படும் பெண்கள்
பஹாரின் மீட்புக்கு ஏற்பாடு செய்த அபு ஷுஜா மட்டும், ஐ.எஸ்.குழுவால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை.
ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்த தொழிலதிபரான பஹ்சாத் ஃபஹ்ரான். யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காகவும், ஐ.எஸ். போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்யவும் ‘கின்யாத்’ என்ற மீட்புக் குழுவை உருவாக்கினார்.
கடத்தப்பட்ட யாசிதி பெண்களையும், குழந்தைகளையும் ஐ.எஸ். அமைப்பினர் ஆன்லைனில், குறிப்பாக டெலிகிராமில் வாங்கி விற்பதாக கின்யாத் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த ஆன்லைன் குழுக்களில் மாற்று பெயரிலோ, ஐ.எஸ் போராளிகளின் பெயரிலோ நாங்கள் ஊடுருவுவோம் என்று பஹ்சாத் கூறினார்.
இராக்கில் குர்திஷ் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தின் சுவரில் இடம்பெற்றிருந்த, டெலிகிராம் ஆன்லைன் அரட்டைகளின் ஸ்கீரின் ஷாட்களை அவர் சுட்டிக்காட்டினார். அவற்றில் இடம்பெற்றிருந்த ஓர் ஆங்கில உரையாடலில், “12 வயதுடைய பெண் கன்னி இல்லை; ஆனால் அழகானவள்” என்று ஒரு விளம்பரம் இடம்பெற்றிருந்தது. சிரியாவின் ரக்கா பகுதியில் உள்ள அவரின் விலை 13 ஆயிரம் டாலர்கள் ((£10,000) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சோபாவில் ஒரு மாடல் அழகியைப் போல் சாய்ந்து அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் படத்தை பஹ்சாத் காட்டினார்.
மீட்பு முயற்சிகள் எப்படிப்பட்டவை?
டெலிகிராமில் நிகழ்த்தப்படும் உரையாடல் மூலம் யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரங்கள் தங்களுக்கு தெரிய வரும் என்று பஹ்சாத் கூறுகிறார். நாங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை தொடர்புக் கொண்டு இந்தக் குழந்தைகளைத் தேடச் சொல்வோம்.
ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அதிகம் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதால் அவர்களை கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.
“கடந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் அவரை மீட்பது குறித்த தகவல் அனுப்பப்படும், இதன் மூலம் ஒரு சிறுவனை மீட்கும்போது நாங்கள் உண்மையானவர்கள் என்று அவர்களுக்கு உணர்த்த இயலும் என்கிறார்” அவர்.
“நாங்கள் குடும்பங்களையும், குழந்தைகளுடன் இருக்கும் பெண்களையும் மீட்கும்போது, அவர்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்பதையும், அவர்கள் தனியாக இருக்கும்போது அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும் தொடர் குறியீடுகள் அல்லது சமிக்ஞைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது” என்றும் கூறுகிறார் பஹ்சாத்.
அடிமைகளை மீட்பதற்கான இந்த செயல்முறை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறுபட்டதாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையும் ஐ.எஸ். சோதனைச் சாவடிகள் மூலம் போலி ஆவணங்கள் மற்றும் பணத்தை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது.
ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் யாசிதிகள் நுழைவது மிகவும் ஆபத்தான செயலாக இருந்தது. எனவே சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட மதுபானங்கள் கடத்தலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் கடத்தல்காரர்களை கின்யாத் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
“ அவர்கள் எல்லாவற்றையும் பணத்திற்காக செய்தார்கள் பணம் மட்டுமே கடத்தல்காரர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. பெண்களை திரும்ப மீட்பதற்காக பலருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது” என்கிறார் பஹ்சாத்.
கின்யாத் குழுவின் கூற்றுப்படி சுமார் 6,417 யாசிதிகள் ஐ.எஸ். அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் 3,568 பேர் தப்பியோடிவிட்டனர் அல்லது மீட்கப்பட்டனர். பஹ்சாத் மட்டுமே 55 பேரை மீட்டுள்ளார்.
ஆனால் ஐ.நா. ஆதரவுடைய, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ICM) கூற்றுப்படி, மொத்தம் 2700க்கும் மேற்பட்ட யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னும் காணவில்லை. அவர்களில் பலர் இன்னமும் கடத்தல்காரர்களின் வசமே இருக்கலாம்.
ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பிறகு, அதில் இருந்த போராளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். சிலர் துருக்கி, இராக், சிரியாவுக்கும், இன்னும் சிலர் ஐரோப்பாவிற்கும் சென்றனர். இதனால் அவர்களிடம் அடிமைகளாக இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி மேலும் மேலும் சிக்கலானது என்று பஹ்சாத் கூறுகிறார்.
“ஐந்து அல்லது ஆறு வயதுடைய யாசிதி குழந்தைகளையும் நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் தங்களின் மொழி அல்லது தாங்கள் யார் என்பதை கூட மற\த்துவிட்டார்கள். அவர்களுக்கு யாசிதி என்பது பற்றி எதுவும் தெரியாது. அத்துடன் தங்கள் குடும்பத்தை கூட அவர்கள் மறந்துவிட்டார்கள்” என்கிறார் பஹ்சாத்.
'நடைபிணமாக வாழ்கிறேன்'
யாசிதி மக்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
“யாசிதிகள் பல நூற்றாண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் விளைவாக, தாங்கள் மதம் மாற வேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்பதே அவர்களில் பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. அதனால் தான் ஐ.எஸ். அமைப்பு என்பது அதன் இன்றைய நிலையை தாண்டி யாசிதிகளுக்கு ஒரு பயமாகவே இருப்பதாக கருதுகிறோம்” என்கிறார் யாசிதிகளுக்கான மிகப்பெரிய ஆலோசனை அமைப்பான யஸ்தாவின் தலைவர் ஹைதர் எலியாஸ்.
சின்ஜாரில் உள்ள தங்களின் வீடுகளை விட்டு சுமார் 300,000 யாசிதிகள் வெளியேறினர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பஹாரை போன்றவர்கள். அவர்கள் இன்னமும் இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள கூடார முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சின்ஜார் மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டால், யாசிதிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாத அவலநிலை உள்ளது.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக களமிறங்கிய போராட்டக் குழுக்கள், தங்களில் யார் பெரியவர்கள் என்று அதிகாரத்தை நிலைநாட்ட தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இராக் -சிரியா எல்லையில் அமைந்துள்ள யாசிதிகள் வாழ்ந்து வந்த பகுதி பதற்றம் நிறைந்த பிராந்தியமாக மாறியுள்ளது.
எந்த நேரமும் தாங்கள் இன்னொரு படுகொலைக்கு ஆளாக நேரிடுவோம் என்ற அச்சம் யாசிதி சமூகத்தினரை பீடித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்கிறார் எலியாஸ். “அவர்கள் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிகவும் முக்கியம்” என்கிறார் அவர்.
பஹாரை மீட்பதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர்கள் (£16,000) செலவானது. அவருக்கு இப்போது 40 வயது ஆகிறது. ஆனால் அவர் அதிக வயதானவராக தெரிகிறார். அவரின் தலைமுடி பெரும்பாலும் நரைத்திருக்கிறது.
2015 இல், ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து மீட்கப்பட்டதில் இருந்து எட்டு ஆண்டுகளாக அவர் முகாமில் தான் வாழ்ந்து வருகிறார். தரையில் விரிக்கப்பட்டுள்ள மெல்லிய மெத்தையில் அமர்ந்தபடி, காணாமல் போன தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வெறித்து பார்த்தபடி அவரின் பெரும்பாலான நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தன் கணவருக்கும், மூத்த மகனுக்கும் என்ற நேர்ந்தது என்று பஹருக்கு உறுதியாக தெரியவில்லை. ஐ.எஸ். அமைப்பின் மூலம் பலமுறை விற்கப்பட்டபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் உடல் மற்றும் மனரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய மூன்று குழந்தைகளும் இன்னும் அவருடனே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளின் விளைவாக ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எந்த நேரமும் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார்கள் என்றார் பஹார்.
என் மகளை அவர்கள் அடித்ததால் உண்டான காயங்கள் இன்னும் உள்ளன எனக் கூறும் அவர், “நான் தொடர்ந்து போராடி வாழ்வில் முன்னேற வேண்டும் தான். ஆனால் தற்போது ஓர் நடைபிணம் போலவே வாழ்ந்து வருகிறேன்” என்று பஹார் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்