குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி இடையே இடைவெளி விழுமா? ஆய்வில் புதிய தகவல்

    • எழுதியவர், ரவி பிரகாஷ்
    • பதவி, பிபிசி இந்திக்காக

ஒரு குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் ஒரு குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்கிறது.

அந்தக் குழந்தையை வளர்ப்பது குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும் திட்டமிடுவதிலும் குடும்பத்திலுள்ள அனைவரும் சுறுசுறுப்பாகி விடுகின்றனர்.

ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடன் கணவன் மனைவி இருவரிடையேயுள்ள நெருக்கத்தில் இடைவெளி வந்துவிடுகிறதா என்ற கேள்வியும் உள்ளது.

‘எங்களுக்குள் காதல் இருக்கிறது, ஆனால் முன்புபோல் இல்லை’

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மீனு சிங் எப்போதும் குழந்தைகளை மீது ஆசையாக இருப்பவர்.

ஆசிரியராக வேலை செய்யும் அவர், தனக்கு 2018 இல் திருமணம் நடந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்ததாகவும் கூறுகிறார்.

மகள் பிறந்தது மகிழ்ச்சியான விஷயமானாலும், அதன் பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நானும், எனது கணவரும் வேலைக்குச் செல்கிறோம். எங்கள் மகள் பிறந்த பிறகு, இருவரும் அவளது வளர்ப்பில் ஈடுபடுவதால், ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கிறோம். முன்பெல்லாம் அவர் கவனம் என் மீது மட்டும் இருந்தது. இப்போது வீட்டில் உள்ள எல்லோரும் அங்கள் மகள் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்," என்கிறார்.

"எங்கள் மகள் எல்லோருடைய அன்பையும் பெறுகிறாள். என் கணவர் அவளை நன்றாக கவனித்துக் கொள்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே முன்பு இருந்த விஷயம் இல்லை என்று தோன்றுகிறது."

"எங்களுக்குள் காதலே இல்லை என்பதல்ல. ஆனால் எங்கள் கவனம் இப்போது சிதறிவிட்டது," என்கிறார்.

‘குழந்தைக்குப்பின் உறவே மாறிவிட்டது’

பாட்னாவிலும் வசித்து வரும் ஷைலஜா ஓஜாவின் கதையும் இதே பொன்றதுதான்.

அவர் தனது கணவர் விவேக் ரஞ்சன் மற்றும் ஒரு வயது மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், ஆனால் மகன் பிறந்த பிறகு அவர்களது உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்.

ஷைலஜா ஓஜா பிபிசி ஹிந்தியுடன் பேசுகையில், “திருமணத்திற்கு முன்னும் பின்னும் எங்கள் வாழ்க்கை அற்புதமாக இருந்தது. எங்கள் உறவில் காதல் மட்டுமே இருந்தது. நாங்கள் 2021-ல் திருமணம் செய்துகொண்டோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்,” என்கிறார்.

"நான் கர்ப்பமாக இருந்தபோது, என் கணவர் என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டார், ஆனால் 2022-ல் எங்கள் மகன் பிறந்தவுடன், நிலைமை மாறியது. என் கணவர் என்மீது கவனம் செலுத்தவில்லை என்றால், நான் பயங்கரமாகக் கோபப்படுவேன். பின்னர், நாங்கள் எங்கள் உறவை மெதுவாகச் சரிசெய்துகொள்ள ஆரம்பித்தோம். ஆனால், இப்போது எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனம்," என்கிறார் ஷைலஜா.

‘குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்களே மகிழ்ச்சியாக உள்ளனர்’

குழந்தை பிறந்தவுடன் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2021-ம் ஆண்டில் போர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான்கில் ஒரு தாய் மற்றும் பத்தில் ஒரு தந்தை மனநலம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டடைந்திருக்கின்றனர்.

குழந்தைகளுடன் இருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருப்தி அடைவதையும் இந்த ஆய்வு அவதானித்திருக்கிறது.

அதே சமயம் குழந்தைகளைப் பெற்ற தம்பதியினரிடையே குழந்தை பிறந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து காதல் குறைந்து வருவதாகவும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. குழந்தை இல்லாத 62% பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளின் தாய்மார்களில் இந்த எண்ணிக்கை 38% ஆக மட்டுமே இருந்தது. இதற்கு ஒரு காரணம் அவர்கள் பாலுறவில் ஈடுபடும் அளவு குறைவது அல்லது அதன் தாக்கம் என்று கூறப்படுகிறது.

மன நோய் மற்றும் மன அழுத்தம்

குழந்தை பிறந்த பிறகு கணவன்-மனைவி உறவில் ஏற்படும் பாதிப்பால், பல தம்பதிகள் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள கான்கே மருத்துவமனையின் மத்திய மனநல மருத்துவக் கழகத்தின் (Central Institute of Psychiatry, Ranchi) இணைப் பேராசிரியர் டாக்டர். சஞ்சய் முண்டா, சில உணர்வுள்ள தம்பதிகள் கருத்தரித்த உடனேயே ஆலோசனைக்கு வருகிறார்கள் என்றும், இதனால் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவு மோசமாகப் பாதிக்கப்படாது என்றும் கூறுகிறார்.

டாக்டர் சஞ்சய் முண்டா பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “ஒரு குழந்தையின் பிறந்தவுடன் கணவன்-மனைவி இடையேயான உறவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த விளைவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கலாம். தற்காலத்தில் தனிக்குடும்பங்கள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற நேரங்களில் தம்பதிகளுக்கு அறிவுரை கூற குடும்பத்தில் வேறு யாரும் இல்லை. முதல் முறையாக பெற்றோர் ஆன தம்பதிகளுக்கு முன் அனுபவம் இல்லாததால் பதற்றம் அதிகரிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

“குழந்தை பிறந்த பிறகு, குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தம்பதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போது, அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும்போது, நாங்கள் அவர்களுக்கு மருந்துகளையும் கொடுக்கிறோம் வேண்டும், கவுன்சிலிங்கும் செய்கிறோம்,'' என்றார்.

“ஆலோசனைக்குப் பிறகு, அத்தகைய ஜோடியின் உடல் நிலையையும் மனநிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலைமையை சீராக்க முயற்சிக்கிறோம்," என்கிறார் அவர்.

தனிக் குடும்பங்கள்

ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் அனுஜ் குமார் கூறுகையில், தற்போது நியூக்ளியர் குடும்பங்கள் எனப்படும் தனிக்குடும்பங்களில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் உருவாவதாகக் கூறுகிறார்.

இன்றைய தம்பதிகள் சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பதும், கணவன்-மனைவி இருவரும் தஙக்ள் அலுவலக வேலையிலேயே அதிக கவனம் செலுத்துவதுமாகவும் இருக்கின்றனர். “இவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவில் மோசமான விளைவுகள் உருவாகின்றன," என்கிறார் மருத்துவர் அனுஜ் குமார்.

அவர் மேலும் கூறுகையில், முன்பு நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். குழந்தையைப் பார்த்துக் கொள்ள தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் இருந்தார்கள். இப்போது பெரும்பாலான மக்கள் தனிக் குடும்பமாக வாழ்கின்றனர்.

“இங்கு கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்துடன் அவர்கள் அலுவலக பணியிலும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் இருவரும் பணியில் இருந்தால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். இவற்றில் சூழ்நிலைகள், குழந்தை பிறந்த பிறகு, கணவன்-மனைவி இடையேயான உறவு மோசமாக பாதிக்கப்படுகிறது," என்கிறார்.

அவர் மேலும் பேசுகையில், "மனைவி குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணவன் விரும்புகிறான், மனைவிகள் கணவனிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். பிறகு எல்லாப் பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் குவிந்து, கடைசியில் அது சண்டையாகவும், சச்சரவாகவும் மாறுகிறது. குழந்தை பிறக்கும் முன்னரே எதிர் காலத்தை நன்றாகத் திட்டமிடுவது முக்கியம்,” என்கிறார்.

குழந்தைப்பேறு ஒவ்வொரு தம்பதியையும் பாதிக்கிறதா?

ஆனால், குழந்தைகள் பிறப்பது எல்லா தம்பதிகளின் வாழ்க்கையிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்பது இல்லை.

சில தம்பதிகள், தங்கள் உறவின் வலிமைக்கு குழந்தைகளும் காரணம் என்று சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஜோடியில் பாலிவுட்டின் பிரபல ஜோடியான சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூரும் இணைந்துள்ளனர்.

அவர்களது மகன் தைமூர் பிறந்த பிறகு அவர்களது பிணைப்பு வலுப்பெற்றதாக நம்புகிறார்கள்.

இது குறித்து கரீனா கபூர் 'பிரெக்னன்சி பைபிள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் தைமூர் பிறந்த பிறகு தங்களின் உறவு வலுப்பெற்றது எனவும், அவர்களுக்கிடையேயான காதல் மேலும் அதிகரித்தது, எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் புத்தகத்தில், கரீனா கபூர் கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: