You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் போலி ரயில் டிக்கெட்: வெற்று பேப்பரில் எழுதிக் கொடுத்ததை பயணிகள் நம்பியது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சென்னையில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்ட போலியான பயணச் சீட்டுகளை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப், நோட்பேடு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றியது எப்படி?
சென்னையில் உள்ள சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்களில் பயணச் சீட்டு எடுக்க வரும் பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியாக பயணச் சீட்டுகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதற்குப் பிறகு, சென்ட்ரல், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
இந்தநிலையில் 18ஆம் தேதியன்று நண்பகல் 12 மணியளவில் சென்னை சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள முன்பதிவு மையம் அருகே கையில் நோட்டுடன் வாலிபர் ஒருவர் திரிவதைப் பார்த்த ரயில்வே ரயில்வே காவல்துறையினர் அவரைப் படித்து விசாரித்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய சோதனையில், போலியான ரப்பர் ஸ்டாம்ப், நோட்பேடு ஆகியவை இருந்தது. பிறகு அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, அவர் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜிதேந்திர ஷா என்பதும் சில மாதங்களாக அவர் இதுபோல போலியான ரயில் டிக்கெட்களை விற்றுவருவதும் தெரியவந்தது.
போலி ரயில் டிக்கெட்களை விற்றது எப்படி?
சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் போன்ற கூட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வந்து, கூட்டத்தைப் பார்த்து திகைத்துப் போய் நிற்கும் பயணிகளை அணுகியுள்ளார். அவர்களிடம் தான் ரயில்வேயில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றுவதாகவும் அந்தப் பயணிகள் செல்ல விரும்பும் இடத்தைக் கேட்டு, அவர்களது பெயர், வயது, ரயில் பெயர், பயண தொகை ஆகியவற்றை கையால் எழுதி கையெழுத்திட்டுக் கொடுப்பார். அதற்குப் பிறகு தன்னிடமிருந்த "முதன்மை அதிகாரி, ஹைதராபாத், தெலங்கானா" என்ற ரப்பர் ஸ்டாம்பையும் பதித்து கொடுப்பார்.
ரயிலில் ஏறிய பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வரும்போது அந்தச் சீட்டைக் காண்பித்தால், அவர் இடத்தை ஒதுக்கீடு செய்வார் எனவும் ஜிதேந்திர ஷா கூறியிருக்கிறார். இதனை நம்பி இவரிடம் பலரும் பயணச் சீட்டுகளை வாங்கி ஏமாந்திருக்கின்றனர்.
போலி டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கு ரயிலில் என்ன நடக்கும்?
"அப்படி ஏமாந்தவர்கள் அடுத்தடுத்த ரயில் நிலையங்களிலேயே இறக்கிவிடப்பட்டனர். சிலர் மீண்டும் புதிய பயணச்சீட்டை வாங்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள். சிலர் எங்களிடம் புகார் அளித்தார்கள். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து இந்த நபரைப் பிடித்தோம்" என்கிறார் ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்.
தற்போது பிடிபட்டுள்ள ஜிதேந்திர ஷா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்