சீட் கிடைத்தும் மருத்துவ கல்லூரியில் சேராவிட்டால் 'நீட்' தேர்வு எழுத ஓராண்டு தடை - யாருக்குச் சாதகம்?

    • எழுதியவர், சாரதா
    • பதவி, பிபிசி தமிழ்

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் தற்போது மூன்றாம் கட்ட அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், 4வது மற்றும் இறுதிச் சுற்றான ஸ்ரே ரவுண்டில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யாவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கோட்டாவுக்கான இளநிலை மருத்துவ கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய கோட்டா மூலம் மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கலந்தாய்வுக் குழு நிரப்பும்.

மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்தும்.

இதுவரை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அகில இந்திய கலந்தாய்வில் முதல் இரண்டு சுற்றுகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

தளர்த்தப்பட்டுள்ள விதி என்ன?

அதாவது அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளின் பட்டியலைச் சமர்ப்பிக்கலாம். தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு கல்லூரிகளை வரிசைப்படுத்தலாம். இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் மாணவரும் எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அனைத்து மாணவர்களின் விருப்பப் பட்டியல்களும் கிடைத்த பிறகு, மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். எந்தக் கல்லூரி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இணையம் மூலம் மாணவருக்குத் தெரிவிக்கப்படும். இது விருப்பத் தேர்வு (choice based) முறை எனப்படும்.

முதல் சுற்றில் தங்களுக்கு விருப்பமான கல்லூரி கிடைக்கவில்லை என்றால், அதே மாணவர் இரண்டாவது சுற்றில் பங்கேற்கலாம். முதல் சுற்றில் செய்தது போலவே தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் பட்டியலை வரிசைப்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இரண்டு சுற்றுக்குப் பிறகு, மாப் அப் சுற்று நடைபெறும். இந்த சுற்றில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாமல் இருந்திருக்க வேண்டும். புதிதாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிபது போல கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் இந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு மூன்றாவது சுற்றிலும் மாணவர்கள் பங்கேற்று விருப்பமான இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு மாணவருக்கு, முதல் சுற்றில் கேரளாவில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆனால் அவருக்கு டெல்லியில் அல்லது மகாராஷ்ட்ராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசை என்றால், இரண்டாவது சுற்றில் அவர் பங்கேற்கலாம்.

அப்போது மகராஷ்ட்ராவில் அவருக்கு மருத்துவ இடம் கிடைத்தால் அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டாம் சுற்றில் இடம் கிடைக்காவிட்டால் அவர் கேரளாவில் கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படி, அந்த மாணவர் மாப் -அப் எனப்படும் மூன்றாவது சுற்றில் பங்கு பெற முடியாது. மகாராஷ்ட்ராவில் கிடைத்த இடத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே அவர் மூன்றாவது சுற்றில் பங்கேற்க முடியும்.

ஆனால் புதிய விதிகளின்படி, அந்த மாணவர், மகாராஷ்ட்ராவில் இடம் கிடைத்த பிறகும், டெல்லியில் மருத்துவ இடம் வேண்டி மூன்றாவது சுற்றில் பங்கேற்கலாம். அவருக்கு டெல்லியில் இடம் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மகாராஷ்ட்ராவில் இருக்கும் இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.

ஓராண்டு நீட் எழுத தடை

மேலும் மருத்துவ இடங்கள் வீணாவதைத் தவிர்ப்பதற்கு, இறுதிச் சுற்றில் இடம் கிடைத்து அந்தக் கல்லூரியில் சேராவிட்டால் அந்த மாணவர் ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க மேலும் ஒரு வாய்ப்பை இந்த விதி தருவதாகவும், மருத்துவ இடங்கள் விற்கப்படுவதை இது தடுக்கும் எனவும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரநாத் கூறுகிறார்.

“மூன்றாவது சுற்றில் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களைத் தேர்வு செய்துகொள்ள அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இல்லையென்றால் மாணவர்கள் மூன்றாவது கட்டமாக நடைபெறும் மாப் அப் சுற்றில் கலந்து கொள்ளத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது கடைசி சுற்று என்பதால் தனியார் கல்லூரி சீட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதும் இந்தச் சுற்றின்போது அதிகம் நடைபெறும். அதையும் இந்த அறிவிப்பு தடுக்கும்,” என்கிறார்.

மூன்றாவது சுற்று நடத்துவதற்குப் பதில், இரண்டாம் சுற்றின் இறுதியில் உள்ள இடங்களை மாநிலங்களுக்கு ஒப்படைத்தாலே இடங்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மன் தெரிவிக்கிறார்.

“இரண்டு சுற்று அகில இந்திய கலந்தாய்வுக்குப் பின், மீதமுள்ள இடங்களை மாநிலங்களுக்கு ஒப்படைத்து விடுவதே வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு அகில இந்திய கலந்தாய்வில் மீதமுள்ள இடங்களை மாநிலங்களுக்குத் தருவதில்லை.

அதனால் அந்த இடங்கள் வீணாகிவிடுகின்றன. இதைத் தவிர்க்க, கல்லூரியில் இடம் கிடைத்து சேராத மாணவர்கள் அடுத்த ஆண்டு நீட் எழுதக்கூடாது எனக் கூறுவது நியாயமற்றது. மத்திய அரசு மாநிலங்களிடம் இடங்களை ஒப்படைத்தாலே இடங்கள் வீணாவதைத் தவிர்க்க முடியும்,” என்கிறார் அவர்.

விருப்பத் தேர்வு (choice filling) அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுவதே மாணவர்களுக்குப் பெரும் மன உளைச்சலைத் தருகிறது என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். விருப்பத் தேர்வுக்கு பதில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்கிறார் அவர்.

“விருப்பத் தேர்வு முறை மிகவும் சிக்கலானது. ஒற்றை சாளர முறையில் (single window system) கலந்தாய்வு நடைபெறுவதே வெளிப்படையானதாக இருக்கும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் நாடு முழுவதும் எத்தனை இடங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது என்பது தெரியவரும்.

பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ரயில் டிக்கெட் முன்பதிவு ஒற்றை சாளர முறையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அரசு நினைத்தால் இந்த விஷயத்திலும் அதைச் செய்ய முடியும்,” என்கிறார் நெடுஞ்செழியன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: