You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் கொலையில் ஐவர் கைது: தங்கையே அக்காவை கொலை செய்தாரா?
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உள்ள மின்சார ரயில் நிலையங்களில் கடந்த 15 நாட்களில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ராஜியின் சகோதரி நாகவல்லியும் ஒருவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி (எ) ராஜேஷ்வரி(34), புறநகர் ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் வழக்கம்போல புதன்கிழமை இரவு (19.07.2023) சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சமோசா வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நான்கு பேர் ராஜேஸ்வரியை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அதே மின்சார ரயிலில் தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜியை மீட்ட மாம்பலம் ரயில்வே காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், அவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
யாரும் காப்பாற்ற முயலவில்லை - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
சம்பவத்தை நேரில் பார்த்த பூஜா என்ற இளம்பெண், சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாரும் காப்பாற்ற முயலவில்லை என வேதனை தெரிவித்தார்.
“நான் இருந்த நடைமேடைக்கு எதிர்புறம்தான் அவர் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அவர் தாக்கப்படுவதைப் பார்த்தவுடனேயே அலறினேன், கூச்சலிட்டேன். ஆனால், யாரும் அவரைக் காப்பாற்ற முயலவில்லை. வெட்டியவர்களில் ஒருவர் தப்பிச் செல்வதைப் பார்த்தேன். ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். அவர்கள் டி.நகரில் இருப்பதாகவும், விரைவில் வருவதாகவும் தெரிவித்தனர்,” என்றார் பூஜா.
நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு ரயிலில் பயணிக்கவே அச்சமாக இருப்பதாகக் கூறிய பூஜா, “காவல்துறையினருக்கு தாெலைபேசியில் அழைத்தபோது, அவர்கள் வேறு ஒரு எண்ணைக் கொடுத்து அங்கு புகார் தெரிவிக்கச் சொல்கிறார்கள்.
அவர்கள் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், யாரும் எடுக்கவில்லை. அவசரத்திற்கு அழைக்கும் ஒருவருக்கு எல்லாமே எப்படித் தெரிந்திருக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “ரயில் நிலையத்தில் அந்த நேரத்தில் போலீசாரே இல்லை. யாரை உதவிக்கு அழைப்பது என்றுகூடத் தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு போலீசாவது ரயில்நிலைய நடைமேடையில் இருந்தால், பாதுகாப்பாக உணரலாம்,” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய மாம்பலம் அரசு ரயில்வே போலீஸ்(Government Railway Police- GRP) அதிகாரிகள், குற்றவாளிகளின் அடையாளம் இன்னும் தெரியாததால், கொலைக்கான நோக்கத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
“கொலை செய்தவர்கள் அதே ரயிலில் தப்பிச் சென்றதால், அவர்கள் எங்கு இறங்கினார்கள் என்பதும் தெரியவில்லை. ராஜியுடன் வியாபாரம் செய்து வருபவர்கள், அவர்கள் குடும்பத்தினருடன் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளில் ஒருவர்.
தற்போது இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.
தங்கையே அக்காவை கொலை செய்தது ஏன்?
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, சக்தி என்கிற சக்திவேல், ஜெகதீஸ், சூரியா, ஜான்சன் மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி ஆகியோரைக் கைது செய்துள்ளது.
காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் வைரவன், உதவி ஆய்வாளர்கள் அரிதாஸ், சிவகுரு, மணிகண்டன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தக் கைது நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், உயிரிழந்த ராஜி என்கிற ராஜேஸ்வரியும் கைது செய்யப்பட்டவர்களும் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வருபவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கை உட்பட கைது செய்யப்பட்ட 5 நபர்களுக்கும் உயிரழந்த ராஜேஸ்வரிக்கும் இடையே முன்விரோதம் இருந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதோடு ஏற்கெனவே இரு தரப்புக்கும் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக, தனது சகோதரி எங்கே தன்னைக் கொன்றுவிடுவாரோ என்ற அச்சத்தால் நாகவள்ளி அவரைக் கொன்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தகட்டமாக கைது செய்யப்பட்டுள்ள ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ராஜியுடன் புறநகர் ரயில்களில் வியாபாரம் செய்யும் ரேகாவிடம் பேசியபோது, அவர் வியாபாரம் செய்வதை நிறுத்திவிடலாம் எனத் தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து வருவதாகக் கூறினார்.
“ராஜியுடன் அதிக பழக்கம் இல்லையென்றாலும், அவரை தினமும் வியாபாரத்தின்போது பார்த்திருக்கிறேன். அவரை ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி ரயில் நிலையத்தில் வைத்துக் கொலை செய்ய முடியும்போது, எங்களுக்கும் ஏதோ ஒரு சூழலில் அப்படியான நிலை வருமோ என அச்சமாக உள்ளது.
எனக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இன்றுகூட நான் வியாபாரத்திற்குச் செல்லவில்லை. ரயில் நிலையத்தில் யாரெனும் இருக்கிறார்களா எனப் பார்க்க வந்தேன்,” என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற ஐடி ஊழியரின் கொலைக்குப் பிறகு ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இருந்தும், கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை மூன்று பெண்கள் சென்னை புறநகர் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, பெண் காவலர் உட்பட இரண்டு பெண்கள் மீது வெவ்வேறு சம்பவங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர் ஸ்வாதி கொலைக்குப் பிறகு அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இருப்பினும், சென்னையில் உள்ள 102 புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்பது ரயில் நிலையங்களில் மட்டுமே தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு கொலை நடந்த சைதாப்பேட்டை ரயில் நிலையம் உட்பட இதுவரை பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்துள்ள எந்த புறநகர் ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
கடந்த ஜூலை 2ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த இளம்பெண் ப்ரீத்தி(22), இந்திராநகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் இருந்த இரண்டு இளைஞர்கள் ப்ரீத்தியின் செல்போனை பறிக்கும் முயற்சியில் அவரைக் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ப்ரீத்தி, சிகிச்சை பலனளிக்காமல், 8ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ப்ரீத்தியின் சகோதரர் அக்ஷய், “எனது தங்கை கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுக் கிடந்துள்ளார். ஆனால், அவரை யாரும் காப்பாற்றாமல் போலீசார் வரும் வரை காத்திருந்துள்ளனர். அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால், என் தங்கை உயிர் பிழைத்திருப்பார்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “போலீசார் ரயில் நிலையத்தில் இருந்திருந்தால் விரைவில் மருத்துவமனையில் அனுமதித்திருக்கலாம். ஒரு பாதுகாப்பு குறைபாட்டினால், தற்போது நான் என் தங்கையை இழந்திருக்கிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏழு லட்சம் பேர் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாகக் கூறிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் எஸ்.வாலன்டினா, “பொது மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் அந்த நேரத்திற்கு நடவடிக்கை என்று இல்லாமல், தொடர் நடவடிக்கையாக குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத் தரும் வரை காவல்துறையினர் கவனம் செலுத்தினால், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் குறையும்,” என்றார்.
காவல்துறையினருக்கு நடைமுறையில் உள்ள சிக்கல் குறித்து பிபிசியிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, “அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை பாதுகாப்புப் பணியில் அமர்த்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனென்றால், அரசு ரயில்வே போலீசாருக்கு (GRP) வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு ரயிலுக்கு ஒருவர் என்று பணியமர்த்தக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள்,” என்றார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ரயில்வே போலீஸ் (Government Railway Police- GRP), ரயில் நிலையங்களில் இருக்கும் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாவார்கள். அதே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர்(Railway Protection Force- RPF) ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் மக்களின் உடைமைக்கும், அரசின் உடைமைக்கும் பொறுப்பாவார்கள்.
“இப்படி மக்கள் பாதுகாப்பும், அவர்களின் உடைமைகள் பாதுகாப்பும் தனித்தனியாக இருப்பதால், பாதுகாப்பு வழங்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் இந்த ரயில்வே பாதுகாப்பு சார்ந்த துறைகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அணுகுகின்றனர்.
நான் 1999இல் அரசு ரயில்வே போலீஸில் பணியாற்றியபோதே, இரண்டையும் மத்திய அரசே கவனிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தேன். ஆனால், இப்போது வரை அது நடக்கவில்லை. பிரச்சனையும் தீரவில்லை,” என்கிறார் திலகவதி.
ரயில் நிலையங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அரசு ரயில்வே போலீஸ் எஸ்.பி பொன்ராமுவிடம் கேட்டபோது, “அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை வைத்து ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனக் கூற முடியாது. நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்.
சென்னையில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கி வருகிறோம். இன்னும் வரும் காலங்களில் ரயில் நிலையங்களில் காவல் துறையின் கண்காணிப்பை அதிகரிக்கவுள்ளோம். அதேபோல, பொது மக்களும் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.
ஜுலை 8ம் தேதி ப்ரீத்தி கொலை சம்பவத்திற்கு பிறகு, மின்சார ரயில்களில் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள பெண்களுக்கான பெட்டிகளை தொடர்ச்சியாக ரயிலின் நடுப்பகுதியில் மாற்றம் செய்ய சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினர்(Railway Police Force) பரிந்துரைத்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படையின் மண்டல மூத்த பாதுகாப்பு ஆணையர் செந்தில் குமரேசன், “பெண்களுக்காக தனித்தனியாக உள்ள பெட்டிகளை மற்ற பெட்டிகளுக்கு நடுவில் இருந்தால், குற்றவாளிகள் துணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
அதேபோல, அருகிலுள்ள பெட்டிகளில் மற்ற பயணிகள் இருப்பார்கள், அதனால், பெண்கள் பாதுகாப்பாக உணர்வர், இதுபோன்ற அசம்பாவிதங்களும் நடக்காது,” என்றார்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ள தென்னக ரயில்வே, பொறியியல் பிரிவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்