ஹூடா கேட்டன்: அழகுக்கலை துறையில் பல கோடி டாலர்கள் சம்பாதித்த இவர் ஏன் அத்துறையை விமர்சிக்கிறார்?

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

    • எழுதியவர், அமேலியா பட்டர்லி
    • பதவி, பிபிசி 100 பெண்கள் பிரிவு

ஹூடா கேட்டன் பொதுவெளியில் செல்லும்போது, ​​அவரது ரசிகர்கள் அவரை புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அல்லது ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களை வரவேற்பது போலவே வரவேற்கின்றனர்.

தன்னுடைய அழகு சாதன நிறுவனமான ‘ஹூடா பியூட்டி’ நிறுவனத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பாரிஸில் உள்ள ஐஃபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தின் உள்ளே உள்ள அனைத்தையும் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியுள்ளார்.

அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் கூடிய அழகு நிலையங்களும் சுற்றிலும் நியான் விளக்குகளும் கவர்ச்சிகரமான மக்களும் இருந்தனர்.

அவர் உள்ளே வந்ததும் அவருடைய ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். கட்டடத்தின் உள்ளே இருந்த அழகுக்கலை துறையில் செல்வாக்கு செலுத்துபவர்களும் அதனை தொழிலாக கொண்டவர்களும் ஹூடா படிக்கட்டுகளில் ஏறிவரும்போது, “ஹூடா, ஹூடா” என குரலெழுப்பினர்.

அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர் தங்களை அரவணைக்கும்போது சிலருக்கு கண்ணீரே வந்துவிட்டது.

இந்த நிகழ்வு முழுவதுமே, ஹூடாவின் புன்னகை மாறவில்லை.

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி 100 பெண்கள் பட்டியலில் ஹூடா கேட்டன்

உலகம் முழுவதும் ஊக்கமளிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தும் பெண்களை கொண்டாடும் விதமாக இந்தாண்டு பிபிசி வெளியிட்ட 100 பெண்களின் பட்டியலில் ஹூடா கேட்டனும் ஒருவர்.

ஹூடா கேட்டனுக்கு 100 கோடி டாலர்கள் மதிப்பிலான அழகுசாதன நிறுவனம் உள்ளது. இது, இன்ஸ்டாகிராமில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிறுவனமாக உள்ளது. அந்நிறுவனத்தை இன்ஸ்டாகிராமில் 5 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

ஆனால், அழகுக்கலை துறை மற்றும் சமூக ஊடகம் இரண்டையுமே ஹூடா தீவிரமாக விமர்சிக்கிறார்.

”அழகுக்கலை துறை பாலின வாதத்துடன் இருக்கிறது என நினைக்கிறேன்,” என்கிறார் அவர். ”பல சமயங்களில் அழகுக்கலை துறை பெண்களை காட்சிப் பொருளாக்குகிறது. பெண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மட்டுமே குறைத்து மதிப்பிடுகிறது.” என்கிறார்.

“கவர்ச்சியாக இருக்க விரும்பும்” பெண்ணான தனக்கு, தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது எவ்வளவு எரிச்சலூட்டும் என்பது தெரியும் என கூறுகிறார்.

இப்படி மற்றவர்களை உடனேயே மதிப்பிடுவது பொதுவான தோல்விதான் என ஒப்புக்கொள்ளும் அவர், அதுதொடர்பாக தானும் ஏதாவது செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

“நான் போராட வேண்டியிருந்தது”

ஆரம்பத்தில் ஹூடா தொழில் முனைவோராக ஆன போது, அந்த துறையில் இருந்த சிலர் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.

“நான் மிகவும் போராட வேண்டியிருந்தது,” என்கிறார் அவர்.

”பல நேரங்களில் தொழில் சம்பந்தமான கூட்டங்களின்போது அவர்கள் என் கண்களை பார்த்து பேசாமல், என் கணவருடைய கண்களை பார்த்து பேசுவார்கள். என்னை முற்றிலும் புறக்கணித்து விடுவார்கள்.”

“என்னிடம் பேசாதீர்கள், அவரிடம் (ஹூடாவிடம்) பேசுங்கள்” என அவருடைய கணவர் கூறினாலும், அவர்கள் தன்னுடைய கணவரை நோக்கியே பேசுவார்கள் என ஹூடா தெரிவிக்கிறார்.

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், HUDA KATTAN

புரிதலில் போதாமை

அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவம் என்று வரும்போது அழகுக்கலை துறை மெதுவாக செயல்படுவது குறித்து அவர் சீற்றம் கொள்கிறார்.

இராக்கிலிருந்து டென்னசிக்கு குடிபெயர்ந்தவர்களின் மகளாக வளர்ந்த ஹூடா, தான் எப்போதும் கவர்ச்சியில்லாத ஒருவராகவே உணரச் செய்யப்பட்டதாக கூறுகிறார்.

பெரும்பாலானோரின் சரும நிறத்தின் சாயலுக்கு ஏற்ப அடர் நிறங்கள் கொண்ட ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அழகு சாதனங்களை விற்பனை செய்வதற்கு தான் முன்னுரிமை அளிப்பதாக கூறுகிறார்.

அழகுக்கலை துறையை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் சரியான திசையில் செல்கிறது என ஒப்புக்கொள்ளும் அதேநேரத்தில், அத்துறை ”நத்தை வேகத்தில்” செயல்படுகிறது என கூறுகிறார்.

“அழகு சாதன உற்பத்தியாளர்களுடன் நான் ஆய்வகங்களில் இருக்கும்போது, அவர்களிடம் ‘அடர் நிற சருமத்திற்கான அழகுசாதனங்கள் (அடர் பழுப்பு, கருமை நிறங்கள்) எனக்கு வேண்டும்’ என கூறுவேன். ஆனால், அவர்கள் கருமை நிறமிகளை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால், மக்களின் சருமம், பலவித நிறச்சாயல்கள் கொண்டவை.”

“இன்னும் இதுகுறித்த புரிதலில் போதாமை நிலவுகிறது. உற்பத்தியாளர்கள், இன்னும் சொல்லப் போனால் பல நிறுவனங்களிடையேயும் இந்த போதாமை உள்ளது.”

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

சமூக ஊடகங்கள் மீது விமர்சனம்

ஹூடாவின் வெற்றியின் பெரும் பங்கு சமூக ஊடகங்களில் அவருடைய இருப்பால் உருவானது. அவர் தன் சமூக ஊடக பக்கங்களில் அழகுக்கலை குறித்த பயிற்சி வகுப்புகள், அதனை மதிப்பீடு செய்தல், துபாயில் உள்ள தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பகிர்கிறார். ஹூடா தற்போது துபாயில்தான் வசித்து வருகிறார்.

அழகுக்கலை குறித்த வலைப்பதிவராக தன்னுடைய ஆரம்ப காலங்களில் இருந்த ஹூடா, அதன்மூலம் உருவான பரிணாமத்தால் தற்போது தன்னுடைய வாழ்வியல் முறையை கட்டமைத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் சமூக ஊடகங்களை விரும்பினார்.

“அதுவொரு சிறப்பான விஷயம் என நினைத்தேன்,” என்கிறார் அவர். “அதில் ஜனநாயக குரல்கள் எழுவதாக கருதினேன். அதில் எல்லோரும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் இணையும் இடமாக சமூக ஊடகங்கள் இருக்க வேண்டும்.”

ஆனால் அதற்கு பதிலாக, “திரையில் மக்களின் கண்களை ஒட்டியது போன்று சமூக ஊடகங்கள் அவர்களை அடிமையாக்குகிறது.” என்கிறார்.

“நான் சமூக ஊடகங்களுடன் ஒப்புக்கொள்ள வேண்டுமா? இல்லை, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வருங்காலத்திற்கு அது நல்லது என கருத வேண்டுமா? இல்லை, நான் இனி அப்படி நினைக்க மாட்டேன்.”

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், Getty Images

’அநியாயமான எதிர்பார்ப்புகள்’

பெண்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சமூக ஊடகங்கள் விதைப்பதை அதன் ஒரு பிரச்னையாக ஹூடா கருதுகிறார்.

“சமூகம் எப்போதும் பெண்கள் மீது கடினமாகவே நடந்துள்ளது. ஆனால், இப்போது சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் மீதான அநியாயமான எதிர்பார்ப்புகள் எழுகின்றன,” என்கிறார் ஹூடா.

“நான் சமூக ஊடகங்களை பார்க்கும்போது, என்னால் எப்போதும் அழகாகவே இருக்க முடியாது என்பது போன்று உணர்கிறேன். நான் எப்போதும் எதையும் சாதிக்கவில்லை என்பது போல் உணர்கிறேன்.”

இந்த பிரச்னையில் தனக்கு “100%” பங்கிருப்பதாக ஒப்புக்கொள்ளும் அவர், ஆனால் அதனால் தானும் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார்.

“தோற்றத்திற்காக அறியப்படுபவராக நீங்கள் இருக்கும்போது, சில சமயங்களில் சிறைக்கைதி போன்று உணர்வீர்கள்.”

அவருடைய நகங்கள், தலைமுடி அழகாக இருக்க வேண்டும், அவருடைய சரும நிறம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர், ஆனால் “அது யதார்த்தம் இல்லை” என்கிறார் அவர்.

”என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நான் ஒரு சிறைக்கைதி என பல காலம் நினைத்திருக்கிறேன். பொதுவெளியில் நான் ‘ஹூடா பியூட்டி’யாக (Huda Beauty) செல்லும்போது நான் சில சமயங்களில் ’அசிங்கமான ஹூடாவாக’ (Huda Ugly) உணர்ந்திருக்கிறேன்.”

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

அரசியல் கருத்துகளை பகிரும் ஹூடா

அவரின் சமூக ஊடக பக்கங்களின் புகழை வைத்து பார்க்கும்போது, ஹூடா சொல்லும் எதுவானாலும் இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் என்பது தெரிகிறது.

“என் குரல் பெரிதாக உணரத்தொடங்கியபோது, நான் சில விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என உணர்ந்தேன்,” என்கிறார் அவர்.

“பெண்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நான் கவனம் கொண்டேன். ஆனால், என்னுடைய சமூகத்தை பாதிக்கும் விஷயங்களுக்கும் நான் கவனம் செலுத்தினேன்.”

ஹூடாவின் இந்த நேர்காணல், அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

இருதரப்புக்கும் இடையேயான சண்டை உச்சத்தை அடைந்தபோது, ஹூடா தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பாலத்தீனியர்களுக்கு ஆதரவளித்து பதிவிட்டார். அதில், நேர்மறையான மற்றும் எதிர்மறையான பின்னூட்டங்கள் இடப்பட்டிருந்தன.

“நான் அரசியல் விவகாரங்கள் சிலவற்றில் வெளிப்படையாக பேசியுள்ளேன்.

அரசியல் நிபுணர் போன்று என்னால் பாசாங்கு செய்ய முடியாது,” என, ஜூலை மாதம் பிபிசியின் 100 பெண்கள் பிரிவிடம் தெரிவித்தார். “நான் ஏதேனும் ஒன்றை பற்றி எனக்கு சில தகவல்கள் தெரிந்தால் நிச்சயமாக அதை பதிவிடுவேன்.”

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்போதைய மோதலுக்கு முன்பும் மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஹூடா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பிரச்னைகள் குறித்து அவ்வளவாக பேசப்படவில்லை என்கிறார் அவர்.

”இம்மாதிரியான விஷயங்கள் நடக்கும்போது நான் மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறேன். சில சமயம், ‘என்னிடம் சரியான தகவல்கள் இருக்கின்றதா? இதுபற்றி நான் பதிவிடலாமா? ஒருசார்பை பற்றி மட்டுமே நான் பார்க்கிறேனா?’ என்றும் சில சமயங்களில் கேட்டுக்கொள்வேன். ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் எதுவொன்றை பற்றியும் பதிவிட்டுள்ளேன்.”

ஹூடா கேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

இஸ்லாம் மீதான நம்பிக்கை

“எப்படி உங்களின் வாழ்க்கை இவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது?” என சிலர் கேட்கும்போது தன் வாழ்க்கை அவ்வாறு இல்லை என நேர்மையாக பதிலளிக்கிறார்.

திரையில் செலவிடப்படும் நேரத்தை தான் குறைத்துக்கொள்வதாகவோ அல்லது அதனுடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாகவோ கூறும் அவர், தனது 12 வயது மகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தான் அனுமதிக்கவில்லை என கூறுகிறார்.

“எனக்கு தெரியாமல் சமூக ஊடகங்களை என் மகள் பார்ப்பார். ஆனால், அவர் சமூக ஊடகங்களில் இருக்கும்போதும், இல்லாதபோதும் அவருடைய பதற்றத்தின் அளவில் ஒரு மாறுதலை நான் பார்த்திருக்கிறேன்.”

பொதுவெளியில் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பங்கை செலவிடும் அவர், இஸ்லாம் மீதான தன்னுடைய நம்பிக்கை உள்ளிட்ட சில விஷயங்களை தனிப்பட்டதாக கருதுகிறார்.

வளரும்போது தான் மதம் சார்ந்தவராக இல்லை எனக்கூறும் அவர், வளர்ந்தபின்னர் அந்த மனநிலை மாறியதாக கூறுகிறார். வழிபடுவது “மிக அழகான தருணங்களில் ஒன்றாக” அவர் பார்க்கிறார்.

“அதுபற்றி நான் பேசுவதில்லை. ஏனெனில், விமர்சனங்கள் குறித்து எனக்கு எப்போதும் பயம் இருந்திருக்கிறது” என்கிறார் அவர். “நீங்கள் இதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை’ என மக்கள் கூறிவிடுவார்கள்.”

‘ஹூடா பியூட்டி’ நிறுவனத்திற்கு இப்போது 10 வயதாகிறது. தான் சில பெண்களுக்கு ஊக்கம் தந்திருப்பதாக நம்புகிறார் ஹூடா.

“சில ஆண்டுகளுக்கு முன்பு டென்னசியில் இருந்த மத்திய கிழக்கை சேர்ந்த அந்த சிறுமியை நினைத்துக்கொள்கிறேன். உலகில் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். என்னை போன்ற ஒருவரை பார்க்கும்போது, தாங்களும் அடையாளப்படுத்தப்படுவதாக அவர்கள் உணரலாம்.”

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)