You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பவா செல்லதுரை: பிக்பாஸ் வீட்டில் கதைசொல்லி கண்கலங்க வைத்தவர்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்டுள்ள 18 நபர்களில் பவா செல்லதுரை மீது அதிக கவனம் குவிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது தவறு என்று விமர்சனங்கள் எழுகின்றன. மற்றொரு புறம், பவாவைப் போன்ற எழுத்தாளர் ஒருவர் பிக்பாஸ் போன்ற மிகப்பிரபலமான வெகுஜன நிகழ்வில் பங்குபெறுவதை வரவேற்கவேண்டும் என்ற ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன.
100 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, இவரை சீக்கிரம் விலக்கிவிடாதீர்கள் என்ற பதிவுகளும் சமூகவலைத்தளங்களில் வலம்வருகின்றன.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் பவா செல்லதுரை கதை சொல்லி சிலரை கண்கலங்க வைத்தது, பெண்களை சமையல் வேலையில் முடக்குவது குறித்து அவர் விளக்கியது ஆகியவை பேசுபொருளாகியுள்ளன. முதல் நாளே பிக்பாஸின் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதால் இவரை பற்றிய விவாதங்களும் அதிகரித்து வருகின்றன.
யார் இந்த பவா செல்லதுரை?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவா செல்லதுரை ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார். அதோடு, இவர் மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்துவருகிறார். ‘வம்சி புக்ஸ்’ என்ற பெயரில் புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் இருந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அந்தச் சங்கத்தில் இருந்து விலகிவிட்டதாக அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்துகின்றனர்.
எழுத்து, பதிப்பு ஆகிய பணிகளோடு பவா நடிப்பு, கதைசொல்லல் நிகழ்வுகள் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.
கதைசொல்லல் நிகழ்வுகளில் இவர் நிகழ்த்தும் உரை சுவாரசியமான இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். இவரது கதைசொல்லல் உரைகளின் காணொளிகள் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பார்கப்படுகின்றன.
மேலும், ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ மற்றும் மிஷ்கினின் ‘சைக்கோ’ ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ‘ப்ரோ’ ஆன பவா
பிக்பாஸ் வீட்டில் உள்ள நபர்களிலேயே வயதில் மூத்தவர் பவா செல்லதுரை தான்.
தனது வயது காரணமாக தன்னை பிறர் ‘ஐயா’ என்று அழைக்க வேண்டாம் எனவும் ‘ப்ரோ’ அல்லது ‘பவா’ என்றே கூப்பிடலாம் என்று அவர் சொன்னதை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஒரு சில மீம் கிரியேட்டர்கள் இதனை கன்டென்ட்டாக பயன்படுத்தினர்.
இந்தச் சூடு அடங்குவதற்குள், பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசாத ஆறு நபர்களில் பவா செல்லதுரையும் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டது. அதனால் இரண்டாவது வீடு என்று சொல்லப்படும் பகுதிக்கு அவர் அனுப்பட்டார். தற்போது இவருடன் ஆறு நபர்கள் அங்குள்ளனர்.
இரண்டாவது வீட்டில் இருப்பவர்கள் சில விதிகளை பின்பற்றவேண்டும். அதன்படி, பவா செல்லத்துரை, பிக்பாஸ் வீட்டுக்குச் செல்லக்கூடாது, எந்த டாஸ்க்குகளிலும் பங்குபெறக்கூடாது, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் மெனுவை சமைக்கவேண்டும் ஆகிய செயல்பாடுகளுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உணவு சமைப்பது பற்றிப் பேசும்போது, பெண்களிடம் நன்றாக சமைக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது, அப்படி சொல்லிவிட்டால், அவர்கள் சமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள், தங்களது தனித்திறமமைகளை விட்டுவிட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதை மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் என்ன கதை சொன்னார் பவா?
பிக்பாஸ் வீட்டிலும் தனது கதைசொல்லும் நிகழ்வை நடத்தினார் பவா.
மற்ற உறுப்பினர்களிடம் அவர் ஒரு கதை சொன்னபோது, அதை அனைவரும் கவனமாகக் கேட்டனர்.
எழுத்தாளர் ஆதவனின் ‘ஓட்டம்’ என்ற சிறுகதையை விவரித்தார். அக்கதை, திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயான பின், ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த ஒரு பெண்ணால் எப்படி தனது விளையாட்டைத் தொடர முடியவில்லை என்று விவரிக்கிறது. ஆனால் அந்த அந்த பெண், தனது மகன் டிபன் பாக்ஸ்சை வீட்டில் மறந்து சென்றுவிட்டபோது, ஓடிச்சென்று கொடுக்கிறாள் என்று சொல்லிவிட்டு, குடும்பம் என்ற அமைப்பில் உள்ள சிக்கல்கள் இதுபோல பெண்களை முடக்கிவிடுகிறது என பேசத்தொடங்கினார்.
“உங்கள் யாரையும் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. நாம் எல்லோரும் கலையோடு சம்பந்தப்பட்டவர்கள். கணவனோ, மனைவியோ, குழந்தையோ ஒருவருக்கு பின்னால் நிற்க வேண்டும். தடையாக நிற்கக்கூடாது,” என்று முடித்தார்.
இக்கதையை அவர் சொல்லி முடித்ததும், பிரதீப் ஆண்டனி மற்றும் கூல் சுரேஷ் ஆகிய சக போட்டியாளர்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசினர்.
‘2K கிட்ஸ்-க்கு அவசியமான கருத்துக்களைச் சொல்கிறார்’
சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவா செல்லதுரை பங்கேற்பது ஏன் சமூக வலைத்தளங்களில் ஏன் விவாதப் பொருளாகிறது?
பவா செல்லதுரை பிக்பாசில் பங்கேற்பதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரிய லக்ஷிதா என்ற டிவிட்டர் பதிவாளர், பவா செல்லதுரை நன்றாகக் கதை சொல்கிறார் என்றும், “பெண்கள் நல்லா சமைக்கிறார்கள் என்று சில ஆண்கள் சொல்லிச் சொல்லியே சமையல் கட்டிலே உட்காரவைத்துவிடுவார்கள்” என்ற அவர் கூறிய கருத்தை ஆதரித்துப் பதிவிட்டு, அவருக்கு வாக்கும் அளித்திருக்கிறார்.
சேகர் என்ற ட்விட்டர் பதிவாளர், பவா செல்லதுரை மற்றவர்கள் தன்னை ஐயா என்று அழைக்கதேவையில்லை என்ற கருத்தை வரவேற்பதாகச் சொல்கிறார்.
‘பவா செல்லதுரை ஆர்மி’ என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதிலும் அவரைப் பற்றிய ஆதரவுக் கருத்துக்கள், படங்கள் ஆகியவை வெளியாகி வருகின்றன.
ஆதிக் என்ற பதிவர், 'பவா செல்லதுரை தெரியாமல் வந்து பிக்பாஸ் கூட்டத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதாக உணர்வதாக' ஒரு meme-ஐப் பதிவிட்டிருக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இளம் பார்வையாளரான ஜீனத், பவா செல்லதுரை போன்ற நபர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்தது புதிய முயற்சிதான் என்கிறார். பவா செல்லத்துரையின் கதைகளை கேட்டவரும், அவரின் குடும்ப நண்பராகவும் இருக்கும் ஜீனத், அவரின் தீவிர ஆதரவாளர்.
“90ஸ் மற்றும் 2k கிட்ஸ்க்கு பவா செல்லதுரை பற்றிய விவரங்கள் தெரியவருகிறது. இவர் இப்போதுதான் முதல் நாளை முடித்திருக்கிறார். ஆனால் இவரை பற்றி பலரும் பேசுவதை பார்க்கும்போது இவரிடம் இருந்து பலவற்றை பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. வயதான நபராக இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப ட்ரெண்டான கருத்துக்களைச் சொல்கிறார். அதுவும் முற்போக்கான கருத்துக்களை சொல்கிறார் என்பதால் பவா இளம் தலைமுறைக்கு மிகவும் தேவையான நபர்,” என்கிறார் ஜீனத்.
பொருளாதாரக் காரணங்களுக்காக இடதுசாரி சிந்தனை கொண்ட ஒருவர் இந்நிகழ்வில் பங்குபெற்றது தவறு என்ற கருத்துக்கள் ஏற்புடையது இல்லை என்று ஜீனத் கூறுகிறார்.
“அவர் பொருளாதாரக் காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தாலும், அது சரி என்றுதான் சொல்வேன். எத்தனை எழுத்தாளர்கள் லட்சக்கணக்கில் பணம் ஈட்டுகிறார்கள்? இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு சிலர் இவர் சொல்லும் கதைகளைத் தொடர்ந்து கேட்பார்கள், இலக்கியம் படிப்பார்கள் என்றால் அது நல்லதுதான்,” என்கிறார் ஜீனத்.
‘பவா தேர்வு செய்த தளம் தவறானது’
பவா இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டதை விமர்சிக்கும் பதிவுகளும் பரவி வருகின்றன.
பேஸ்புக்கில் மனோஜ் என்ற பதிவாளர், “பவா செல்லதுரைக்கு என்ன கஷ்டம்னு தெரியல... இயக்குநர்கள் படை சூழ திருவண்ணாமலை ரிசார்ட்லாம் நல்லா தான போயிட்டு இருக்கு... ஒருவேள பேசிப் பேசி கூல் சுரேஷை இலக்கியவாதியா ஆக்குறதுக்கு போயிருப்பாரோ...?” என மிகவும் குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார்.
சோம நடராஜன் என்ற பதிவர், பவா செல்லதுரை உடனடியாக விலக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதன்மூலம் அவர் தனது நன்மதிப்பை இழக்கவேண்டாம் என்றும் எழுதியிருக்கிறார்.
பவா செல்லதுரை வாசகர் வட்டம் என்ற பேஸ்புக் பக்கத்தில், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடாது என்றும் சிலர் பதிவிட்டுவருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு இளம் பார்வையாளரான செல்வம், பவா செல்லத்துரை இந்த நிகழ்வில் பங்குபெற்றது சரியல்ல என்று காட்டமாகப் பேசுகிறார். இலக்கியவாதியாக அறியப்படும் இவர், பொழுதுபோக்கு நிகழ்வில் கலந்துகொண்டது வேதனை தருகிறது என்கிறார்.
பவா செல்லதுரையின் கதைசொல்லல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கேட்பவரான செல்வம், இந்த நிகழ்வின் மூலமாக பவா செல்லத்துரையின் மீதான நன்மதிப்பு குறைந்துபோகும் என்று விமர்சிக்கிறார்.
“மிகவும் எளிமையான மனிதர் இவர். ஆனால் இவர் தற்போது தேர்வு செய்துள்ள தளம் இவருக்கு ஏற்றது அல்ல. முதல் நாளிலே இரண்டாவது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். விரைவில் இவரை வெளியேற்றுவார்கள். அதனால், இதில் அவர் பங்குபெற்றது சரியல்ல. அவருக்கான தளம் இதுவல்ல,” என்கிறார் செல்வம்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ன சொல்கிறது?
பவா செல்லதுரை தீவிர இலக்கிய வேலைகளில் ஈடுபட உதவிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் பேசினோம்.
ஆனால் அவர் தற்போது சங்கத்தில் இல்லை என்பதால், அவரது பங்கேற்பு பற்றி கருத்து சொல்லமுடியாது என்று தெரிவித்தனர்.
“அந்த நிகழ்வில் பங்குபெறுவது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அதில் கருத்து சொல்லமுடியாது,” என அச்சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினரான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)