You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட்லரின் யூத இனப்படுகொலை தெரிந்தும் போப் அமைதியாக இருந்தாரா? கடிதத்தில் அதிர்ச்சி தகவல்
ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருந்த அருட்தந்தை லோதர் கோனிக், வாட்டிகனில் இருந்த போப்பின் தனிச் செயலாளரான அருட்தந்தை ராபர்ட் லீபருக்கு எழுதிய, 1942 டிசம்பர் 14 தேதியிட்ட கடிதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
வாட்டிகனின் ஆவணக் காப்பாளரான ஜியோவானி கோகோவால் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இக்கடிதம், இத்தாலிய செய்தித்தாளான ‘கொரியர் டெல்லா செரா’வில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது.
ரோமில் கத்தோலிக்க திருச்சபையின் ஹோலி சீ எனப்படும் ஆயரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் “பயஸ் XII அறிந்தது” என்ற தலைப்பில் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் நாஜிக்கள் மேற்கொண்ட அட்டூழியங்கள் குறித்து திருச்சபையிடம் இருந்த தகவல்கள் தெளிவற்றதாகவும், சரிபார்க்கப்படாதவையாகவும் இருந்தது என்பது கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுடன் இந்தக் கடிதம் முரண்படுவதால் தற்போது இது குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
பெல்செக், ஆஷ்விட்ஸ், டச்சாவ் ஆகிய ஜெர்மனியின் மூன்று நாஜி படைகளின் முகாம்களில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்து இந்த கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோனிக் மற்றும் லீபருக்கு இடையில் எழுதப்பட்ட பிற கடிதங்கள் காணாமல் போனதாகவோ அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாமலோ இருப்பதாகவும் இக்கடிதம் கூறுகிறது.
அத்துடன், போப் பயஸ் ஜெர்மானியர் என்றும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.
துல்லியமான தகவல்கள்
ஜியோவானி கோகோவை பொருத்தவரை, “ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் பற்றிய துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை பயஸ் XII-க்கு அளித்திருந்தது என்பது இந்த கடிதம் மூலம் தற்போது உறுதியாகி உள்ளது,”
அத்துடன், “ஜெர்மனியில் இருந்த நாஜி படைகளின் வதை முகாம்கள் உண்மையில் மரண தொழிற்சாலைகள் என்ற தகவல் வாட்டிகனுக்கு கிடைத்திருந்தது” என்பதும் கோகோவின் கூற்றாக உள்ளது.
“வாட்டிகனிலோ அல்லது குறைந்தபட்சம் நகரின் சில பகுதிகளிலோ யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் செயல்பாடுகள் குறித்த வரலாற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் முயற்சியைக் இக்கடிதம் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது,” என்கிறார் போப் பயஸ் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ள வரலாற்று ஆசிரியரான டேவிட் கெர்ட்சர்.
வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்
கோகோவின் கூற்றுப்படி, இந்தக் கடிதம் சமீபத்தில் வெளியாதற்கு முன்பு வரை வாட்டிகனின் செயலக அலுவலகத்தில் கவனிப்படாமல் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றாகத்தான் இருந்தது.
“தேவாலயங்கள் மீது வரலாற்று ரீதியாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை” என்ற போப் பிரான்சிஸின் அறிவிப்பை வாட்டிகன் தீவிரமாக எடுத்துக் கொண்டது என்பதை இந்த கோப்புகளின் வெளியீடு காட்டுகிறது என்கிறார் வாஷிங்டனில் உள்ள உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தின் சர்வதேச கல்வித் திட்டங்களின் இயக்குநரான சுசான் பிரவுன் -ஃப்ளெமிங்.
இரண்டாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்களை வெளியிட போப் பிரான்ஸில் 2019இல் உத்தரவிட்டிருந்தார்.
“இந்த ஆவணங்களில் வாட்டிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சாதகமான அல்லது பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றைத் தாண்டி, இவை அறிவியல் கண்ணோட்டத்தில் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற விருப்பமும் ஆதரவும் உள்ளது” என்று பிரவுன் ஃப்ளெமிங் மேலும் கூறினார்.
“வாட்டிகனின் செயலக அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டன.
அதன் மூலம் ஐரோப்பாவில் யூதர்களை அழிக்கும் முயற்சிகளை ஹிட்லரின் நாஜிக்கள் தொடங்கியதில் இருந்து, அதுகுறித்த தகவல்கள் போப்பிற்கு எந்த அளவுக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதைக் காட்டும் பல்வேறு ஆவணங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்தக் கடிதம் அதில் மற்றொரு ஆவணம்,” என்று பிபிசியிடம் கூறினார் டேவிட் கெர்ட்சர்.
“இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விஷயங்களைவிட, இந்த வரலாற்றைத் தெளிவான கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வாட்டிகன் மறுத்ததே, அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது,” என்றும் கூறுகிறார் வரலாற்று ஆசிரியரான கெர்ட்சர்.
பன்னிரெண்டாம் பயஸின் மரபு மீதான சர்ச்சை
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட நேச நாடுகளிடம் இருந்து நேரடி கோரிக்கைகள் பல இருந்தன. ஆனால், குறைந்தபட்சம தமக்குத் தெரிந்த தகவல்களைக்கூட நேச நாடுகளிடம் தெரிவிக்கும் தைரியம் பயஸுக்கு இல்லை என்று அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆனால் யூதர்களுக்கு உதவ, பயஸ் எப்போதும் திரைக்குப் பின்னால் உறுதியான வழிகளில் பணியாற்றினார் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.
அதேநேரம், நாஜி படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களின் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அவர் குரல் கொடுக்கவில்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கடிதம், பயஸ் XIIஇன் மரபு மற்றும் பரிசுத்தமாக்குதல் குறித்த அவரின் சர்ச்சைக்குரிய பிரசாரம் பற்றிய விவாதத்தைத் தூண்டலாம். ஆனால். இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அல்லாத உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாக ஹிட்லருக்கும், பயஸ் XIIக்கும் இடையே நீண்ட மற்றும் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததை கெர்ட்சரின் புத்தகம் ஒன்று வெளிப்படுத்தியது.
இறுதியில், இரண்டாம் உலகப் போரில் பயஸ் XIIஇன் பங்கு தெளிவற்றது என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கத்தோலிக்கர்களை தவறாக நடத்தும் ஒரு புறமத அரசியல் இயக்கமாக நாசிசத்தை அவர் கருதினாலும், அவர் மூன்றாம் ரைச்சிற்கு குறிப்பாக சங்கடமான போப் அல்ல என்பதையும அந்த சான்றுகள் உணர்த்துகின்றன. மேலும் அவர் யூத அழிப்பை தெளிவாகக் கண்டிக்கவில்லை.
இருப்பினும் அவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் குறித்து பயஸ் அறிந்திருக்கலாம் என்கிறனர் வரலாற்று ஆசிரியர்கள்.
ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜியின் ஆட்சிக் காலமான மூன்றாம் ரைச், 1933 -45 வரையிலான அதன் ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்