You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிடிஎஃப் வாசன் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரால் இனி பைக் ஓட்ட முடியுமா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பிரபலமான யூட்யூபர்களில் ஒருவரான டிடிஎஃப் வாசன், சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஞாயிறு அன்று(செப் 17) வீலிங் செய்த போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை எடுத்துவரும் நிலையில், சாலை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று(செப் 19) கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த இந்த இளைஞர், பைக்கில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரிலுள்ள தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். நான்கு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவரது யூடியூப் சேனலில் வெளியாகும் வீடியோக்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் இடையே மிகவும் பிரபலம். அதிகமான ரசிகர்கள் உள்ள அதே சமயம், அவர் வேகமாக பைக் ஓட்டிச் செல்வது குறித்த விமர்சனங்களும் உள்ளன.
கடந்த வாரம் காஞ்சிபுரம் அருகே, சென்னை -பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் வீலிங் செய்தபோது, டிடிஎஃப் வாசன் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, சென்னைக்கு விரைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
விபத்தின் பின்னணி
அதிவேகமாக பைக் ஓட்டி, பைக் ஸ்டண்ட் செய்வதை வீடியோவாக பதிவிடும் இவர், கடந்த வாரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை வீலிங் செய்தார். மூன்றாவது முறை வீலிங் செய்தபோது, நிலை தடுமாறி, சறுக்கி கீழே விழுந்தார்.
சாலை விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டுவதால் பலமுறை சர்ச்சைக்கு உள்ளான வாசன் மீது தற்போது வழக்கு பதிவாகியுள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், அதிவேகமாக வாசன் வீலிங் செய்திருக்கிறார் என்றார். ''அவர் வீலிங் செய்த நேரத்தில் அந்த சாலையில் யாரும் பயணிக்கவில்லை என்பதால் மற்றவர்களுக்கு விபத்து ஏற்படவில்லை. வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அவரது செயல் மிகவும் ஆபத்தானது. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை பாயும்,'' என்கிறார்.
மேலும் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டிடிஎஃப் வாசன் குணமாகி வந்த பிறகு மீண்டும் பைக் ஓட்ட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ், வாசனின் வலது கரத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றார். ''மருத்துவர்கள் ஸ்டீல் பிளேட் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.கீழே விழுந்ததில் உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஆரோக்கியமாக உள்ளார்,''என்றார். சாலை விதிகள் மீறப்பட்டது குறித்த கேட்டபோது, தற்போது அதுகுறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
வாசன் பலமுறை வீலிங், அதிவேகமாக பைக் ஓட்டுவது உள்ளிட்ட பைக் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ள அதேநேரத்தில், சாலை விதிமீறலுக்காக அபராதமும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை மோசமான விபத்தில் வாசன் சிக்கியதை அடுத்து, அவரை பின்தொடர்பவர்கள், இதேபோன்ற விதிமீறலை தவிர்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுவருகின்றனர்.
விபத்து எப்படி? வாசன் விளக்கம்
சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட வாசனை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறைக்கு செல்லும் வழியில் ஊடகத்தினரிடம் பேசிய வாசன், தான் ஸ்டண்ட் செய்யும்போது விழவில்லை என்றார். "அது தெரியாமல் நடந்த ஒரு விபத்து. அந்த விபத்து நடந்திருக்கவேண்டாம். நான் ஸ்லிப் ஆகி தவறி கீழே விழுந்துவிட்டேன். ஸ்டண்ட் பண்ணும்போது நான் விழவில்லை. விழுந்தபோது ஆட்டோமேட்டிக்காக வண்டி மேலே தூக்கிவிட்டது,'' என்று சொல்லிவிட்டு, ''எல்லோருக்கும் நன்றி'' என்று கூறி சென்றுவிட்டார்.
விதிமீறல்களில் ஈடுபட்ட வாசன்
தொடக்கத்தில் தனது தந்தையின் ராயல் என்பீல்டு பைக்கில் பயணித்து வீடியோ வெளியிட்டுவந்த வாசன், தனக்கான சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க, பலவிதமான பைக்குகளில் பயணித்து வீடியோ வெளியிடுவதை தொடர்ந்து செய்துவந்தார். இவர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று, லடாக் வரை பைக்கில் பயணித்து இவர் வெளியிட்ட வீடியோகள் மிகவும் பிரபலம் ஆகின.
39 மணிநேரத்தில் 3,500 கிலோமீட்டர் பயணித்தது உள்ளிட்ட சாகசமாக பயணித்த வீடியோ, காவல்துறையிடம் சிக்கிக் கொண்டால் மன்னிப்பு கேட்கும் வகையில் பதிவு போடுவது போன்ற வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
பல ஊர்களுக்கு பைக்கில் செல்வது, பல இடங்களில் பைக் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிட்ட இவரின் யூடியூப் தளத்திற்கு 2k கிட்ஸ் மத்தியில் அதிக செல்வாக்கு கிடைத்தது. 90s கிட்சை விமர்சிப்பது, 2k கிட்ஸ் மத்தியில் மேலும் அவரை பிரபலப்படுத்தியது. சாலை பயணத்தின்போது, குழந்தைகள், முதியவர்களுடன் பேசுவது, பரிசு கொடுப்பது, இளைஞர்களுடன் செல்ஃபீ எடுப்பது போன்ற அவரது வி-லாக்ஸ் அதிக எண்ணிக்கையில் அவருக்கு ஆதரவாளர்களை உருவாக்கியது.
பயணத்தின்போது, அதிவேகமாக வண்டி ஒட்டியதற்காக பலமுறை இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றொரு சமூக வலைதள பிரபலமான ஜி பி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக சென்ற வீடியோ வைரல் ஆகியது. அந்த சம்பவத்திலும் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பவம் 1
கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளை, மேட்டுப்பாளையம் அருகே ஒரு தனியார் ஹோட்டலில் தனது ரசிகர்களுடன் கொண்டாடப் போவதாக அறிவித்திருந்தார். எதிர்பாராதவிதமாக, அங்கு பல ஆயிரம் இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.
கேக் மற்றும் பரிசு பொருட்களை கொடுக்க பல ஆயிரம் நபர்கள் அங்கு சூழ்ந்ததால், காவல்துறையினர் வந்து நெரிசலை சமாளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனுமதி இன்றி பல ஆயிரம் நபர்கள் குவிந்தது பெரிய சர்ச்சைக்காக உருவானது. ஒரு சில மோதல் சம்பவங்களும் அங்கு நடைபெற்றன.
சம்பவம் 2
அடுத்ததாக, டிசம்பர் 2022ல் கடலூர் அருகே ஒரு புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் செல்லத்தின் அலுவலக திறப்புக்காக வாசன் வந்தபோது, பல நூறு இளைஞர்கள் திரண்டனர். பலரும் வாசனை போலவே அதிவேகத்தில் பைக்கில் வந்ததை அடுத்து, அவர்களின் வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சாலையில் அதிகளவில் திரண்ட இளைஞர்களை காவல்துறையினர் விரட்டினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இவர் மீதும் வழக்கு பதிவாகியது.
சம்பவம் 3
ஜனவரி 2023ல் சென்னையில் நண்பர்களுடன் காரில் சென்றபோது, அந்த காரில் நம்பர் பிளேட் இல்லாத காரணத்தால், அந்த கார் கைப்பற்றப்பட்டது. மார்ச் 2023ல் இணையத்தில் ஒரு கலந்துரையாடலின் போது, அதிவேகமாக பைக் ஓட்டுவது, விதிமீறலில் ஈடுபடுவது குறித்து கேள்விகளுக்கு பதில் தரும்போது, காவல்துறை குறித்து மோசமாக பேசியதை அடுத்து, வாசன் மீது புகார் பதிவாகியது. ஜூன் 2023ல் நீலகிரி மலையில் அதிகவேகமாக பைக் ஓட்டியது, ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியதற்காக, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2k கிட்ஸ் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள காரணத்தால், திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாசன் பெற்றுள்ளார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் 'மஞ்சள் வீரன்' என்ற படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கான போஸ்டரில் படப்பிடிப்பு மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வாசன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
வாசன் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீதான நடவடிக்கை முறையாக எடுக்கப்படவில்லை என்ற வாதத்தை வைக்கிறார் 'ஆர் -சேப்' (R -SAFE )என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழ்நாடு அரசின் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் துணை இயக்குநராக செயல்பட்டவர்.
''வாசன் தொடர்ந்து அதிக வேகத்தில் பயணிப்பது, சாலை விதிகளை மீறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார். இதுபோல தொடர்ந்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கலாம் என்ற சட்டவிதிகள் உள்ளன.
விதிமீறலில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவர் மீது நடவடிக்கை பாயவில்லை எனில், அவரை பின்தொடர்பவர்களுக்கு என்ன செய்தியை நாம் சொல்கிறோம் என்று யோசிக்க வேண்டும். இவர் விதிமீறலில் ஈடுபட ஊக்குவிக்கும் நபர்களாக நாம் மாறிவிடுவோம்,''என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
மேலும் அவர், அதிக வேகத்தில் பயணித்தால் கட்டாயமாக ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வண்டியை ஓட்டினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவேண்டும் என்கிறார்.
பொது சாலையில் ரேஸிங் உள்ளிட்ட சாகசங்களை செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கவேண்டும் என மோட்டார் வாகன சட்டம் (1988) சொல்கிறது. ஆனால் தொடர்ந்து வாசன் விதிமீறலில் ஈடுபடுவதால், கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அவரை பின்தொடரும் இளைஞர்களுக்கு விதிமீறல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்கிறார்.
சென்னை ஐஐடியில் உள்ள சாலை பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் வெங்கடேஷ் பேசுகையில், விதிமீறல் மீதான சட்டநடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமூகவலைத்தளங்களில் இதுபோன்ற வீடியோ வெளியாகுவதை தடுக்கவேண்டும் என்கிறார் .
''வாசன் போன்ற பல இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளார்கள். ஒரு சிலர் வீடியோ போடுவதற்காகவே பலவிதமான சாகசங்களை செய்கிறார்கள். விதிமீறலாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் பிரபலம், பணம் அவர்களை தொடர்ந்து இதில் ஈடுபடுத்துகிறது. அதனால், யூடியூப் உள்ளிட்ட சமூ கவலைதளநிறுவனங்கள் இதுபோன்ற விதிமீறல் செயல்கள் கொண்ட வீடியோகளை அந்த தளத்தில் இருந்து நீக்க வேண்டும். அதுதான் தீர்வாகும்,''என்கிறார் அவர்.
வாசனின் பதில் என்ன?
விதிமீறல்களில் ஈடுபவது குறித்து வாசனிடம் பேச பலமுறை முயன்றும் அவரது அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாசனுடன் இருப்பதாக தெரிவித்த அவரது நண்பர் அஜீஸ், தற்போது எந்த பதிலும் சொல்லும் நிலையில் இல்லை என்று தெரிவித்துவிட்டார். மருத்து சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதால், வாசன் தற்போது பேசமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்