You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம் - என்ன நடந்தது?
மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். அதைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
எஃப்-35 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது.
பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் நலமாக உள்ளார்.
என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் விமானம் ‘விபத்துக்குள்ளானதாக’ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சார்லஸ்டனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் படைத் தளம் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
"அவசர கால மீட்புக் குழுக்கள் எஃப்-35 விமானத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இந்த முயற்சி தொடர்வதால் பொதுமக்கள் ராணுவம், சிவில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மீட்புக் குழுக்களுக்கு உதவும் தகவல்களைத் தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது எஃப்-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இந்த விமானம் இது லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.
எஃப்-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.
2018 ஆம் ஆண்டில், தென் கரோலினாவில் ஒரு விபத்துக்குப் பிறகு, அமெரிக்க ராணுவம் அதன் முழு எஃப்-35 போர் விமானங்களையும் பறப்பதில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்