டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியை கொண்டாட ஓவல் மைதானத்துக்கு யானையை கொண்டு வந்த இந்திய ரசிகர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அர்னவ் வசாவட
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதுவொன்றும் மதமல்ல என்று கூறும் கிரிக்கெட் ரசிகர்கள், வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள 24 ஆகஸ்ட், 1971 என்ற தேதியின் முக்கியத்துவதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்த நாளில்தான் இந்திய கிரிக்கெட்டின் பொற்கலம் தொடங்கியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அது தொடங்கிய இடம் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானம்.

ஆம், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை விளையாடிவரும் அதே மைதானம்தான்.

இந்த மைதானத்தின் முக்கியத்துவத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்துகொள்வது அவசியம். 24 ஆகஸ்ட், 1971 அன்று இந்த மைதானத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று அதன்பின் தற்போதுவரை எந்த மைதானத்திலும் நிகழவில்லை.

அப்படி என்ன வரலாற்று நிகழ்வு நிகழ்ந்தது? இங்கிலாந்து அணியை இந்திய அணி அவர்களின் சொந்த மைதானத்தில் வைத்து முதன்முறையாக வீழ்த்தியது எப்படி?

வரலாற்று நிகழ்வைக் காண வாடக்கைக்கு எடுக்கப்பட்ட யானை

இந்திய கிரிக்கெட் அணி அஜித் வடேகர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக 1971ஆம் ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மழை காரணமாக டிராவில் முடிந்தது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுப்பயணத்துக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து ஒரு ஆட்டத்தில் கூட வென்றது இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அங்கீகாரம் இந்திய அணிக்கு 1932ஆம் ஆண்டு கிடைத்தது. 1971ஆம் ஆண்டு வரை இங்கிலாந்துக்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியிருந்தாலும் ஒன்றில்கூட வெற்றி பெற்றது கிடையாது.

இந்தியா- இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில்தான் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றை 1971இல் மாற்றி எழுதியது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. அதே நாளில் விநாயகர் சதுர்த்தி தினமும் வந்தது.

எனவே, இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அதன்படி, செஸ்ஸிங்டன் உயிரியல் பூங்காவில் இருந்து யானை ஒன்றை அவர்கள் வாடகைக்கு எடுத்தனர்.

அந்த யானையை ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓவல் மைதானத்துக்கு அவர்கள் அழைத்து வந்தனர். ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மைதானத்தில் யானையை உலா வரச் செய்தனர்.

இந்தியா- இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக ஹேமு அதிகாரி இருந்தார். மைதானத்தில் யானை நடந்து செல்வதைப் பார்த்த அவர், வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த நாளின் நல்ல சகுனமாகவே அதைக் கருதினார்.

இந்தியர்களின் ஏக்கத்தைத் தீர்க்கும்விதமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

கிரிக்கெட் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரை வென்றால் தவிர, எந்தவொரு டெஸ்ட் விளையாடும் நாடும் உலக அளவில் வலுவான கிரிக்கெட் அணியாகக் கருதப்படாத காலம் அது.

1960களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய கிரிக்கெட் அணியை இங்கிலாந்து அணி ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்தது.

இந்தியா- இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், COLUMBIA UNIVERSITY PRESS

ஆட்டத்தின் மூன்றாவது நாளில் என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இந்தத் தருணத்தை தனது ` 'Nation at Play - A History of Sport' என்ற புத்தகத்தில் ரோனோஜாய் சென் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாளில் இங்கிலாந்து அணி 101 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் இது. இந்தியாவின் லெக் ஸ்பின்னர் பகவத் சந்திரசேகர் இந்த ஆட்டத்தில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

18.1 ஓவர்களை வீசிய அவர் வெறும் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்தின் 6 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இதில், 3 ஓவர்களும் அடக்கம். அவரது சராசரி 2.09 ஆக இருந்தது என்று ரோனோஜாய் சென் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், 5000 இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஓவல் மைதானத்தில் கண்டு ரசித்ததாகவும் ரோனோஜாய் சென்று குறிப்பிடுகிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் குறிப்பு ஒன்றைத் தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய சென், `இந்திய பேட்ஸ்மேன் சையித் அபித் அலி பவுண்டரி அடித்து அணியின் வெற்றியைக் கொண்டாட பெவிலியன் நோக்கி ஓடியபோது, மைதானத்தின் மேற்கூரையில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு ஓடிச் சென்று வெற்றியை கொண்டாடினர்,` என்று எழுதியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

மைதானத்தில் அதிகளவு ரசிகர்கள் கூடினர். இதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சையித் அபித் அலி மற்றும் ஃபரூக் இஞ்சினீர் ஆகியோரால் பெவிலியன் செல்ல முடியவில்லை. ரசிகர்கள் அவர்களைத் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

19 ஆகஸ்ட், 1971இல் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் ஓவல் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரே இல்லிங்வோர்த் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 355 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர் ஏக்நாத் சோல்கர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பேடி, பிரசன்னா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. திலீத் சர்தேசாய், ஃபரூக் இஞ்சினீர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

71 ரன்கள் முன்னிலையோடு இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை விளையாட வந்தபோது, இந்திய அணி நிச்சயம் தோற்றுவிடும் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.

ஆனால், 4வது நாள் ஆட்டத்தின்போது பகவத் சந்திரசேகர் தனது மாயாஜால சுழற்பந்துவிச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார். இறுதியில் 101 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.

இந்தியா- இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

வரலாற்றில் தங்கள் பெயரைப் பதிவு செய்யக்கூடிய வெற்றியைப் பெறுவதற்கு இந்திய அணிக்கு 173 ரன்கள் தேவைப்பட்டது.

இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் ஜான் ஸ்னோ ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் அஜித் வடேகர்- அசோக் மன்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். எனினும், 11 ரன்களில் ஆட்டமிழந்து அசோக் மன்கட் வெளியேறினார். இந்தியாவின் ஸ்கோர் 37/2 ஆக இருந்தது. தற்போது திலீப் சர்தேசாய் களமிறங்கினார்.

5வது நாள் ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தியாவின் ஸ்கோர் 76/2 ஆக இருந்தது. இறுதி நாளில் அஜித் வடேகர் - திலீப் சர்தேசாய் ஆகியோர் தங்களது நிதானமான, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வடேகர் 118 பந்துகளைச் சந்தித்து 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திலீத் சர்தேசாய் 156 பந்துகளைச் சந்தித்து 40 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அப்போது, இந்தியாவின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது.

குண்டப்பா விஸ்வநாத் 33 ரன்களும், ஃபரூக் இஞ்சினீர் 28 ரன்களும் எடுத்து வெற்றி இலக்கை எட்டுவதில் பங்காற்றினர்.

5ம் நாளின் உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சையீத் அபித் அலி பவுண்டரி அடித்து வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு வசப்படுத்தினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: