சத்தீஸ்கர்: பசு கடத்தியதாக 3 பேர் மீது கொடூர தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்

சத்தீஸ்கர்: 'பசு கடத்தல்' சந்தேகத்தின் பேரில் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

பட மூலாதாரம், ALOKA PUTUL

படக்குறிப்பு, சதாம் குரேஷி படுகாயம் அடைந்துள்ளார். அவருடைய வீடியோ வைரலாகி வருகிறது.
    • எழுதியவர், அலோக் படுல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக ராய்பூரிலிருந்து

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரை ஒட்டியுள்ள அராங் நகரில் பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட சந்த் மியான் மற்றும் குட்டு கான் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இளைஞர் சதாம் குரேஷியின் வாக்குமூலத்தைப் பெற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். சதாமின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இச்சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவுபடுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள மஹாசமுந்த்-அராங் சாலையில் உள்ள மகாநதி மீதுள்ள பாலத்தில் இவர்களின் லாரி சென்று கொண்டிருந்தபோது, ​​வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவல்துறை கூறுவது என்ன?

ராய்ப்பூர் கிராமப்புற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீர்த்தன் ரத்தோர் பிபிசியிடம் கூறுகையில், "கொல்லப்பட்டவர்கள் ஒரு லாரியில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது, சிலர் அவர்களை அடித்ததாக அங்கிருந்த சிலர் கூறுகின்றனர். அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க லாரியில் இருந்தவர்கள் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததாக சிலர் கூறுகின்றனர். இதில் காயமடைந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்” என்றார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த சதாம் குரேஷியின் வாக்குமூலம் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தும் என்று கீர்த்தன் ரத்தோர் கூறினார்.

மேலும், "இந்த வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இது கும்பல் தாக்குதல் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த மூவரையும் துரத்தியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

“சந்தேகத்திற்கிடமான சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

சத்தீஸ்கர்: 'பசு கடத்தல்' சந்தேகத்தின் பேரில் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்படம்

‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தியின்படி, "சிலர் அவர்களைப் பின்தொடர்வதாக காவல்துறை உதவி எண்ணுக்குத் தகவல் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மகாநதியில் உள்ள பாலத்தின் கீழ் மூவரையும் கண்டனர். அவர்களில் ஒருவர் அங்கேயே இறந்து கிடந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மஹாசமுந்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்” என்றார்.

எனினும், காவல்துறை தகவல்களுக்கு மாறாக, அங்குள்ள உள்ளூர் மக்கள் சிலர், இந்த மூன்று பேரும் வெள்ளிக்கிழமை மஹாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பரோடா மாட்டுச் சந்தைக்கு சென்றதாக கூறுகின்றனர். அங்கு எருமை மாடுகளை வாங்கி லாரியில் ஏற்றிக்கொண்டு ஒடிசாவுக்கு புறப்பட்டதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத சிலர் கூறுகின்றனர். ஆனால் வழியில் சிலர் அவர்களை துரத்திச் சென்றதாகவும், இதையடுத்து அவர்கள் ராய்ப்பூர் செல்ல முடிவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் பிபிசியிடம், "அவர்களின் வாகனம் மஹாசமுந்தில் இருந்து ராய்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது, அந்த வாகனத்தை சிலர் துரத்திச் சென்றதாக தகவல் வந்தது. ஒரு இளைஞர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. எனினும், அவரிடமிருந்து வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தோஷ் சிங் தெரிவித்தார். இவர்கள் எப்படி பாலத்தில் இருந்து விழுந்தனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழிடம், "இறந்தவர்களில் ஒருவரின் பிரேத பரிசோதனை ராய்ப்பூரில் செய்யப்பட்டுள்ளது, மற்றவரின் பிரேத பரிசோதனை மஹாசமுந்தில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்காகவும் காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது?

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 2 மணி முதல் 3 மணிக்கு இடையில் நடந்துள்ளது. எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று அராங் அருகே உள்ள மகாநதி பாலத்தை வந்தடைந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 12 இளைஞர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, லாரியில் ஏறிய மூன்று இளைஞர்கள் மாடு கடத்தியதாகக் குற்றம்சாட்டி அவர்களை அடிக்கத் தொடங்கினர்.

காயமடைந்த நிலையில் சந்த் மியான் மற்றும் குட்டு கானை ஆகிய இருவரையும் அவர்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதில் சந்த் மியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த குட்டு கானை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு குட்டு கானும் உயிரிழந்தார்.

காயமடைந்த சதாம் குரேஷி, ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், காயமடைந்த குட்டு கானின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், சதாம் தாக்கியவர்கள் பதினைந்து-இருபது பேர் என்றும், முதலில் அவரை அடித்து பின்னர் பாலத்தில் இருந்து தூக்கி வீசியதாகவும் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள்?

சத்தீஸ்கர்: 'பசு கடத்தல்' சந்தேகத்தின் பேரில் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

பட மூலாதாரம், ALOKA PUTUL

படக்குறிப்பு, சதாம் குரேஷியின் வைரல் வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்.

சதாம் குரேஷி மற்றும் சந்த் மியானின் உறவினர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம் பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்கு இடையில் இருவரும் தனது வீட்டிற்கு மொபைலில் அழைத்ததாக அவர் தெரிவித்தார். அவர்கள் மொபைலில் அழைத்த சமயத்தில், அந்த கும்பல் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த உறவினரின் கூற்றுப்படி, "குரேஷியுடன் தொலைபேசி உரையாடல் சுமார் 47 விநாடிகள் நீடித்தது; முழு அழைப்பின் போதும், அவர் உதவிக்காக கூச்சலிட்டார். தன்னை அடிக்க வேண்டாம் என்றும் தண்ணீர் தருமாறும் அவர்களிடம் கேட்டார்."

சந்த் மியானிடம் இருந்துதான் முதல் அழைப்பு வந்ததாக அவர் கூறுகிறார். சிலர் தங்களது வாகனத்தை நிறுத்தி தாக்கியதாக சந்த் மியான் கூறியுள்ளார். சிலர் சந்த்-ன் மொபைலை பறித்ததாகவும் அதனால் அவருடன் மேலும் பேச முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சந்த் மியானின் அழைப்புக்குப் பிறகு, சுமார் 3 மணியளவில் சதாமிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து உறவினர் செய்தித்தாளிடம் கூறுகையில், "சதாம் லாரி உதவியாளராக பணிபுரிந்து வந்தார். குடும்பத்தினரை மொபைலில் அழைத்து பின்னர் அதை பாக்கெட்டில் வைத்துள்ளார். கை, கால்கள் உடைந்துவிட்டதாக அவர் அலறியுள்ளார். 'தண்ணீர் கொடுங்கள்' என கெஞ்சியுள்ளார்” என கூறியுள்ளார்.

மற்றவர்கள் பேசுவதையும் மொபைல் மூலம் கேட்க முடிந்ததாக கூறிய அவர், “எங்கிருந்து இவற்றை (எருமை மாடுகள்) கொண்டு வந்தாய்? உங்களை விட மாட்டோம்” என சிலர் கூறியதும் கேட்டதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்த அளவுக்குப் பெரிதாகும் என்று அவர்களின் குடும்பத்தினர் அறியவில்லை.

அந்த உறவினர் கூறுகையில், "5 மணியளவில் சந்த் மியானின் தொலைபேசியை அழைத்தபோது, ​​​​ஒரு போலீஸ் அதிகாரி அழைப்பைப் பெற்றார். அவர் சந்த் மியான் இறந்துவிட்டதாகக் கூறினார்." என்றார்.

ராய்ப்பூர் ஊரகப் பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீர்த்தன் ரத்தோர், தற்போது இது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியதாக செய்தித்தாள் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் பேசினார்கள் என்பதை அறிய, மொபைல் பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்வார்கள்,'' என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)