You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி வெள்ளத்திற்கு நடுவே சிக்கிய 6 நாய்களும் மீட்பு - 6 நாள் போராட்டம் வெற்றி பெற்றது எப்படி?
- எழுதியவர், சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பை படம் பிடிக்க சேலத்தை சேர்ந்த ஒருவர் பறக்கவிட்ட டிரோன் கேமராவில், வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்த கருப்பு நாய் ஒன்றின் படம் பதிவானது. இது பலரின் கவனத்தை மேட்டூரை நோக்கி திருப்பியுள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய பட்டாளமே மேட்டூர் அணையின் 16 ம் கண் மதகு பகுதியை நோக்கி முகாமிட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஜூலை 30ம் தேதி மாலை மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது.
இதையடுத்து வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சேலத்தை சேர்ந்த சாய் என்பவர் கடந்த 1-ஆம் தேதி டிரோன் கேமரா மூலம் இதை படம் பிடித்தார்.
அப்போது 16 கண் மதகு பகுதி அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளுக்கு நடுவே கருப்பு நாய் ஒன்று சிக்கி தவித்தது தெரிய வந்தது.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால் நாயை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் டிரோன் மூலம் நாய்க்கு உணவளிக்கும் பணியை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர்.
நாய்களை மீட்டுவர 6 நாட்களாக நீடித்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இன்று காலையில் 6 நாய்களும் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வெள்ளத்திற்கு நடுவே பரிதவிக்கும் நாய்கள்
இந்தநிலையில் பாறைக்கு நடுவே சிக்கியிருந்த நாய் ஆற்றில் குதித்து நீந்தி அருகேயிருந்த மணல் திட்டிற்கு சென்றது. அங்கு இதேபோல் மேலும் பல நாய்கள் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றிற்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் காவிரி வெள்ளத்தில் சிக்கியுள்ள நாய்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி 'விலங்குகளின் சொர்க்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆம் தேதி பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் துறையினர், டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
அணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றப்படும் அளவு குறைந்திருப்பதால் நாய்களை மீட்கும் பணியை துவங்க உள்ளதாக தீயணைப்பு துறையினர் நேற்று (ஆகஸ்ட் 5) கூறினர்.
''16 கண் மதகு பாலம் அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டில் நாய்கள் சிக்கியுள்ளன. அந்த திட்டு 20 முதல் 25 அடி நீள அகலமுடைய திட்டாகும். மணல் திட்டில் மரங்களும், பாறைகளும் உள்ளன. இதனால் நாய்கள் பாதுகாப்பாகவே உள்ளன.''
''கடந்த 4 நாட்களாக அவற்றிற்கு உணவு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்திருப்பதால் அவற்றை நீரில் இறங்கி மீட்கும் பணியை துவங்க இருக்கிறோம்'' என சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தெரிவித்தார்.
டிரோன் மூலம் உணவு
நாய்களுக்கு உணவளிக்க டிரோன் இயக்கி வரும் தன்னார்வலரான ஜியோ டெக்னோவேலி இயக்குநர் சர்வேஸ்வரன் கூறும்போது, ''1 கிலோ வரை எடுத்து செல்லும் டிரோன்களை பயன்படுத்தவே எங்களுக்கு அனுமதி உள்ளது. 30 கிலோ டிரோன்களை பயன்படுத்த அனுமதி அளித்தால் அதன் மூலம் நாய்களை மீட்கலாம். இதற்கான அனுமதியை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அரசு தரப்பில் அனுமதி வழங்கவில்லை.''
''நாய்கள் மீட்கப்படும் வரை, மூன்று வேளையும் டிரோன் மூலம் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன்'' என்றார்.
''தண்ணீர் குறையும் போது நாய்கள் தானாக நீந்தி வெளியே வந்துவிடும். நாய்களுக்கு நன்றாக நீச்சல் தெரியும். தண்ணீர் அதிகமாக சென்றதால் பயந்து அங்கேயே நின்றுள்ளன. நாய்களுக்கு ஸ்டாமினா அதிகமாக உள்ளது. அவை பசியை தாங்க கூடியவை. நாய்களின் உயிருக்கு பாதிப்பில்லை. நாய்கள் கூட்டமாக இருப்பதால் அவை மனரீதியான நம்பிக்கையோடே இருக்கும்'' என்றார் வனத்துறையில் பணியாற்றிய முன்னாள் கால்நடை மருத்துவர் கே.அசோகன்.
மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவர் வெங்கடேசன் கூறும்போது, ''நாய்களுக்கு கடந்த 4 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிக்கன் பிரியாணி, ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்பட்டது. நாய்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது. 40 தீயணைப்புதுறை அலுவலர்கள், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
கருப்பு நாய் எங்கே போனது?
''அணையில் நீர் திறக்கப்பட்டபோது கருப்பு நாய் ஒன்று சிக்கி கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு உணவு அளிப்பதற்காக கேமரா டிரோன் அனுப்பிய போதுதான் மேலும் 6 நாய்கள் அங்கே இருப்பது தெரிய வந்தது'' என்கிறார் ஹெவன் பார் அனிமல்ஸ் அமைப்பின் அறங்காவலர் செந்தமிழ் கிருஷ்ணன்.
''இதற்கிடையே எங்கள் அமைப்பின் நிறுவனர் பிரகாஷ் காந்த் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரச வழக்கை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாய்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்'' என்கிறார் அவர்.
''நீர் குறைந்தவுடன் நாய்கள் வந்துவிடும் என்று கூறுகின்றனர். அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் மீட்பதே சிறந்த வழியாக இருக்கும்'' என்றார்.
6 நாய்களும் பத்திரமாக மீட்பு
மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கியிருந்த 6 நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
நாய்களுக்கு டிரோன் மூலமாக உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், 16ஆம் எண் மதகில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டது. இதனால், இன்று காலை 5 மணியளவில் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மணல் திட்டிற்குச் சென்று நாய்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட நாய்கள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக மேட்டூர் தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)