'அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம்' என கூறும் டிரம்ப் - அதிக அணு ஆயுதங்களை கொண்ட நாடு எது?

பட மூலாதாரம், Getty Images
உலகில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"இந்த சாதனை எனது முதல் பதவிக் காலத்தில் நடந்தது. அப்போது ஏற்கெனவே இருந்த அணு ஆயுதங்கள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன" என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.
அணு ஆயுதங்கள் "மிகுந்த அழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை" என்பதால் இதைச் செய்ய விரும்பவில்லை எனவும் ஆனால் "வேறு வழியில்லை" எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, இந்தப் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவும் அமெரிக்காவுக்கு இணையான நிலையை அடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிற நாடுகளின் அணு ஆயுத சோதனைத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அணு ஆயுதங்களையும் சோதனை செய்யத் தொடங்குமாறு போர்த் துறைக்கு (Department of War) தாம் உத்தரவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக அக்டோபர் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, ரஷ்ய ராணுவத்தின் தலைமை ஜெனரல், அணுசக்தியால் இயங்கும் பியூரெவெஸ்ட்னிக் குரூஸ் ஏவுகணையை ரஷ்யா சோதித்ததாகக் கூறியிருந்தார்.
"நாங்கள் அணுசக்தியால் இயங்கும் ஏவுகணையின் பல மணி நேர சோதனையை நடத்தினோம்" என்று அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கூறினார். "அந்த ஏவுகணை 14,000 கிலோமீட்டர் (8,700 மைல்) தூரம் பறந்தது. அதுவும் அதன் அதிகபட்ச தூரம் அல்ல," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறக்கும் வகையைச் சேர்ந்தது. இது முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு வரம்பற்ற திறன் உண்டு என்றும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் திறன் கொண்டது என்றும் ரஷ்யா கூறுகிறது.
அக்டோபர் 21 அன்று நடந்த சோதனையின் போது இந்த ஏவுகணை 15 மணி நேரம் பறந்தது என தலைமை ஜெனரல் ஜெராசிமோவ் கூறினார்.
இந்த ஏவுகணையின் உத்தி சார்ந்த முக்கியத்துவம் மற்றும் வெற்றிகரமான சோதனை பற்றிய ரஷ்யாவின் கூற்றுக்கள் குறித்து மேற்கத்திய நிபுணர்கள் முன்பே சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
2023ல், இதே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக புதின் கூறியிருந்தார். ஆனால், அந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா மீதான அச்சம்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிடம் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், 2022-ஆம் ஆண்டின் தரவுகளைப் பார்த்தால், ரஷ்யாதான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான ரஷ்யாவின் கொள்கையில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தார்.
ரஷ்யாவின் இந்த அணுசக்தி கொள்கையில், அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு நாடு, அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டோடு இணைந்து தாக்குதல் நடத்தினால், அதை ரஷ்யா கூட்டுத் தாக்குதலாகக் கருதும் என்று கூறப்பட்டது.
யுக்ரேனுடனான போரில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒருங்கிணைந்து யுக்ரேனை ஆதரிக்கக்கூடும் என்று ரஷ்யா அஞ்சியது. 32 நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோவும் யுக்ரேனை ஆதரிக்கிறது.
அதேபோல், ரஷ்யா மீது ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதை ரஷ்யா அறிந்தால், அது அணு ஆயுதங்களைக் கொண்டு பதிலளிக்க முடியும் என்றும் ரஷ்யாவின் அணுசக்தி கொள்கை கூறுகிறது.
இது தவிர, ரஷ்யாவின் அணுசக்தி கொள்கையில் வேறு சில சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
யாராவது ஒரு புதிய ராணுவக் கூட்டணியை உருவாக்கினால், ஏற்ககெனவே உள்ள கூட்டணியை விரிவுபடுத்தினால், ராணுவ உள்கட்டமைப்பை ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் கொண்டு வந்தால், அல்லது ரஷ்ய எல்லைக்கு அருகில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று அது கூறுகிறது.
அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் அணு ஆயுதத் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், ரஷ்யா அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகக் கூறிய புதின், அமெரிக்கா தனது படைகளை யுக்ரேனுக்குள் அனுப்பினால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று கூறியிருந்தார்.
உலகில் அதிக அளவிலான அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது. ஆனால், பெரும்பாலான நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் சரியான எண்ணிக்கையையோ விபரங்களையோ வெளிப்படுத்துவதில்லை.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் (Federation of American Scientists) மதிப்பீட்டுப்படி, 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா சுமார் 5,977 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களை விட அதிகம். இதில் சில 'திட்டமிட்ட' அணு ஆயுதங்களும் அடங்கும்.
உத்தி சார்ந்து இயங்கும் அணு ஆயுதங்கள் என்பது சிறிய அளவிலானவை. குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட அவற்றை, ஏவுகணைகள் மூலமாக ஏவ முடியும்.
திட்டமிட்ட அணு ஆயுதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே குறிவைத்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான அணு ஆயுதங்கள் ஆகும். இத்தகைய ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் ஏவ முடியும்
அவை நீண்ட தூரத்துக்கு கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இது ஒரு கிலோடன் வரை அணு வெடிபொருளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் எடை சுமார் 15 கிலோ டன்.
இந்த ஆயுதங்கள் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், புதினின் கருத்துக்கள் பெரும்பாலும் வாய்மொழி மட்டும் தான் என, மேற்கத்திய ஊடகங்களில் கூறப்படுகின்றன. அதாவது, அவர் அவற்றை உண்மையாக அல்ல, அரசியல் தாக்கத்தை உருவாக்குவதற்காகச் சொல்கிறார் என அவை குறிப்பிடுகின்றன.
அப்படியென்றால் அவர் சொல்வது உண்மையிலேயே நிகழ வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
புதினின் இந்த புதிய அணு கொள்கையை, உலகளாவிய பதற்றத்தை அதிகரித்து தனது செல்வாக்கை வலுப்படுத்தும் அரசியல் உத்தியாக சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












