இரானில் அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட போது என்ன நடந்தது? அமெரிக்கா பணிந்த கதை

இந்தச் சம்பவம் 1979, நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. இஸ்லாமிய மாணவர்கள் இரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கி, 90-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.

நாட்டிலிருந்து தப்பி ஓடிய மன்னர் ஷாவை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இரானில் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க இரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரோ அல்லது காவல்துறையினரோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு, இரானியத் தொலைக்காட்சிகளும் இந்த முற்றுகையை நேரலையாக ஒளிபரப்பி மாணவர்களின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தது.

தூதரகத்தின் உள்ளே இருந்தவர்களில் ஒருவர் தொலைபேசி வாயிலாகச் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தச் செயல் தங்களின் வலிமையை நிரூபிக்கும் ஒரு நடவடிக்கை என்றும், பிணைக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வார முற்றுகைக்குப் பிறகு, அமெரிக்கத் தூதரகத்திலிருந்து 13 பெண்கள் மற்றும் கறுப்பினப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

காமனெயி - அமெரிக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னணி

தூதரகத்தின் மீதான இந்தத் தாக்குதல் இரானில் பல மாதங்களாக நிலவி வந்த அரசியல் மற்றும் மத ரீதியான பதற்றங்களின் விளைவாகத் தொடங்கியது. ஆனால், இதற்கான ஆரம்பம் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

1964-ஆம் ஆண்டு ஷா மன்னரால் காமனெயி இரானிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் விளைவாக, ஆயதுல்லா காமனெயி நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தார். பிணைக்கைதிகள் நெருக்கடி ஏற்பட்ட போது, காமனெயி பிரான்சில் இருந்தார்.

ஷா ரெஸா பஹ்லவிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள், காமனெயி கட்டளையின் பேரில் இரானில் ஒரு மாபெரும் புரட்சியாக உருவெடுத்தன.

அந்த நேரத்தில், இரானில் பெரும் குழப்பம் நிலவியது. பொதுச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக எண்ணெய் விநியோகம் முற்றிலும் முடங்கியது. இதன் விளைவாக, மேற்கத்திய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகின.

15 ஆண்டு கால நாடு கடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு, ஆயதுல்லா இரானுக்குத் திரும்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஷா மன்னரின் இந்த 'விடுமுறையை' நிரந்தரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இருப்பினும், காமனெயி பதற்ற நிலையில் இருந்த ராணுவத்தைக் கண்டு அஞ்சினார். ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அவர் மீது வெறுப்பு இருந்தது. அதைவிடக் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அந்த அதிகாரிகள் ராபர்ட் இ. ஹியூசர் என்ற அமெரிக்க விமானப்படை ஜெனரலைத் தினமும் சந்தித்து வந்தனர்.

அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், ராணுவ அதிகாரி ராபர்ட் ஹியூசரை டெஹ்ரானுக்கு அனுப்பினார். அவர் இரானிய ராணுவ அதிகாரிகளிடம் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்றும், அப்போதைய அரசுடன் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவை 'சைத்தான்' என்று அழைத்த இரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரான ஆயதுல்லா காமனெயி, 1979 ஜனவரி 27-ஆம் தேதி வாஷிங்டனுக்கு ஒரு ரகசியச் செய்தியை அனுப்பினார்.

அதில் காமனெயி "இரானிய ராணுவத் தலைவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறார்கள், ஆனால், இரானிய மக்களோ எனது கட்டளைகளையே பின்பற்றுகிறார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

ஜிம்மி கார்ட்டர் ராணுவத்தின் மீது தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இரானில் தான் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தால், நாட்டில் அமைதியை நிலைநாட்டி நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவருவதாக அவர் கூறினார்.

இரானில் உள்ள அமெரிக்காவின் தேசிய நலன்களும், அமெரிக்க குடிமக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் காமனெயி உறுதியளித்தார்.

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய தனது முதல் தனிப்பட்ட செய்தியில் காமனெயி, "27 ஆண்டுகளாக உங்களின் கூட்டாளியாக இருந்த ஒருவரை இழந்துவிடுவோம் என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். அவர்கள் தொடர்ந்து நண்பர்களாகவே இருப்பார்கள்" என கூறினார்.

இரான் "அனைத்து மனித குலத்தின் அமைதி மற்றும் நிம்மதிக்காகப் பாடுபடும் ஒரு மனிதாபிமானக் குடியரசாக" விளங்கும் என்று உறுதியளித்த காமனெயி, "உங்களுடன் எங்களுக்குத் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்" என்றும் கூறினார்.

ஆயதுல்லாவின் செய்தி உண்மையில் ஒரு தீர்வுக்கு வழிவகுத்தது. பிரான்சில் இருந்த அவருடைய ராணுவத் தளபதிக்கும், அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டு வாரங்களாக நடந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

கார்ட்டரின் வற்புறுத்தலால், இரானின் அப்போதைய சர்வாதிகாரியான முகமது ரெஸா ஷா பஹ்லவி, செல்வாக்கற்ற ஒரு பிரதமரையும், சிதறிப்போயிருந்த நான்கு லட்சம் பேரைக் கொண்ட ராணுவத்தையும் விட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு "விடுமுறை" சென்றார். அதன் பிறகு அவர் ஒருபோதும் இரானுக்குத் திரும்பவில்லை.

அடுத்த ஒரு வாரத்திற்குள், அதாவது 1979 பிப்ரவரியில், காமனெயி இரான் திரும்பினார். டெஹ்ரான் தெருக்களில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இரானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய காமனெயி, போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் தனது ஆதரவை அறிவித்தார்.

ஆயதுல்லா, அப்போதைய பிரதமர் ஷபூர் பக்தியாரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக மெஹ்தி பஸர்கானை நியமித்தார். பின்னர் ஏப்ரல் மாதத்தில், இரானை ஓர் இஸ்லாமியக் குடியரசாக அவர் அறிவித்தார்.

சுமார் 46 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பதவியிறக்கப்பட்ட ஷா மன்னரின் மூத்த மகன் தற்போது அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி-யில் வசித்து வருகிறார். அவர் இரானிய மக்கள் வீதிக்கு வந்து அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் போராட்டங்களின் போது, சிலர் ஷா மன்னரின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

சிஐஏ (CIA) உளவாளிகளின் பதற்றமான நிமிடங்கள்

காமனெயி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் பதற்றங்கள் நீடித்தன. ஏப்ரல் 1980-இல் பிணைக்கைதிகளை மீட்பதற்கான ஒரு அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதில் எட்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகள் நெருக்கடியின் போது, தூதரகத்திற்குள் இருந்த ஆறு அமெரிக்கர்கள், இரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அங்கு வருவதற்கு முன்பே பின்பக்கக் கதவு வழியாகத் தப்பினர். அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று கனடா தூதரின் இல்லத்தில் தஞ்சமடைந்தனர்.

ஒருபுறம், இரானியப் புரட்சியாளர்களோ அல்லது சர்வதேச ஊடகங்களோ அந்த ஆறு பேரைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற ஆபத்து இருந்தது; மறுபுறம், பிணைக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்ற அழுத்தம் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு இருந்தது.

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான டோனி மெண்டெஸ், அந்த ஆறு பிணைக்கைதிகளையும் இரானிலிருந்து வெளியேற்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக அவர் எந்தவித சந்தேகமும் ஏற்படாதவாறு இரானுக்குள் நுழைய வேண்டியிருந்தது.

அனைத்து சர்வதேசப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்ததால், ஓர் ஆசிரியராக இரானுக்குள் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது. மறுபுறம், நாட்டில் நிலவிய குழப்பமான சூழலால், எண்ணெய் நிறுவனத் தொழில்நுட்ப வல்லுநர் அல்லது விவசாய நிபுணர் என்ற போர்வையில் கூட இரானுக்குள் நுழைவது இயலாத காரியமாக இருந்தது.

அவர் 1980 ஜனவரி மாதம் தனது சட்டைப்பையில் 10,000 டாலர்களுடன் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குச் சென்றார். ஹாலிவுட் திரைத்துறையுடன் இணைந்து பணியாற்றுவதில் சிஐஏ-வுக்கு நீண்டகால வரலாறு உண்டு.

அவர்கள் ஒரு திரைக்கதை ஆசிரியரை வேலைக்கு அமர்த்திவிட்டுத் தங்கள் வேலையைத் தொடங்கினர். மெண்டெஸ் தனது போலித் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டுடியோ 6' க்காக ஓர் அலுவலக இடத்தைக் கண்டுபிடித்தார்.

'ஆர்கோ' (Argo) திரைப்படத்திற்கான திரைக்கதை இரண்டே நாட்களில் எழுதி முடிக்கப்பட்டது. அதன் கதைக்களம் புகழ்பெற்ற அறிவியல் புனைவுத் திரைப்படமான 'ஸ்டார் வார்ஸ்' கதையை ஒத்திருந்தது.

வரவிருக்கும் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பரபரப்பை உருவாக்குவதற்காக, ஸ்டுடியோ 6 நிறுவனம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் மற்றும் வெரைட்டி போன்ற பிரபல இதழ்களை அணுகியது. இரானிய அரசு ஒருவேளை தனது பின்னணியைப் பற்றி விசாரித்தால், அது முற்றிலும் உண்மையானது என்று அவர்கள் நம்பும் வகையில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும் என்று மெண்டெஸ் விரும்பினார்.

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சிஐஏ உயரதிகாரிகளையும், கனடா மற்றும் அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகளையும் சம்மதிக்க வைக்க மெண்டெஸுக்கு பல வாரங்கள் தேவைப்பட்டன. இத்தகைய ஒரு நடவடிக்கையில் ஏற்படும் தோல்வி, இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, அந்த ஆறு பிணைக்கைதிகளின் உயிருக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

மெண்டெஸின் மனைவி ஜோன்னாவும் சிஐஏ ஊழியர்தான் என்ற போதிலும், மெண்டெஸ் டெஹ்ரான் செல்லத் தயாரானபோது, தனது கணவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு புரியவில்லை.

அதிபர் ஜிம்மி கார்ட்டரிடம் இந்தத் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. அதன்பின் அவர் மெண்டெஸுக்கு ஒரு சிறப்புக் குறிப்பை அனுப்பினார். அதில் 'வாழ்த்துகள் (Good luck)' என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் இது 'ஆர்கோ' என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

444 நாட்களுக்குப் பிறகு விடியல்

பிணைக்கைதிகள் நெருக்கடியின் காரணமாக 1980 ஜூலை மாதம் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான தூதரக உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இருப்பினும், பின்னணியில் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்த இரானிய மாணவர்கள், அமெரிக்கத் தேர்தலில் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தோல்வியடையும் வரை, அவர்களை விடுவிக்கத் தயாராக இல்லை.

இந்த விவகாரத்தில் அல்ஜீரியர்கள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். கார்ட்டரின் தோல்வி அல்ஜீரியர்களுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் புத்துயிர் பெற வழிவகுத்தது.

ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற 1981-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இந்தப் பிணைக்கைதிகள் நெருக்கடி முடிவுக்கு வந்தது.

52 அமெரிக்கப் பிணைக்கைதிகள் 444 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மேற்கு ஜெர்மனி வழியாக அமெரிக்காவை சென்றடைந்தனர்.

அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகனால் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், தூதரகப் பணியாளர்களை வரவேற்க வந்து சேர்ந்தார்.

பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரானியக் கடத்தல்காரர்களால் அளிக்கப்பட்ட "அருவருப்பான நடத்தைகள்" மற்றும் சித்திரவதைகள் குறித்த கதைகள் வெளிவரத் தொடங்கின.

பிணைக்கைதிகளின் வீடுகளிலிருந்து வந்த கடிதங்கள் அவர்கள் முன்னாலேயே எரிக்கப்பட்டன; அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர்.

மன்னர் ஷா மீண்டும் இரான் திரும்பவே இல்லை. அவர் ஜூலை 1980-இல் எகிப்தில் நாடு கடத்தப்பட்ட நிலையில் காலமானார். அதே வேளையில், ஆயதுல்லா காமனெயி ஜூன் 1989-இல் காலமானார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு