புதின் இல்லம் மீது தாக்குதலா? டிரம்ப் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images/ANI
திங்களன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தின் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இதனை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
புதினின் இல்லம் குறிவைக்கப்பட்ட செய்தி கவலையளிப்பதாகப் இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் இந்த விவகாரத்தில் 'மிகவும் கோபமாக' இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன ?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள அந்நாட்டு அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது, யுக்ரேன் இரவு நேரத்தில் 91 நீண்ட தூர டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறினார்.
ரஷ்ய வான் பாதுகாப்புப் படை அனைத்து டிரோன்களையும் இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலால் உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, யுக்ரேன் அமைதி ஒப்பந்தத்தைத் தற்போது மீண்டும் பரிசீலிக்க உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அதிபர் புதின் அங்கு இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்தக் கூற்றை "நன்கு அறியப்பட்ட ரஷ்ய பொய்" என்று வர்ணித்த ஸெலன்ஸ்கி, யுக்ரேன் மீதான தாக்குதல்களைத் தொடர ரஷ்யாவுக்கு ஒரு காரணம் தேடுவதே இதன் நோக்கம் என்று விமர்சித்தார்.
ரஷ்யா ஏற்கனவே யுக்ரேன் தலைநகரில் உள்ள அரசு கட்டடங்களைக் குறிவைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
"உலகம் இனியும் மௌனமாக இருக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது. நீடித்த அமைதியை அடைவதற்கான எங்கள் முயற்சிகளை ரஷ்யா சீர்குலைக்க நாம் அனுமதிக்க முடியாது," என்று எக்ஸ் தளத்தில் ஸெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைப்பின் போது அதிபர் புதின் இந்தத் தாக்குதல் குறித்துத் தன்னிடம் கூறியதாகவும், அது தனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
"அவரது இல்லத்தின் மீதான தாக்குதலைப் பொறுத்தவரை, இது சரியான நேரம் அல்ல. அதிபர் புதின் மூலமாகவே நான் இதைத் தெரிந்துகொண்டேன். அது குறித்து நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன்," என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆகியோர் புளோரிடாவில் சந்தித்தனர். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தாங்கள் 'மிகவும் நெருங்கி' வந்திருப்பதாக அப்போது அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
இந்தியப் பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது 'ஆழ்ந்த கவலையை' வெளிப்படுத்தியுள்ளார்.
"ரஷ்ய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்" என்று பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் கூறுகையில், "தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தூதரக முயற்சிகளே மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட மிகவும் பயனுள்ள வழியாகும். அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் கண்டிக்கிறது" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இத்தகைய சம்பவங்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன," என்றார்.

புதின், ரஷ்ய அரசு மற்றும் அந்நாட்டு மக்களுடன் பாகிஸ்தான் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
வன்முறையின் அனைத்து வடிவங்களையும், 'பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்' மற்றும் 'அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' செயல்களையும் தாம் எதிர்ப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












