கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?

பட மூலாதாரம், X/@indiacoastguard
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.
கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
என்ன நடந்தது?
மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் தனது பயணத்தை தொடங்கியது MSC ELSA 3 சரக்குக் கப்பல் . லைபீரிய நாட்டுக் கொடியுடன் ரஷ்யா, ஜார்ஜியா, யுக்ரேன், பிலிபினோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவுடன் கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
விழிஞ்சம் துறைமுகம் பெரும் சரக்குக் கப்பல்களை கையாள சமீபத்தில் தொடங்கப்பட்டதாகும். இது ஒரு ஆழ்கடல் கொள்கலன் சரக்கு ஏற்றும் துறைமுகமாகும்.
அங்கிருந்து புறப்பட்ட MSC ELSA 3 மே 24ம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு கப்பலிலிருந்து ஒரு அபாய அழைப்பு வந்தது.

பட மூலாதாரம், X/@indiacoastguard
640 கண்டெய்னர்களை ஏந்திக் கொண்டு கொச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, 184 மீட்டர் நீள கப்பலான MSC ELSA 3 சாயத் தொடங்கியது. கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் 38 நாடிக்கல் மைல் தூரத்தில் இருந்த போது தோராயமாக 26 டிகிரி அளவில் சாய தொடங்கியது சரக்குக் கப்பல்.
உடனடியாக இந்திய கடலோர காவல்படை அருகில் இருந்த கப்பல்களை மீட்புப் பணிகளுக்கு திருப்பிவிட்டது. நிலைமைகளை கண்காணிக்க வானில் விமானமும் வந்தது. கப்பல் தொடர்ந்து சாய்ந்துக் கொண்டே இருந்தது, சில கண்டெய்னர்கள் கடலில் விழத் தொடங்கின.
மே 24ம் தேதி மாலையில் இந்திய கப்பற்படை மீட்புப் பணியில் இறங்கியது. கப்பலில் உள்ள 24 பேரை மீட்க INS Satpura, INS Sujata என இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன. INS Sujata இரவு 7 மணிக்கு வந்தது, INS Satpura எட்டு மணிக்கு வந்தடைந்தது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 24ம் தேதி தொடங்கியிருந்தது. எனவே கடலில் வானிலை மோசமாக இருந்தது. "நாங்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காற்று மணிக்கு 74.08 கி.மீ (40 நாட்ஸ்) வேகத்தில் வீசியது. கடலில் கழிவுகளும் கண்டெய்னர்களும் மிதந்தன. இதனால் இரவு நேரத்தில் கப்பலை நெருங்கிச் செல்வது கடினமாக இருந்தது" என்று INS Sujata கப்பலின் கேப்டன் அர்ஜூன் ஷேகர் ஏ என் ஐ செய்தி முகமைக்கு தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/@indiacoastguard
கப்பலிலிருந்த 24 பேரில் 21 பேர் உயிருக்கு ஆபத்தில்லாமல் அன்று இரவு மீட்கப்பட்டனர். கப்பலில் இன்னும் கண்டெய்னர்கள் இருந்ததாலும், கப்பல் முழுமையாக கவிழாததாலும், அதில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, நிலைமைகளை கண்காணிக்க கப்பலின் மாஸ்டர், தலைமை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் கப்பலிலேயே இருந்தனர்.
இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையினரின் கண்காணிப்புகளுக்கு இடையே அன்றிரவை மூவரும் கப்பலிலேயே கழித்தனர். மே 25ம் தேதி அதிகாலை சரக்குகள் வைக்கப்படும் பகுதி ஒன்றில் கடல்நீர் வெள்ளம் போல் உள்ளே நுழைந்தது. கப்பல் "வேகமாக" ஒரு புறம் கவிழத் தொடங்கியது. "அவர்கள் மூவரும் மேலும் அந்த கப்பலில் இருந்தால் அவர்களுக்கு ஆபத்தாகும் என்று கருதப்பட்டது" என்று இந்திய கப்பற்படை செய்தி தொடர்பாளர் அதுல் பிள்ளை தெரிவித்தார். ரஷ்யாவை சேர்ந்த கப்பலின் மாஸ்டர் உட்பட மூன்று பேரும் கப்பலை விட்டு வெளியேறினர். INS Sujata கப்பலில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

பட மூலாதாரம், X/@indiacoastguard
கப்பலில் என்ன இருக்கிறது?
MSC ELSA 3-ல் "640 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்கு இருக்கிறது, 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது. மேலும் கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் எண்ணெய் இருந்துள்ளது" என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்தை தவிர்க்க, கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் 'சக்ஷம்' மற்றும் 'சமர்த்' மாசு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு டார்னியர் விமானமும் இந்தப் பணியில் இறங்கியுள்ளது.
இதையடுத்து, கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா கடற்கரை பகுதி முழுவதுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "எண்ணெய் கசிவு கேரள கரையில் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம். கண்டெய்னர்கள் கடலில் மணிக்கு 3 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. கண்டெய்னர்களில் இருக்கும் எண்ணெய் தவிர, கப்பலில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும் கசியத் தொடங்கியுள்ளது" என்று உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில் கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26ம் தேதி கொல்லம் மற்றும் ஆலப்புழா கரை அருகே கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்குகள் இருக்கலாம் என்பதால் அவற்றை பொது மக்கள் தொட வேண்டாம் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எந்த திசையில் செல்லும்?
கடலில் காற்றின் திசை தெற்கு நோக்கியே வீசுவதால் கண்டெய்னர்கள் தெற்குப் பக்கமாகவே நகரக்கூடும் என்று மூத்த கடல்வள ஆராய்ச்சியாளரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் சுனில்குமார் முகமது கூறுகிறார். "கொச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல் 30 கி.மீ வரை தெற்கு நோக்கிச் சென்ற பின்பே கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்த இடத்திலிருந்து 60 கி.மீ தெற்கு திசையில் கொல்லத்தில் கண்டெய்னர் கரை ஒதுங்கியுள்ளது. எனவே வடக்கு திசையில் இது நகர்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்கிறார்.
இது குறித்து INCOIS (கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, "மே 25ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி எண்ணெய் தென்கிழக்கு திசையில் நகர்கிறது. மே 26ம் தேதி காலை 11 மணியளவில் கிழக்கு-தென் கிழக்கு திசையில் எண்ணெய் கசிவு தொடர்ந்து கரையை நோக்கி நகரும். சுமார் 12 மணி நேரங்களுக்குப் பிறகு மே 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஆலப்புழாவுக்கு அருகில் கரையை அடைந்து, 11.4 நாடிக்கல் மைல் அளவுக்கு கரையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மறு நாள் மே 27ம் தேதி பாதிப்புக்குள்ளான கரையின் நீளம் 23 நாடிக்கல் மைல்லாக அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு 80% வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுளது.

INCOIS இயக்குநர் பாலகிருஷ்ணன் டி எம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவு கொல்லம், ஆழப்புழா தாண்டி திருவனந்தபுரம் வரை செல்லும் என்று கணிக்கிறோம். இப்போது வரை எண்ணெய் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே தமிழ்நாடு கரை வரை செல்லாது என்று நினைக்கிறோம்" என்றார். எனினும் கண்டெய்னர் மற்றும் கப்பலின் பாகங்கள் கன்னியாகுமரி வரை செல்லக்கூடும்" என்றார்.
ஆனால் உண்மையில் எவ்வளவு எண்ணெய் கசிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். "அதிக அளவிலான எண்ணெய் கசிந்திருந்தால் அது அதிக தூரம் செல்லக்கூடும். சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது 100 கி.மீ வரை தெற்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று இதிலும் அதிக அளவிலான எண்ணெய் இருந்தால், அது தமிழ்நாடு கரையை தொடக்கூடும். இரண்டு மூன்று நாட்களில் கன்னியாகுமரி வந்தடையும் அங்கிருந்து இலங்கை வரை கூட செல்லும், இது தான் எண்ணெய் கசிவின் கணிக்கப்பட்ட பாதையாக இருக்கும்" என்றார்.
என்ன ஆபத்து ஏற்படலாம்?

பட மூலாதாரம், Dr.Balakrishnan
இந்தக் கப்பலில் 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்சியம் கார்பைட் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை துரிதமாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், இது மனித உட்கொள்ளுதலுக்கு உகந்தது அல்ல. இந்த விபத்தின் மூலம் கால்சியம் கார்பைட் கடலில் கசியலாம் என்று அஞ்சப்படுகிறது. "கால்சியம் கார்பைட் கடல்நீருடன் கலக்கும் போது, அது அசிடிலின் வாயுவாக மாறும். அது வாயுவாக மாறும் போது, ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் பெரும் பாதிப்புகள் எதுவும் இருக்காது" என்று கூறும் சுனில் முகமது இது குறுகிய கால பாதிப்பே, நாம் கவலைப்பட வேண்டிய நீண்ட கால பாதிப்புகள் பல இருக்கின்றன என்கிறார் சுனில்குமார் முகமது.
எண்ணெய் கசிவால் நீண்ட கால பாதிப்புகளின் தாக்கமே அதிகமாக இருக்கும். "இப்போது ஆலப்புழா கரைப்பகுதிகளில் காற்று மற்றும் அலைகள் காரணமாக கடலுக்கு அடியில் மண் திட்டுகள் (mud banks) உருவாகும் காலம். இந்நேரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், நீர், மற்றும் மண்ணுடன் சேர்ந்து அது கலந்து கருப்பு உருண்டைகள் (tar balls) உருவாகும். அவை கடலில் மிதந்து கரையை வந்து சேரும். 80 டன் எரிபொருள் உள்ளது. அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்று தெரியாது" என்கிறார்.
இவை மட்டுமல்லாமல், "கப்பலில் 'ஆபத்தான சரக்கு' கள் உள்ளன என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது, அதில் என்னவுள்ளன என்று தெரிவிக்கப்படவில்லை. ரசாயனங்கள் இருக்கலாம், கதிரியக்கப் பொருட்கள் இருக்கலாம்"என்றார்.

பட மூலாதாரம், Dr.Sunilkumar Mohamed
கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு
கேரள கடற்கரை கடல்வளங்கள் அதிகமாக இருக்கும் வளமான பகுதியாகும். எனவே அப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்வளங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். "ஒரு மதிப்பீட்டின் படி பத்து ஆண்டு காலத்தில் இங்குள்ள மீனவர்கள் 1000 வகையான உயிரினங்களை பிடித்துள்ளனர். இந்த இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது உணவு சங்கிலியை வெகுவாக பாதிக்கும். எண்ணெய் கசிவினால் ஹைட்ரோ கார்பன்ஸ் வெளியாகும். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும், அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று சுனில் முகமது கூறுகிறார்.
"கேரள கரைப் பகுதியில் 'upwelling' ஆழத்தில் உள்ள சத்துகள் நிறைந்த நீர் கடற்பரப்பை நோக்கி மேல் எழும்புவது தீவிரமாக நடைபெறும். இதனால் அந்தப் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மிக முக்கிய பங்காற்றும் phytoplankton எனும் கடல் தாவர வகைகள் அதிகம் உள்ளன" என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
எண்ணெய் கசிவின் தீவிரத்தைப் பொருத்து இவை எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், X/@indiacoastguard
மீனவர்களுக்கு பாதிப்பு
மீன்பிடிக்க ஏதுவான இடம் குறித்த தகவல்களை INCOIS தினசரி மீனவர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த விபத்து ஏற்பட்டது முதல் எண்ணெய் கசிவு அபாயம் இருப்பதால் தெற்கு கேரள கரையோரம் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மீனவர்களை வெகுவாக பாதித்துள்ளது என்கிறார் சுனில் முகமது, "தென்மேற்கு பருவமழை தொடங்கிய நேரத்தில், கடல் அமைதியாக இருக்கும். அலைகள் பெரிதாக இல்லாத இந்த காலத்தை மலையாளத்தில் 'சாகரா' (இறந்த கரை) என்று அழைப்பார்கள், இது மீன்பிடிக்க மிகவும் உகந்த நேரமாகும்" என்கிறார்.

மீட்புப் பணிகளுக்கு சவாலாக இருக்கும் பருவமழைக் காலம்
எண்ணெய் கசிவின் தீவிரத்தையும், வெளியே தெரிவிக்கப்படாத 'ஆபத்தான' சரக்குகளையும் கட்டுப்படுத்துவதே மீட்புப் பணிகளின் முக்கிய நோக்கமாகும். பருவமழை தொடங்கியுள்ளதால் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்புகின்றன. இதனால் எண்ணெய் கசிவு ஒரு இடத்தில் இல்லாமல் மற்ற இடங்களுக்கு எளிதாக பரவும் வாய்ப்புள்ளது. "MSC ELSA 3 பழைய கப்பல் என்பதால் கண்டெய்னர்களுக்கு ஒரு அடுக்கு பாதுகாப்பு (single hull) மட்டுமே இருந்துள்ளது. எனவே எண்ணெய் கசிவு எளிதாக ஏற்படலாம்" என்று இந்த விவகாரங்கள் குறித்து அறிந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காற்று தெற்கு திசையில் வீசிக் கொண்டிருப்பதால் இந்த கசிவுகள் கரையை நோக்கியே வரும் என்றும் கடலுக்குள் செல்ல வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கரையை நோக்கி வரும் போது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவது எப்படி?
எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. கடலோர காவல்படையின் விமானம் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் கசிவு எங்கு உள்ளது, எவ்வளவு தூரம் உள்ளது என்று கணிக்க முடியும். அதை பரவவிடாமல் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிறகு எண்ணெய்யை இலகுவாக்கும் ரசாயனங்கள் கலந்து அவை கரையை வந்து அடையாமல் தவிர்க்கப்படும். அல்லது, எண்ணெய்யை பம்ப் செய்து வெளியேற்றவும் முடியும். கடலோர காவல்படையின் கப்பல் ஒன்று மாசு கட்டுப்படுத்தும் பணிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, பணியில் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












