வெள்ளியங்கிரி மலையில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது எப்படி? இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய தினத்தில் (26/05/2025) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் நேற்று (மே 25) ஒரே நாளில் மலையேறச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பூண்டி அருகே போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வெள்ளியங்கிரி மலைத் தொடர் உள்ள்து. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை இந்த மலை ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மலையேற்றப் பாதையில் ஏழு மலைகள் உள்ளன. இவற்றைக் கடந்து செல்ல குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 8 மணி நேரம் ஆகும். சமீப காலங்களில் வெள்ளியங்கிரிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மிகவும் கடினமான மலையேற்றப் பாதையாக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிறு அன்று வெள்ளிங்கிரி மலையில் ஏறிய பெண் உள்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தினமணி நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"காரைக்காலைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி கௌசல்யா (45) என்பவர் சனிக்கிழமை இரவு வெள்ளிங்கிரி மலை ஏறி சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்கிய போது 7-ஆவது மலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (32) என்பவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மலை ஏறிக் கொண்டிருந்தார். 5-ஆவது மலை அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலை வனத்துறை அதிகாரிகள் சுமை தூக்கும் பணியாளர்களின் உதவியுடன் அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் யாரும் மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் குற்றச்சாட்டப்படும் குணசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தை கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க பெண் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட குணசேகரனுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக இந்து தமிழ் திசை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை, எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என குணசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
"காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, "ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர் குற்றம் புரிந்ததற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
இருதரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்" என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












