ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு மட்டும் மோதி சென்றதன் 3 காரணங்கள் என்ன?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தைப் பார்வையிட்டார்
    • எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்பட்ட பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதற்கு மறுநாளே பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை நிலையத்திற்குச் சென்றார்.

பிரதமர் ஆதம்பூர் செல்வது தொடர்பான தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

ஆதம்பூரில், இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து உரையாற்றிய பிரதமர், 'இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்தினால் அழிவு ஏற்படும் என்பதை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதலாளிகள் தற்போது புரிந்துகொண்டிருப்பார்கள்' என்றார்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் எச்சரிக்கைக்கோடு மிகவும் தெளிவாக உள்ளது. இனி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், இந்தியா வலுவான பதிலடி கொடுக்கும் என்பதை சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் பார்த்தோம், இப்போது ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் புதிய முன்னெடுப்பு" என்று கூறினார் நரேந்திர மோதி.

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி

ஆதம்பூர் விமானப்படை தளம்

பிரதமர் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் MiG-29 போர் விமானங்கள் அவருக்குப் பின்னால் இருப்பதை புகைப்படங்களில் காண முடிந்தது.

ராணுவ வீரர்களிடையே உரையாற்ற ஆதம்பூரை பிரதமர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை இந்த புகைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப்படை தளமான ஆதம்பூர், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ளது.

இந்த விமானப்படைத் தளத்தின் ரேடார் மற்றும் கண்காணிப்பு திறன்கள், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது.

இந்தத் தளம் 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் போது முக்கிய பங்கு வகித்துள்ளது.

மே 9 முதல் 10 வரை, எல்லைக்கு அப்பால் இருந்து ஆதம்பூர் விமானப்படை தளத்தை குறிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகளை முறியடித்துவிட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது.

பிரதமரின் ஆதம்பூர் பயணத்திற்கான காரணங்களைப் புரிந்துக் கொள்வதற்காக, பாதுகாப்பு மற்றும் அரசியல் நிபுணர்களிடம் பிபிசி உரையாடியது.

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள வீரர்கள்

'உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு பதிலளித்தல்'

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது, பாகிஸ்தானின் ஏவுகணைகள் ஆதம்பூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைத்து தாக்கியதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது. இந்தத் தகவலை இந்தியா மறுத்தது.

உண்மைக்குப் புறம்பாய் பாகிஸ்தான் அளித்துவரும் தகவல்களுக்கு தனது செயல்கள் மூலமாக நேரடி பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் ஆதம்பூரைத் தேர்ந்தெடுத்ததாக, பாதுகாப்பு மற்றும் உத்தி விவகார நிபுணர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.வி.பி. சிங் தெரிவித்தார்.

"பிரதமர் மோதியின் ஆதம்பூர் பயணம் அடையாளப்பூர்வமானது மட்டுமல்ல. உத்தி ரீதியாக நன்கு சிந்தித்து மேற்கொள்ளப்பட்ட எதிர் தாக்குதல் என்றே சொல்லலாம். ஆதம்பூருக்கு பிரதமர் நேரடியாக சென்றதன் மூலம் அவர் உண்மைக்கு புறம்பானத் தகவல்களை மறுத்தார். அத்துடன் இந்தியாவின் புதிய கோட்பாட்டையும் வலுவாக முன்வைத்தார். இந்தக் கோட்பாடு தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று மேஜர் ஜெனரல் சிங் கூறுகிறார்.

"பாகிஸ்தான் அழித்ததாகக் கூறிய S-400 பாதுகாப்பு அமைப்பின் முன் நின்று உரையாற்றியதன் மூலம், பிரதமர் மோதி சண்டையின் முழுக் கதையையும் மாற்றினார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின்போது மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை பிரதமரின் ஆதம்பூர் பயணம் முற்றிலுமாக மாற்றியது. இது இந்தியாவின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'இந்திய விமானப்படையின் திறனை உணர்த்தும் உத்தி'

'ஆபரேஷன் சிந்தூர்' இந்திய ராணுவத்தின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை என்றாலும், விமானப்படையின் பங்கு சற்று அதிகமாகவே இருந்தது.

இதனால் தான் பிரதமர் மோதி ராணுவ வீரர்களுடன் பேசுவதற்காக விமானப்படை தளத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுமட்டுமல்ல, இந்திய விமானப்படையின் திறனை வெளிப்படுத்தும் உத்தியாகவும் பிரதமரின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு நிபுணர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சதீஷ் துவா இதை ஒரு 'வெற்றிப் பயணம்' என்றே பார்க்கிறார்.

"விமானப்படை சிறப்பாக செயல்பட்டதால் பிரதமர் விமானப்படை தளத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆபரேஷன் சிந்தூர் என்பது, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவத் தாக்குதல் அல்ல. இந்த முறை விமானப்படை முன்னிலை வகித்து வலுவாக செயல்பட்டது" என்று துவா கூறினார்.

பிரதமரின் ஆதம்பூர் பயணம்

பட மூலாதாரம், ani

"பிரதமர் வீரர்களிடையே உரையாற்றுவதற்காக முக்கியமான விமான தளத்தைத் தேர்ந்தெடுத்தார். அதாவது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக்கு அருகிலுள்ள விமான தளத்தை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச எல்லையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விமான தளம் தேர்வு செய்யப்படவில்லை என்பது முக்கியமானது'' என துவா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர்

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சிகளுக்கான செய்தி

'இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இது, மோதி அரசாங்கத்தை குறிவைக்க எதிர்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறியது.

உலகிற்கு ஒரு செய்தியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ளவர்களுக்கான அரசியல் செய்தியை வழங்கவும் பிரதமர் ஆதம்பூரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணிபுரியும் அரசியல் நிபுணர் சந்திரசூட் சிங் கூறுகிறார்

பிபிசியிடம் பேசிய சந்திரசூட் சிங், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா எவ்வளவு இழப்பைச் சந்தித்தது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆதம்பூரை உதாரணமாக முன்னிறுத்துவதன் மூலம், இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த கூற்றுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்ற செய்தியை பிரதமர் வழங்குகிறார்.'' என்றார்.

"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதமர் மோதி இந்த மோதலில் தங்கள் தரப்பின் கருத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறார். டிரம்ப் சொல்வதை தவறு என்று அவர் கூறவில்லை என்றாலும், சண்டை நிறுத்தத்திற்கான முதல் அழைப்பு பாகிஸ்தானிடமிருந்து வந்தது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்தக் கதை மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டால், எதிர்க்கட்சிகள் பின்வாங்கும். இல்லையென்றால், தங்கள் நாட்டின் வார்த்தைகளை விட அமெரிக்காவை அதிகம் நம்புவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்" என்று சந்திரசூட் சிங் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு