ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்போது மட்டையின் அளவுகள் ஐபிஎல் போட்டிகளில் சரிபார்க்கப்படும் (சித்தரிப்புப் படம்)

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஐபிஎல்-இல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் சமநிலையின்மை இருப்பதாக கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் பலர் இந்தக் கவலையை வெளிப்படுத்தினர்.

ஐபிஎல்-இல் பேட்டிங் செய்யும் அணிகள் இருபது ஓவர்களில் 300 ரன்களை எட்ட முயற்சிக்கின்றன. அது நடந்தால் இந்த ஆட்டத்தை 'கிரிக்கெட்' என்று அழைக்காமல் வெறும் 'பேட்டிங்' என்று அழைக்க வேண்டும் என்று ரபாடா கூறியிருந்தார்.

இப்போது பிசிசிஐ ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மட்டை (பேட்) இனி சோதனை செய்யப்படும்

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல்-இல் குவிக்கப்படும் ரன்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்

இனி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பேட்டிங்கிற்கு 'கார்டு' அணிவதற்கு முன்பு அவர் பயன்படுத்தப் போகும் மட்டையைப் பரிசோதிக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேன், பேட்டிங் செய்யத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நடுவர் மட்டையைச் சரிபார்ப்பார்.

இப்போது, நான்காவது நடுவர் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் கால் வைப்பதற்கு முன்பு அவர்களின் மட்டைகளை சோதனை செய்வார். அதன் பின்னர் மைதானத்திற்கு வரும் பேட்ஸ்மேன்களின் மட்டைகளை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சரிபார்ப்பார்கள்.

ஐபிஎல்-இல் பல பேட்ஸ்மேன்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய மட்டைகளைப் பயன்படுத்திய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐபிஎல்-இல் இதைச் செய்த பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.

களத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவத்தைக் கொண்டுவர ஐபிஎல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, இங்கிலீஷ் கவுண்டி சர்க்யூட் அணியான நாட்டிங்ஹாம்ஷயர் மட்டைகளைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறியதால் சில புள்ளிகளை இழக்க வேண்டியிருந்தது.

விதிகள் என்ன சொல்கின்றன?

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் மட்டையின் அளவு குறித்து விதிகள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட்டில், ஒரு பேட்டர் பயன்படுத்தும் பேட் எவ்வளவு அகலமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் தெளிவாக உள்ளன.

கிரிக்கெட்டில் மட்டைக்கு இரண்டு பாகங்கள் உள்ளன, ஒன்று பிளேடு (Blade), மற்றொன்று கைப்பிடி (Handle).

மட்டையின் கைப்பிடி கேன் (Cane- மூங்கில் போன்ற) அல்லது மரத்தால் செய்யப்பட வேண்டும். பேட்டர் தனது கைகளால் இறுக்கிப் பிடிக்க உதவும் வகையில், கைப்பிடியில் ஒரு 'கிரிப்' (Grip) பொருத்தலாம். பொதுவாக இந்த 'கிரிப்' ரப்பரால் ஆனதாக இருக்கும்.

மட்டையின் கைப்பிடியைத் தவிர மற்ற பகுதி பிளேடு என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான விதிகளும் தெளிவாக உள்ளன.

MCC விதிகளின்படி, அதாவது லண்டனின் மார்லுபன் கிரிக்கெட் கிளப் விதிகளின்படி, கைப்பிடி உட்பட மட்டையின் மொத்த நீளம் 38 அங்குலம் அல்லது 96.52 செ.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மட்டையின் பிளேட்டின் அதிகபட்ச அகலம் 4.25 அங்குலம் அதாவது 10.8 செ.மீ இருக்கலாம்.

இதன் தடிமன் (Depth) 2.64 அங்குலம் அதாவது 6.7 சென்டிமீட்டர் வரை இருக்கலாம். விளிம்புகள் 1.56 அங்குலம் அதாவது 4.0 சென்டிமீட்டர் வரை இருக்கலாம்.

இவை MCC- இன் விதிகள். ஐபிஎல்-இல் நடுவர்களுக்கு வழங்கப்படும் முக்கோண ஸ்கேலில், ஒரு மட்டையின் முறையான அளவுகள் அச்சிடப்பட்டுள்ளன.

மட்டை 2.68 அங்குல தடிமனும், 4.33 அங்குல அகலமும், விளிம்புகள் 1.61 அங்குலமும் இருக்க வேண்டும். மட்டையின் கீழ் பகுதி, அதாவது வளைந்த பகுதி (Curve) 0.20 அங்குலம் வரை இருக்கலாம்.

ஐபிஎல் போட்டிகளில், மட்டைகளை அளவிடுவதற்கு இந்த தரநிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மட்டை இந்த தரத்தை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் பயன்படுத்தப்படும் மட்டைகளின் அளவு குறித்து கேள்விகள் எழுந்துவரும் நிலையில், மட்டைகளை அளவிடுவதற்காக நடுவர்கள் பரிசோதனை செய்யும் முறையை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

போட்டியின் போது நடந்த சோதனைகள்

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைதானத்தில் ஹர்திக் பாண்டியா உட்பட பல கிரிக்கெட் வீரர்களின் பேட்களை நடுவர்கள் சரிபார்த்துள்ளனர் (கோப்புப்படம்)

இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு, போட்டி நடக்கும் நாளில் மட்டைகளை சோதனை செய்யும் வழக்கம் இல்லை. அதிகாரிகள் போட்டிக்கு ஒரு நாள் முன்பு மட்டைகளை சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறையில் ஒரு சிக்கல் இருந்தது, அதாவது பேட்டர் போட்டி நடைபெறும் நாளில் மற்றொரு மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய முடியும்.

கிரிக்கெட்டில், பல பேட்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அகலமான அல்லது தடிமனான மட்டையுடன் விளையாடியுள்ளனர்.

மட்டையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய இடம் உள்ளது,

அதன் மூலம் தான் பேட்ஸ்மேன்கள் தங்களது பெரும்பாலான சிறந்த ஷாட்களை அடிப்பார்கள். அந்தப் பகுதி மேல் பகுதியை விட கனமாகவோ அல்லது அகலமாகவோ இருந்தால், மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ட்ரோக் அல்லது ஷாட்களை அடிக்க முடியும்.

அதிரடியாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் அகலமான விளிம்புகளைக் கொண்ட மட்டைகளை விரும்புகிறார்கள்.

பெரும்பாலும் இதுபோன்ற சூழ்நிலையில், பந்து எதிர்பார்த்த வகையில் பேட்டில் படவில்லை என்றாலும் கூட அல்லது பந்து பேட்டின் விளிம்பில் பட்டாலும் கூட அது பவுண்டரியை தொடுகிறது.

இருப்பினும், இப்போது மட்டைகளை அதிகமாகக் கண்காணிப்பதால், எந்தவொரு பேட்ஸ்மேனும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய அல்லது அகலமான மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நடப்பு சீசனில் போட்டி நடக்கும் போது, ஹர்திக் பாண்டியா, ஷிம்ரான் ஹெட்மயர், நிதேஷ் ராணா மற்றும் பில் சால்ட் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களின் பேட்களை நடுவர்கள் சோதனை செய்துள்ளனர்.

மைதானத்தில் மட்டைகளை சோதனை செய்வது ஆட்டத்தை சீர்குலைக்கக் கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பேட் அளவு தொடர்பான விதிகளை பேட்ஸ்மேன்கள் யாராவது மீறியுள்ளனரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.