எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய ஸ்ரேயாசின் வியூகம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முலான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் ரசிகர்களுக்கு மற்றொரு அருமையான விருந்தாக இந்தப் போட்டி அமைந்தது. கொல்கத்தாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆட்டம் நகர நகர இருக்கையின் நுனியில் முடிவு அமரவைத்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி முடிவில் பஞ்சாப் அணி வென்றபோது யாருமே எதிர்பாராத முடிவாக அமைந்தது.
கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்து, அதை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்தது. இந்த ஆட்டத்தில் அதே பஞ்சாப் அணி குறைந்த ஸ்கோரை எடுத்து டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு.

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தாவின் திட்டமிட்ட பந்துவீச்சு
கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் பஞ்சாப் அணியின் பேட்டர்களை தாக்கியது. இதனால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரியன்ஸ் ஆர்யா(22), பிரப்சிம்ரன் சிங்(30) நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அதிவேகப்பந்துவீச்சில் இருவராலும் துல்லியமான ஷாட்களை அடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ்(0), ஜோஸ் இங்கிலிஸ்(2) என நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர்.
நடுப்பகுதி ஓவர்களில் சுனில் நரைன், வருண் இருவரும் சேர்ந்து பஞ்சாப் பேட்டர்களை மிரட்டினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய நேஹல் வதேரா(10), மேக்ஸ்வெல்(7), சஷாங் சிஹ்(18) என வரிசையாக சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்தது. 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி, 57 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. வருண், நரைன் இருவரும் 7 ஓவர்கள் பந்துவீசி, 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணியின் பதிலடி
111 ரன்களை டிபெண்ட் செய்வது கடினமானது என்ற போதிலும் பஞ்சாப் அணி முயன்று பார்க்கலாம் எனக் களமிறங்கியது. யான்சென், பார்ட்லென்ட் இருவரின் பந்துவீச்சும் துல்லியமாக இருந்தது. யான்சென் வீசிய முதல் ஓவரில் பந்து லேசாக ஸ்விங் ஆகி ஸ்டெம்பை தாக்கவே நரேன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பார்லெட் வீசிய ஓவரில் டீகாக் பெரிய ஷாட்டுக்கு முயலவே சூர்யான்ஷிடம் கேட்சானது. 3வதுவிக்கெட்டுக்கு ரகுவன்ஷி, ரஹானே கூட்டணி நம்பிக்கையளித்து ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தி, 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
திருப்பம் தந்த சஹல்
சஹல் வீசிய 8வது ஓவரில்தான் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது. சஹல் வீசிய ஓவரில் கால்காப்பில் வாங்கி ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே ஆட்டமிழந்தவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது, களநடுவர் தவறான முடிவை வழங்கினார் என ரீப்ளேயில் தெரிந்தநிலையில், ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்யாமல் வெளியேறினார். இந்த தருணத்தை சஹல் பயன்படுத்தி ஆட்டத்தை வசப்படுத்தினார். நிதானமாக ஆடிய ரகுவன்சி 37 ரன்களில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சஹலின் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைவாகவும் பந்துவீச்சில் வேகத்தை மாற்றி அமைத்து வேரியேஷனோடு வீசியதால், பேட்டர்கள் ஆடுவதற்கு சிரமப்பட்டனர். இதனால் ரிங்குசிங் (2) ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டா், ராமன்தீப் சிங் வந்தவேகத்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர்(7) கால்காப்பில் வாங்கி மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெளியேறினார்.
62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 14 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையை அடைந்தது. வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்த கொல்கத்தா அணியினருக்கு இந்த நிலைமை பதற்றத்தை அளித்தது.

பட மூலாதாரம், Getty Images
மிரட்டிய ரஸ்ஸல்
கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்கால் இருந்ததால் அந்த அணிக்கு நம்பிக்கை சற்று உயிருடன் இருந்தது. ரஸ்ஸல் கடந்த 25 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 92 ஆக இருந்ததால் எவ்வாறு பேட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்சித் ராணா 3 ரன்னில் யான்சென் பந்தில் க்ளீன் போல்டாகினார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை, 2 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. சஹல் வீசிய ஓவரில் ரஸ்ஸல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் வைபவ் அரோரா இருந்தார், அரோராவை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அர்ஷ்தீப் வீழ்த்தினார்.
15வது ஓவரை யான்சென் வீசினார், முதல் பந்தை ஆப்சைடு விலக்கி வீசவே அதை கிராஸ்பேட் மூலம் சிக்ஸருக்கு ரஸல் அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார். 17 ரன்னில் ரஸல் ஆட்டமிழக்கவே பஞ்சாப் அணி அபாரமான வெற்றியைப் பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் சாதனை வெற்றி
கடந்த சீசனில் இரு அணிகளும் மோதியபின் இப்போதுதான் விளையாடுகிறார்கள். கடந்த சீசனில் பஞ்சாப் அணி அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது, ஈடன் கார்டனில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் குறைந்த ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்து வரலாற்றில் பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே 111 ரன்கள் எனும் குறைந்த ஸ்கோரை அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த அணி என்ற வரலாற்றை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை டிபெண்ட் செய்ததுதான் சாதனையாக இருந்தது அதை பஞ்சாப் முறியடித்துவிட்டது.
வெற்றியை தவறவிட்ட கொல்கத்தா
ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்று வலுவாக இருந்தது, 98% கொல்கத்தா வெற்றி என்று கணினியின் கணிப்பு தெரிவித்தது. ஆனால், அர்ஷ்தீப் சிங், யான்சென், சஹல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆட்டத்தையே திருப்பியது.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் நுனுக்கமான கேப்டன்சியும்தான் காரணம். யுவேந்திர சஹல் மீண்டும் ஒரு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார். இருவரின் பங்களிப்பு பஞ்சாப் அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்கதாகும்.

பட மூலாதாரம், Getty Images
கணிக்க முடியாத ஆடுகளம்
ஆடுகளத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. சராசரியாக 0.5 டிகிரிதான் சீமிங் இருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இருந்தாலும் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இரு அணிகளிலும் பேட்டர்களும் பெரிய எதிர்பார்ப்புடன்தான் ஆட்டத்தை அணுகினாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர முடியவில்லை.
பஞ்சாப் அணி முதல் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது, ஆனால், அடுத்த 17 பந்துகளில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பஞ்சாப் இழந்தது. கொல்கத்தா அணியும் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 38 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என வெற்றிக்கு அருகே சென்றது. ஆனால் சஹல், யான்சென் பந்துவீச்சில் அடுத்த 33 ரன்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா.
கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் சேர்த்த 3வது குறைந்தபட்சமாகும். 2009ம் ஆண்டுக்குப்பின் 100 ரன்களுக்குள் கொல்கத்தா அணி ஆட்டமிழந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் கொல்கத்தா சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோராகும்.

பட மூலாதாரம், Getty Images
"தோல்விக்கு நானே காரணம்"
தோல்வி அடைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "இந்த தோல்விக்கு நான்தான் காரணம். தவறான ஷாட்களை ஆடமுற்பட்டு ஆட்டமிழந்தேன். இதிலிருந்துதான் சரிவு தொடங்கியது. அந்த நேரத்தில் நான் டிஆர்எஸ் எடுத்திருக்க வேண்டும் தவறவிட்டேன். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது, 111 ரன்கள் சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் நாங்கள் மோசமாக பேட் செய்தோம் என ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த பஞ்சாபை குறைந்த ரன்னில் சுருட்டியது பாராட்டுக்குரியது. நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம், அணியாக தோல்விக்கு பொறுப்பேற்கிறோம். பல விஷயங்கள் என் தலைக்கு மேல் இருக்கிறது, வேதனையாக இருக்கிறது இந்த தோல்வி, நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டு, வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் அபார வியூகம்
போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ்,"ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை நான் பார்த்தேன். சாஹலிடம் முடிந்தவரை நாம் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். நான் பேட்டிங் செய்யச் சென்ற போது இரண்டு பந்துகளை எதிர்கொண்டேன், ஒன்று சற்று தாழ்வாக வந்தது. ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. நாங்கள் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் நல்ல ஸ்கோரையே எடுத்துள்ளோம். ஆடுகளத்தில் பந்து ஒரே போல் பவுன்ஸ் ஆகவில்லை இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த அவர்களின் இரண்டு பேட்டர்கள் ஆட்டத்தை எதிரணியை நோக்கி திருப்பத் தொடங்கினர். ஆனால் சாஹலின் பந்தைத் திருப்பத் தொடங்கிய போது, எங்கள் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்தன. ஃபீல்டர்கள் பேட்ஸ்மேன்களைச் சுற்றி நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் அவர்கள் வெவ்வேறு ஷாட்களுக்கு முயற்சித்து எங்கள் வலையில் வீழ்வார்கள் என்று கணித்தேன். இந்த வெற்றி எங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் கூடுதல் தகவல்கள்
இன்றைய ஆட்டம்
- டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம்: டெல்லி
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- நாள் - ஏப்ரல் 20
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- நாள் - ஏப்ரல் 17
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
- நாள் - ஏப்ரல் 18
- இடம் – பெங்களூரு
- நேரம்- மாலை 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
- நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 357 ரன்கள்(7 போட்டிகள்)
- சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)- 329 ரன்கள் (6 போட்டிகள்)
- மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 295 ரன்கள் (6 போட்டிகள்)
நீலத் தொப்பி யாருக்கு?
- நூர் அகமது(சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
- ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












