தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோற்றது.
மும்பை அணியின் தோல்வி நிச்சயமாகிவிட்டதாக ரசிகர்கள் கருதிய போதுதான் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. நேரிலும், நேரலையிலும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்புக்கு மாறாக, மூன்றே பந்துகளில் டெல்லியிடம் இருந்து வெற்றியை மும்பை அணி பறித்தது.
ரோஹித் மீண்டும் ஏமாற்றம், கைகொடுத்த திலக் வர்மா
மும்பை அணிக்கு 5வது போட்டியிலும் ரோஹித் சர்மா(18) நல்ல தொடக்கத்தை இந்த ஆட்டத்திலும் வழங்கவில்லை. பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டன்(41), சூர்யகுமார்(40) ஆகியோர் 38 ரன்கள் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்தது நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.
ஹர்திக் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 6 பந்துகள் இடைவெளியில் ஹர்திக், சூர்யகுமாரின் விக்கெட்டுகள் போனதால் மும்பை சற்று தடுமாறியது நமன்திர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவினர்.
திலக் வர்மாவைப் பொருத்தவரை இதுவரை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 அரைசதங்களை விளாசியிருந்தார் ஆனால் ஒருமுறைகூட மும்பை அணி வென்றதில்லை. இந்த முறைதான் திலக் வர்மா அரைசதம் அடித்து மும்பை அணி வென்றுள்ளது.
டெல்லி அணியின் ரி்ஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், விப்ராஜ் நிகம் 8 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
7ஆண்டுகளுக்குப் பின் அரைசதம்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர், 3 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் நேற்று ஆடினார். ஏறக்குறைய 7ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் நேற்று அரைசதம் அடித்தார்.
அதிரடி ஆட்டம் ஆடிய கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அசுரத்தனமான ஃபார்மில் இருந்த கருண் நாயர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கருண் நாயர் இதுபோன்று அதிரடியாக ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியில் பும்ரா, ஹர்திக், சான்ட்னர் என யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் கருண் நாயர் பேட்டிலிருந்து பறந்தன.

பட மூலாதாரம், Getty Images
பும்ராவின் பந்துவீச்சையும் விளாசிய கருண் நாயர் பவர்ப்ளேயில் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் களத்தில் இருந்த வரை டெல்லி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.
டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 72 ரன்களும், 9வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல், கருண் நாயர் 100 ரன்கள் சேர்த்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த கருண் நாயர் 89 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகினார். 119 ரன்கள்வரை டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது.
அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 86 ரன்கள்தான் தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த 26 ரன்களுக்குள் அபிஷேக் போரெல், கருண் நாயர், அக்ஸர் படேல், ஸ்டெப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இழக்கவே ஆட்டம் தலைகீழானது. டெல்லி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை மாற்றிய 3 பந்துகள்
18-வது ஓவர்கள் முடிவில் டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா ஸ்டார்க் களத்தில் இருந்தனர். இதுபோன்ற சூழலில் பலமுறை அசுதோஷ் சர்மா ஆட்டத்தை வென்று கொடுத்ததால் நம்பிக்கை இருந்தது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அசுதோஷ் அடிக்கவே, வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன.
பும்ரா வீசிய 4வது பந்தில் அசுதோஷ் 17 ரன்னில் ஜேக்ஸால் ரன்அவுட் ஆகினார், அடுத்துவந்த குல்தீப் யாதவ் ராஜ்பாவாவால் ரன் அவுட் ஆகினார், கடைசி விக்கெட்டுக்கு வந்த மோகித் சர்மா சான்ட்னரால் ரன்அவுட் ஆகவே மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லி கைகளில் இருந்த ஆட்டம், வெற்றி வாய்ப்பு மூன்றே பந்துகளில் மும்பை அணியின் கரங்களுக்கு மாறியது எப்படி? என்பது அவர்களுக்கே புரியவில்லை. மாயாஜால வித்தை போன்று 3 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவும் தலைகீழாக மாறியது
ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 3 பந்துகளில் 3 ரன்அவுட் நடந்தது இதுதான் முதல்முறையாகும்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லியின் தோல்விக்கு காரணம்
ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பனிப்பொழிவு இருந்தால் 11வது ஓவர் முடிந்தபின் பந்தை மாற்றும் விதி அறிமுகமானது. இது டெல்லி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
11வது ஓவர் முடிந்தபின் பனிப்பொழிவை ஆய்வு செய்து நடுவர்கள் பந்தின் தன்மையையும் ஆய்வு செய்து புதிய பந்து அறிமுகப்படுத்தினர்.
புதிய பந்து மும்பைக்கு கிடைத்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. அடுத்த 4 ஓவர்களில் டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கருண் நாயர், அக்ஸர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(1), கே.எல். ராகுல் (15) என 12வது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி இழந்தது.
24 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம் களத்தில் இருந்தனர். அசுதோஷ் இருந்ததால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.
17-வது ஓவரை வீசிய டிரன்ட் போல்ட் 5 யார்கறை வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டு 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி அவுட் ஆகினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
200 ரன்களும் வெற்றியும்
மும்பை அணியும், டெல்லி அணியும் 200 ரன்களை அடித்தவிட்டால் அதை இந்த ஆட்டம் வரை டிபென்ட் செய்து வெற்றி பெறும் வரலாற்றை தக்கவைத்துள்ளன. மும்பை அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அனைத்திலும் வென்றுள்ளது.
அதேபோல டெல்லி அணியும் 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்து வென்றுள்ளது.
இந்த போட்டியில் ஆட்டம் 18-வது ஓவர் வரை டெல்லியின் பக்கம்தான் இருந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி ஒரே ஓவரில் ஹாட்ரிக் ரன்அவுட் நடந்து, டெல்லியின் வெற்றி 3 பந்துகளில் மும்பைக்கு கைமாறியது.
மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.
மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் 2வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. டெல்லிகேபிடல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"எங்கே தோற்றோம் எனப் புரியவில்லை"
தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் " ஆட்டம் எப்படி முடிந்தது, எந்த இடத்தில் தோற்றோம் என்று எங்களுக்கே புரியவில்லை. ஆட்டம் எங்களிடம் இருந்ததுஎப்படி மும்பை கரங்களுக்கு மாறியது, வென்று என்பது பிரமிப்பாக இருக்கிறது.
நடுப்பகுதியில் பல விக்கெட்டுகளை சாப்ட் டிஸ்மிசல்களில் இழந்தது தோல்விக்கான காரணமாக இருக்கலாம். 12 ரன்னில் தோற்றுள்ளோம், ஒரு ஓவர்வரை மிச்சம் இருந்ததால் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். டெய்லெண்டர் பேட்டர்கள் சேஸிங்கின்போது ஒவ்வொரு முறையும் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு.
சில நேரங்களில் தவறான ஷாட்களும், தவறான முடிவைக் கொடுக்கும். ஆடுகளம் சேஸிங்கிற்கு ஏற்றதாக இருந்தது, பனிப்பொழிவு இருந்து புதிய மாற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எங்கள் சுழற்பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது, பவர்ப்ளேயில் 2 பேர் வரை பந்துவீசுகிறோம். குல்தீப் இந்த சீசனில் மிரட்டலாக பந்துவீசுகிரார்.
விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் குல்தீப்பை அழைத்தால் விக்கெட் கிடைக்கிறது. இந்த ஆட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தன, தோல்வியை மறந்துவிட்டு நகர்கிறோம்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டங்கள்
லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: லக்னெள
நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
நாள் - ஏப்ரல் 20
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நாள் - ஏப்ரல் 17
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
நாள் - ஏப்ரல் 18
இடம் – பெங்களூரு
நேரம்- மாலை 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-349 ரன்கள்(6 போட்டிகள்)
சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)
மிட்செல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்)
பரப்பிள் தொப்பி யாருக்கு?
நூர் அகமது (சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
ஷர்துல் தாக்கூர் (லக்னெள) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்) 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












