'வயநாடு துயரம்' என்று கூறி பகிரப்படும் புகைப்படத்தில் உள்ளவர்கள் யார்? என்ன ஆனார்கள்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ், வயநாட்டில் இருந்து

'வயநாடு நிலச்சரிவின் துயரம்' என குறிப்பிட்டு ஒரு சகோதரன் தன் சகோதரிகளுடன் இருக்கும் படம் இடிந்த வீட்டின் சகதியில் வீழ்ந்து கிடப்பது போன்ற புகைப்படம் வைரலானது. உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது?

வயநாட்டின், சூரல்மலை, முண்டகை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட மனித துயரத்தைக் கூறும்விதமாக பல புகைப்படங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சூரல்மலையில் ஒரு சிதைந்த வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் பதைபதைக்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் சிதைந்த வீட்டின் சகதியின் நடுவே ஃப்ரேம் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அதில் ஒரு சகோதரன் தன் இரு சகோதரிகளை கட்டியணைப்பது போன்ற காட்சி இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சர்வதேச செய்தி முகமை ஒன்றால் வழங்கப்பட்ட இந்த புகைப்படம், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

புகைப்படத்தில் இருந்தவர்கள், இறந்துவிட்டதாக யாரும் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த புகைப்படம் இருந்த நிலையைப் பார்த்து, அவர்கள் இறந்துவிட்டதாகவோ, காணாமல்போனதாகவோ கருதியே பலரும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

படத்தில் இருந்தவர் சொல்வது என்ன?

ஆனால், தீரஜுக்கு இந்த புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேப்படி பள்ளிக்கூடத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கும் அவர்தான் அந்த புகைப்படத்தில் இருந்த இளைஞர்.

"திடீரென என் புகைப்படம் செய்தித் தாள்களில் வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்படுகிறது. எல்லோருமே நாங்கள் இறந்துவிட்டதாகக் கருதி பச்சாதாபம் தெரிவிக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார் தீரஜ்.

தந்தையை இழந்துவிட்ட 19 வயதான தீரஜ் தன் தாய் சுமிஷாவுடன் சூரல்மலையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அருகில் வசித்துவந்தார். செவ்வாய்கிழமையன்று இரவில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதும், தன் வீட்டிலிருந்து தன் தாய் மற்றும் உறவினர்களுடன் வெளியேறினார். அருகில் இருந்த மற்றொரு உறவினரின் வீட்டிற்குச் சென்று தங்கிக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில், நிலச்சரிவில் தனது வீடு முற்றிலும் அழிந்தவிட்டதைப் பார்த்த அவர், அங்கிருந்து தன் தாயுடன் மேப்படி முகாமுக்கு வந்துவிட்டார். ஆனால், விரைவிலேயே அவர் தனது சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

"அது என் சகோதரிகளின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். எங்கள் ஷெல்ஃபில் வைத்திருந்தோம். யார் போட்டோ எடுத்தது எனத் தெரியவில்லை. என்னால் அங்கே போகவும் முடியவில்லை. மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கு இது தெரியவந்தது" என்கிறார் அவர்.

'அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்'

இப்படி புகைப்படம் பரவ ஆரம்பித்ததும் என்ன செய்வதேன அவருக்குத் தெரியவில்லை.

"என் ஃபோனில் டிஸ்ப்ளே போய்விட்டது. இதைப் பற்றியே எனக்குத் தெரியாது. நான் முகாமிற்கு வந்த பிறகு, என் நண்பர்கள் சொல்லித்தான் தெரியவந்தது. சர்வதேச ஊடகங்கள், இன்ஸ்டாகிராமில் எல்லாம் வெளியானது. நாங்கள் இறந்துவிட்டதாக அதில் சொல்லவில்லை என்றாலும் இப்படி புகைப்படம் வந்ததும் நாங்கள் காணாமல் போய்விட்டதாக எல்லோரும் பதறிவிட்டார்கள். எல்லோரும் அதை பரப்பவும் செய்தார்கள்" என்கிறார் தீரஜ்.

அந்த புகைப்படத்தில் மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர். ஒருவர் தீரஜ். மற்ற இருவரும் அவருடைய சகோதரிகள். ஒருவர் பெயர் த்ரிஷ்யா. மற்றொருவர் பெயர் தீப்தி. மூத்த சகோதரியான த்ரிஷ்யாவின் திருமணம் இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்தபோதுதான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்போது த்ரிஷ்யாவும் அவரது கணவரும் தற்போது கேரளாவின் புல்பல்லியில் வசித்துவருகின்றனர். புகைப்படத்தில் இருக்கும் மற்றொரு சகோதரியான தீப்தி, திருவனந்தபுரத்தில் கேரளா பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார்.

இப்படி செய்தி வெளியானதும் சகோதரிகள் என்ன நினைத்தார்கள்? என கேட்டபோது, "அவர்கள் நிலச்சரிவு நடந்த இடத்திலேயே இல்லை. இந்தப் புகைப்படம் வெளியானதை இருவருமே பார்த்திருக்கிறார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதைச் சொல்ல முயற்சி செய்தோம். உடனடியாக அது முடியவில்லை. இப்போது அவர்களுக்கு அது தெரியும். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். அதில் ஒரு குழப்பமும் இல்லை" என்கிறார் தீரஜ்.

இப்போது தீரஜ் தனது தாய சுமிஷாவுடன் மேப்படி பள்ளிக்கூடத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)