மாலத்தீவு இந்தியாவை மீண்டும் நெருங்க சீனாவே காரணமா?

பட மூலாதாரம், BBC/CHETAN
- எழுதியவர், ஜாஸ்மின் நிஹாலானி
- பதவி, பிபிசி செய்தியாளர்
அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார் மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு. பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நாட்டிற்கு இந்தியா ரூ. 6305 கோடி மதிப்பிலான நிதி உதவிகளை செய்ய ஒப்புக் கொண்டது.
டெல்லியில் பேசிய முய்சு, இந்திய சுற்றுலாப் பயணிகள் அவருடைய நாட்டிற்கு வருகை புரிய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். பி.டி.ஐ. செய்தி முகமை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் "இந்தியா எங்களின் சுற்றுலாத்துறை சந்தையின் முக்கியமான மூலமாக விளங்குகிறது. வருங்காலங்களில் அதிக இந்தியர்களை மாலத்தீவில் வரவேற்போம் என்று நம்புகிறோம்," என்று கூறினார் அவர்.
2024-ஆம் ஆண்டு துவக்கத்தில் "இந்தியா அவுட்" என்ற பரப்புரையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்தது அவருடைய சமீபத்திய கருத்துகள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணமானது பின்விளைவுகளை ஏற்படுத்தியது. லட்சத்தீவை, மாலத்தீவுடன் ஒப்பிட்டு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியா, பிரதமர் மோதிக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க இது ராஜ்ஜிய ரீதியிலான பிரச்னையாக மாறியது.
அதனைத் தொடர்ந்து மாலத்தீவுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று பிரபலங்களும் சமூக வலைதள பயனாளிகளும் இந்தியர்களை வலியுறுத்தினார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் மாலத்தீவில் நிறுத்திவைக்கப்பட்ட இந்திய துருப்புகளை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது. மேலும் அதற்கான காலக்கெடாக மார்ச் 15-ஐ நிர்ணயித்தது மாலத்தீவு.

பட மூலாதாரம், BBC/CHETAN
சுற்றுலாவையே நம்பியிருக்கும் மாலத்தீவு
இந்தியா - மாலத்தீவுக்கு இடையேயான இந்த சர்ச்சையில் மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை அதிகமாக நம்பியிருக்கிறது.
2022-ஆம் ஆண்டு மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுக்கு (26.3%) அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது சுற்றுலாத்துறையாகும். மாலத்தீவின் பொருளாதாரத்தில் அதன் பங்கு 22.5% ஆக இருந்தது.
2020 முதல் 2023 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாலத்தீவுக்கு அதிகமாக பயணம் செய்த வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் வகித்தனர். 2024ம் ஆண்டு அந்த ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.
2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 1.35 லட்சம் இந்தியர்கள் மாலத்தீவிற்கு சென்றுள்ளனர். 2024ம் ஆண்டு 40% ஆக இந்த எண்ணிக்கை குறைந்து 81,500 நபர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு பயணித்துள்ளனர்.
இதற்கு முந்தைய கால கட்டத்தில் சீனர்களே அதிகமாக மாலத்தீவுக்கு வருகை புரிந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் அவர்களின் வருகை குறைந்து தற்போது 2024-ஆம் ஆண்டு மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது சீனா.

அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை
ஆனால், மாலத்தீவின் தற்போதைய பொருளாதார சிக்கலுக்கும், முய்சுவின் இந்தியா வருகைக்கும் காரணமாக இருந்தது அந்த நாட்டில் அந்நிய செலாவணியின் கையிருப்பு குறைந்ததே காரணம்.
செப்டம்பர் மாத இறுதியில் மாலத்தீவின் அந்நிய செலாவணி கையிருப்பு 371 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைவான கையிருப்பைக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த கையிருப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைக்கும் குறைவாகவே இருக்கிறது.
இதனை வைத்து மாலத்தீவு ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிகளை மட்டுமே கையாள இயலும். சர்வதேச நாணய நிதியம் மூன்று மாத இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
2024-ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாட்டு மற்றும் மொத்த கடன் அழுத்தத்தை எதிர்கொள்ள சாத்தியமான அபாயங்கள் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியம் மாலத்தீவை எச்சரித்தது. 2024ம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் மாலத்தீவின் மொத்த பொதுக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 110% ஆக உயர்ந்தது. ஒரு நாட்டின் பொதுக் கடன் என்பது ஒரு அரசாங்கம் அதன் செலவினங்களைச் சந்திக்க வாங்கும் கடனைக் குறிக்கிறது.

மாலத்தீவு இந்தியாவை மீண்டும் நெருங்க சீனாவே காரணமா?
மாலத்தீவுக்கு சீனா அதிகமாக கடன் வழங்கும் ஒரு நாடாக மாறியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்படி, மாலத்தீவு பெற்றுள்ள கடனில் 20% அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி கொடுத்திருந்தது. கடன் பத்திரங்ள் மூலம் 20 சதவீத கடனை மாலத்தீவு வாங்கியுள்ளது. மாலத்தீவு வாங்கியிருக்கும் கடனில் 18% அளவு இந்தியாவின் இறக்குமதி ஏற்றுமதி வங்கியால் தரப்பட்டது.
மொத்த கடனில் ஒரே ஒரு நாடு பெரும் பங்கு வகித்தால், அந்த நாட்டின் கடன் பொறியில் அந்த குறிப்பிட்ட நாடு சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதுபோன்ற தருணங்களில் கடன் கொடுத்த நாடு தனது விருப்பங்களை சாதித்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் மாலத்தீவு
மாலத்தீவு தன்னுடைய தேவைகளுக்காக இறக்குமதியையே அதிகம் சார்ந்துள்ளது. 10%க்கும் குறைவாகவே தன்னுடைய உணவு தேவையை உள்நாட்டில் உற்பத்தி செய்து கொள்கிறது. இதனால் உணவுக்காக இறக்குமதியையே பெருமளவில் நம்பியுள்ளது மாலத்தீவு.
சுற்றுலாவுக்காகவும் கடனுக்காகவும் சீனாவையே மாலத்தீவு அதிகமாக நம்பியிருக்கும் சூழலிலும் இந்தியா மாலத்தீவின் முக்கியமான அண்டை நாடாக உள்ளது.
2023-ஆம் ஆண்டு கணக்குப்படி, மாலத்தீவின் இறக்குமதியில் 16% பொருட்கள் இந்தியாவில் இருந்து சென்றவை. ஓமன், அமீரகம், சீனா போன்ற நாடுகளை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மாலத்தீவு மருத்துவம், மருந்து, தானியங்கள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையே அதிகமாக சார்ந்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கான வர்த்தக தரவுகள் இறக்குமதிக்காக இந்தியாவை மாலத்தீவு சார்ந்திருக்கும் போக்கு அதிகரித்தும் சீனாவை சார்ந்திருக்கும் போக்கு குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












