புதினின் இந்திய பயணத்தை சீனா எவ்வாறு பார்க்கிறது?

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சீன ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகையை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

சீன ஊடகங்களும் நிபுணர்களும் புதினின் வருகையை இந்தியாவின் மீதான 'அமெரிக்க அழுத்தத்துடன்' தொடர்புபடுத்துகிறார்கள்.

"அமெரிக்கா, இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அதிபர் புதினின் இந்திய பயணம் நடைபெறுவதாக" சீன ஊடகங்களில் கூறப்படுகிறது.

அதோடு, எரிசக்தி தொடர்பான உறவுகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதின் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியா-ரஷ்யா உறவுகளில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு புதினின் இந்தப் பயணம் நிகழ்கிறது.

புதினின் இந்திய பயணம் குறித்து, டிசம்பர் 2 அன்றே செய்தி வெளியிட்ட சீனாவின் அரசு செய்தி முகமையான சின்ஹுவா, "ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரிகளை விதித்து, அமெரிக்கா இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கிறது. இந்தச் சூழ்நிலையில் புதினின் பயணம் நிகழ்கிறது" என்று கூறியது.

இது தவிர, அமெரிக்காவின் முன்மொழியப்பட்ட 'அமைதித் திட்டம்' தொடர்பாக ரஷ்யா, யுக்ரேன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், புதின் இந்தியா வந்துள்ளார்.

ரஷ்யா, இந்தியா இடையிலான எண்ணெய் வர்த்தகம் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான விவாதத்தின் முக்கியப் பிரச்னையாக இருக்கும் என்று பெயர் குறிப்பிடப்படாத நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்துள்ளது.

அவரது கூற்றுப்படி, "அமெரிக்க-இந்தியா உறவுகளில் பதற்றம் ஏற்பட்டால், இந்தியா ரஷ்யாவுடனான தனது ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்தவும், பல துறைகளில் அதன் பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மையை விரிவுபடுத்தவும் முடியும்."

புதின், இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது, இதில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவிகித வரியும் அடங்கும்.

'எரிசக்தி கூட்டணியை உடைப்பது கடினம்'

"அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதன் எரிசக்தித் தேவைகளில் இருந்து பிரிக்கப்படவில்லை. இதனால் ரஷ்யாவுடனான எரிசக்தி கூட்டாண்மையை இந்தியா முறித்துக் கொள்வது கடினம்" என்று சீன அரசுடன் தொடர்புடைய செய்தி ஊடகமான 'தி பேப்பர்' டிசம்பர் 4 அன்று தெரிவித்தது.

இந்த ஆண்டு இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது, இதில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவிகித வரியும் அடங்கும்.

ரஷ்யாவுடனான நெருங்கிய உறவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை எச்சரித்துள்ளது.

மற்றொரு அரசாங்க சார்பு செய்தி ஊடகமான குவாஞ்சா, டிசம்பர் 4 அன்று "சந்தேகத்திற்கு இடமின்றி ஆயுத விற்பனைதான் முக்கியப் பிரச்னை" என்று செய்தி வெளியிட்டது.

ப்ளூம்பெர்க் ஊடகத்தை மேற்கோள் காட்டி, "இரு நாடுகளும் சுகோய்-57 போர் விமானங்கள், எஸ்-500 வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கலாம்" என்று குவாஞ்சாவின் செய்தியறிக்கை கூறியது.

'குவாஞ்சா'வின் கூற்றுப்படி, "எண்ணெய் துறை சார்ந்த ஒத்துழைப்பைப் பொருத்தவரை, ரஷ்ய கிழக்குப் பகுதியில் உள்ள 'சகாலின்-1 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தில்' ஓஎன்ஜிசி-யின் 20% பங்குகளை மீட்டெடுக்க இந்தியா முயற்சி எடுக்கலாம்."

இரு நாடுகளும் 'சிவில் அணுசக்தித் துறையில்' ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த நவம்பர் மாதத்தில், "இந்தியாவில் சுகோய்-57 ஜெட் விமானத்தை உற்பத்தி செய்வதற்கான முழு உரிமம் பெற்ற வசதியையும், வரம்பற்ற தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் ரஷ்யா வழங்கியதாக" இந்திய ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகின.

புதின், இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சுகோய்-57 போர் விமானங்களை வாங்குவதில் இந்தியா தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சீன ஆதரவு ஊடகங்களில் கூறப்படுகிறது

'சுகோய்-57 குறித்து முடிவெடுக்க இந்தியா தயங்குகிறது'

சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸுடன் தொடர்புடைய ஓர் இணையதளமான 'ஷுமியுவான் ஷிஹாவோ' ('ப்ரிவி கவுன்சில் எண். 10'), டிசம்பர் 3 அன்று, "கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதினின் பயணத்தில் எஸ்யூ-57, எஸ்-500 போன்ற மேம்பட்ட ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் அடங்கும் என்று கூறியிருந்தாலும், இந்தியாவின் பதில் வித்தியாசமாக இருந்தது. தயக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஓர் உத்தரவைப் பிறப்பிக்க மறுக்கிறது" என்று தெரிவித்தது.

"இந்தியாவுக்கு உண்மையிலேயே ஸ்டெல்த் போர் விமானங்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஆனால் அது சுகோய்-57 ஆக இருந்தாலும் சரி அல்லது (அமெரிக்காவின்) எஃப்-35 ஆக இருந்தாலும் சரி, இதுவொரு பெரிய ராணுவ ஒப்பந்தம் மட்டுமல்ல. இது, அமெரிக்கா, ரஷ்யா இடையில் 'ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய' இந்தியாவை கட்டாயப்படுத்துகிறது," என்று அந்த வலைப்பதிவு கூறியது.

மேலும், புதின் வருகைக்கு முன்னர் இந்திய ஊடகங்கள் இந்தக் கொள்முதல் குறித்து ஆர்வத்தைக் குறைக்கும் விதமாகப் பேசியுள்ளன என்றும், சுகோய்-57 குறித்து எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதாகவும் வலைப்பதிவு கூறுகிறது.

புதின், இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 1ஆம் தேதி சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் புதினும் மோதியும் சந்தித்தனர்.

ரஷ்யாவுடனான உறவுகளை விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறதா?

அரசாங்க ஆதரவு பெற்ற இணைய செய்தி முகமையான ஷாங்காய் அப்சர்வரின் டிசம்பர் 4 செய்திப்படி, ஃபுடான் பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் துணைத் தலைவரும் தெற்காசிய விவகாரங்கள் நிபுணருமான லின் மின்வாங், "இந்தியாவுக்கான பயணம் ஒரு காலத்தில் புதினுக்கு முன்னுரிமையாக இருந்தது. ரஷ்யா, இந்தியா இடையிலான தற்போதைய உறவுகள், வெளியே தோன்றும் அளவுக்குத் தீவிரமாக இருக்காது" என்று கூறியுள்ளார்.

யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளை முறியடிக்க, இந்தியாவுடனான வருடாந்திர பேச்சுவார்த்தை யுக்தியைத் தொடர ரஷ்யா முயன்றதாகவும், ஆனால் அமெரிக்கா, ரஷ்யா இடையில் 'சமநிலையை' உருவாக்க இந்தியா அதைத் தற்காலிகமாக நிறுத்தியதாகவும் லின் கூறினார்.

புதினின் இந்திய வருகை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கும், பின்னர் டிசம்பர் மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், இந்த இந்திய பயணதிற்கு 48 மணிநேரத்திற்கும் குறைவாகவே தேவைப்படும் என்பதால், அது 'சற்று அவசரமாக' திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை 'கணிசமாகக் குறைத்துள்ளது' என்றும், அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த அமெரிக்காவில் இருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரித்துள்ளது என்றும் டிசம்பர் 4ஆம் தேதி 'குவாஞ்சா'வில் லின் எழுதியிருந்தார்.

"ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை 31 சதவிகிதமும் மதிப்பை 38 சதவிகிதமும் இந்தியா குறைத்துள்ளதாக", வர்த்தக அமைச்சக தரவுகளை மேற்கோள் காட்டி அதே நாளில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

"புதினின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. 2022க்கு பிறகு ரஷ்யா இந்தியாவுடன் உயர்மட்ட தொடர்புகளை அதிகரிக்க விரும்புகிறது. அதே நேரத்தில் இந்தியா அதன் 'ரஷ்ய தொடர்புகளுக்கு சற்றே குறைவான முக்கியத்துவமே கொடுத்து வருகிறது" என்று லின் கூறினார்.

"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ரஷ்யா ஒரு 'மூலோபாய பாதுகாப்பு அமைப்பை' போல் இருந்து வருகிறது. ஆனால் சர்வதேச சூழலில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான தனது உறவுகளை இந்தியா எந்த அளவுக்கு விரிவுபடுத்த விரும்புகிறது என்பது மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வது போலவே இந்தியாவுடனும் ஆழமாக உறவுகளை வளர்த்துக் கொள்ள ரஷ்யா தயாராக உள்ளது" என்று பெஸ்கோவ் கூறியதை மேற்கோள் காட்டிய லின், "ஆனால் அத்தகைய 'வரம்பற்ற' கூட்டாண்மைக்கான தயார்நிலை குறித்து இந்தியா எந்த அறிகுறியையும் காட்டவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு