திருப்பத்தூரில் ரயில் சிக்னல்களை சேதப்படுத்த முயன்றதாக ஒருவர் கைது - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஓடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு, தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூரில் ரயில் நிலையத்தின் இருப்புப்பாதையில் உள்ள சிக்னலை உடைக்க முயன்றதாக வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிக்னல் அமைந்துள்ளது. ரயில் நிலைய மேலாளர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பரிசோதிக்கையில் இருப்புப்பாதையில் உள்ள சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சில இளைஞர்கள் கூடியிருந்தது தெரிந்துள்ளது.
காவல்துறையினரை பார்த்த இளைஞர்கள் தப்பிச் சென்றனர். அதில் திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். குடிபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முற்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், ரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் சிக்னல் செயல்படாமல் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் சென்னையை நோக்கி சென்றுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தை கடந்து செல்கையில் சமயபுரம் அருகே மேல வாளாடி என்கிற பகுதியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் இருப்பதை பார்த்த லோகோ பைலட்டுகள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.
ரயில் டயரில் மோதி 600 மீட்டர் தூரம் வரை சென்று நின்றுள்ளது. இந்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதியா என்கிற கோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த சம்பவத்தில் சதித் திட்டம் இருப்பதாக தற்போது வரை தெரியவரவில்லை. அருகில் உள்ள கிராம மக்களிடம் விசாரித்து வருகிறோம்," என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவங்கள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தென்னக ரயில்வே செய்தி தொடர்பாளர் குகணேசன், "திருப்பத்தூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எப்பொழுதாவது சிறு இடையூறுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும். ரயில்வே அனைத்து செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக பரிசோதனை மற்றும் பயிற்சிகளை மீண்டும் முறையாக மேற்கொள்ளவும் நிலைய மேலாளர்கள் அவற்றை கண்காணிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது," என்றார்.
தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற லோகோ பைலட் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "ரயில்வேயில் பாதுகாப்புக்கு என பல்வேறு துறைகள் உள்ளன. இருப்பு பாதை, பாலங்கள், ரயில்வே சிக்னல்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி துறைகள் உள்ளன. அவர்களுக்கு என பிரத்யேக பாதுகாப்பு கையேடு உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வேயில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் அவற்றை முறையாக மேற்கொள்ள முடிவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் பரிசோதனை மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முறையாக பரிசோதனைகள் செய்ய முடியாத நிலையில் தனியார்வசம் ஒப்படைப்பது உகந்தது அல்ல. ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ரயில் வழி தடங்களில் கல் அல்லது வேறு பொருட்களை கொண்டு இடையூறுகளை ஏற்படுத்துவது ஒரு வகை. பெரும்பாலும் அவற்றை முன் கூட்டியே கணிக்க முடியாது. மேலும் சதித் திட்டம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் டிஜிட்டல் இன்டர்லாக் என்கிற முறை வந்த பிறகு அனைத்தும் மென்பொருள் மூலமாக தான் இயங்குகின்றன. அதன் தொழில்நுட்பம் தெரிந்த ஒருவரால் தான் அதை ஹேக் செய்ய முடியும். அதில் பல கட்ட பாதுகாப்புகள் உள்ளன. ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்களால் மட்டுமே அவற்றை இயக்க முடியும். எனவே சிக்னலை ஹேக் செய்வது என்பதெல்லாம் சாத்தியமில்லை.
அதே சமயம் ரயிலில் இருப்புபாதையில் சேதம் ஏற்படுத்த நினைப்பவர்கள் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பல பத்தாண்டுகளாகவே ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் என்பது இருந்ததில்லை. வட இந்தியாவிலும் நக்சல் ஆதிக்கம் சரிந்த பிறகு அவை குறைந்துவிட்டது. சதித்திட்டம் என அரசு கூறுவது விசாரணையில் தான் தெரியவரும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












