"பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" - சாக்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக் என்ன சொன்னார்
    • எழுதியவர், திவ்யா ஆர்யா,
    • பதவி, பிபிசி செய்தியாளர், ரோடாக்

"நாங்கள் விருது வாங்கிய போது, எங்களை அவரது வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்திய பிரதமர் தற்போது இந்த பிரச்னை குறித்து மௌனம் காக்கிறார்."

ஹரியானா மாநிலத்தின் ரோத்தாக் மாவட்டத்தில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் 'அகாரா'விற்கு (பயிற்சி மையம்) நான் எனது கேள்விகளுடன் சென்ற போது, அவர் என்னிடம் பேசத் தயாராக இருந்தார். எந்த முன்னுரைகளோ, வழக்கமான நடைமுறைகளோ இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் அவர்.

"5 மாத போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோதிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என நான் கேட்டேன்.

அதற்கு பதிலளித்த அவர், “எங்களது பிரச்னை குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவே இல்லை. எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார். நன்றாகப் பேசியிருக்கிறார். எங்களை எல்லாம் அவருடைய மகள்கள் என்றார். ஆனால் உணர்ச்சிப் பூர்வமான இந்த விஷயம் குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்."

"அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தில் தலையிட்டு, காவல் துறை நடவடிக்கை நிச்சயமான சரியான திசையில் பயணிக்கும் என உறுதி அளிக்கவேண்டும். மேலும், விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தவேண்டும். ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்."

"அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரின் மௌனம் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா இல்லை அது அவ்வளவு பெரிய விஷயம் இல்லையா?” என சாக்ஷி மாலிக்கிடம் நான் கேட்டபோது, அவரது முகத்தில் காணப்பட்ட பதற்றம் சற்று குறைந்தது. அப்போது அவர், "ஆமாம். அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாங்கள் 40 நாட்கள் தெருவில் இறங்கிப் போராடினோம். நாங்கள் போராடியது குறித்து அவர் நன்றாக அறிந்திருந்தாலும், எங்கள் பிரச்னை குறித்து அவர் பேசவே இல்லை. அது எங்கள் மனதை காயப்படுத்தியது," எனத் தெரிவித்தார்.

போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்

கடந்த 5 மாதங்களுக்கு முன், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன் வைத்து, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டத்தைத் தொடங்கினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்ததோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கப் போவதாகவும் பலமுறை அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கிய போது, விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒரு மேற்பார்வைக் குழுவை அமைத்தது. மல்யுத்த சம்மேளத்தின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மேற்பார்வைக் குழு தனது விசாரணையை முடித்த போது, அது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரம் மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் பணி இரண்டு பேர் அடங்கிய 'அட் ஹாக்' (பிரச்னையின் தீர்வுக்காக உடனடியாக உருவாக்கப்படும் குழு) கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பிய சாக்ஷி மாலிக் உள்ளிட்ட அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் மேற்பார்வைக் குழு மேற்கொண்ட விசாரணையின் மீது சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற போது, காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஆனால், இத்தனை போராட்டங்களைக் கடந்தும், உள்துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசிய பின்னரும் இது பற்றி பிரதமர் எதுவும் பேசவில்லை.

'ஜுன் 15-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்'

மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் மீதான விசாரணைகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விசாரணை முடிந்து ஜுன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். மல்யுத்த சம்மேளத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுன் 30ம் தேதி நடத்தப்படும். இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டாது. பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க மல்யுத்த சம்மேளனத்தில் ஒரு பாதுகாப்புக் குழு உருவாக்கப்படும்," என்றார்.

இந்த சந்திப்புக்குப் பின் ஜுன் 15ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைக்க மல்யுத்த வீராங்கனைகள் ஒப்புக்கொண்டனர்.

பிபிசியிடம் பேசிய சாக்ஷி மாலிக், இதன் பொருள் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல என்றும், இருப்பினும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கைக் கைது செய்வது குறித்து அரசிடம் இருந்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். "ஜுன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்." என்றார்.

இதற்கிடையே, ஜுன் 15ம் நாள் கெடு நெருங்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கைசர்கஞ்சில் பிரிஜ் பூஷண் சரண் சிங் ஒரு பேரணியை நடத்தியுள்ளார். பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவுபெற்றுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அவர் மீதான பாலியல் புகார்கள் குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் உருது கவிதை ஒன்றில் உள்ள இரண்டு வரிகளை மேற்கோள் காட்டி, தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதன் பொருள், "எனது அன்பைக் காட்டியதற்காக நான் ஒரு துரோகி என அழைக்கப்பட்டேன். இது எனக்குக் கிடைத்த பெருமையா அல்லது சிறுமையா என வியக்கிறேன்," என்பதே ஆகும்.

இந்நிலையில் பிரிஷ் பூஷண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்த 18 வயதுக்குட்பட்ட மல்யுத்த வீராங்கனை தனது கூற்றை மாற்றியதாக கூறப்பட்டது.

அந்த வீராங்கனையுடன் தான் தொடர்பில் இல்லை எனத் தெரிவித்த சாக்ஷி மாலிக், அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் புகாரளிக்க மறுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

"போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் இல்லை என்றாலும், மற்ற அனைவரும் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தமுடியும். சட்டம் அனைவருக்கும் சமமான ஒன்று என்றே நான் நம்புகிறேன்," என சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங் செலுத்திய ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு குறித்து காவல் துறையின் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மல்யுத்த சம்மேளனத்தின் நடைமுறைகள் மற்றும் விதிகளின் பெயரில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக இந்த வீராங்கனைகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே 28ஆம் ஜந்தர் மந்தரில் இருந்து வீரர்கள் டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மே 28ஆம் ஜந்தர் மந்தரில் இருந்து வீரர்கள் டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர்

அதனால் தான் பாலியல் துன்புறுத்தல் நடந்த போதே புகார் அளிக்க முடியாத நிலை இருந்ததாக வீராங்கனைகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள், இந்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் சேர்ந்த புதிதில் ஏற்பட்டதாகவும், அப்போது பயம் மற்றும் போதுமான தைரியமின்மை காரணமாகத் தங்களால் இந்த குற்றச்சாட்டு குறித்துப் பேசமுடியவில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

சாக்ஷி மாலிக்கைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜுனியர் உலகக் கோப்பை மல்யுத்த போட்டி நடந்த பிறகு இந்தப் புகார்கள் வெளிச்சத்துக்கு வந்தது தான் கடந்த ஜனவரி மாதம் இது போல் மிகப்பெரும் போராட்டம் தொடங்க வழி ஏற்படுத்தித் தந்ததாக என்கிறார்.

"கடந்த ஆண்டு நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பை மல்யுத்த போட்டியின் போது, இது போன்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு சில வீராங்கனைகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். அதன்பின், அது குறித்து நாங்கள் நிச்சயமான ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவெடுத்தோம்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் அப்போது உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

"ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாததால் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவெடுத்தோம்," என்றார் அவர். மேலும், "எடுத்தவுடன் போராட்டத்தில் குதிக்க நாங்கள் முயலவில்லை. பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் முதலில் முயன்றோம். ஆனால், காவல் துறையில் புகார் அளிக்கும் நிலைக்குப் பின்னர் தள்ளப்பட்டோம்," என சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

அப்போதிலிருந்து அவர்கள் மூவரும் ஒன்றாகச் செயல்பட்டு, கூட்டாக மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டனர்.

மே 28 அன்று போலீசாரால் வீராங்கனைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அவர்கள் அரசிடம் பேசிய போது முக்கிய வேண்டுகோளாக வைக்கப்பட்டது. ஆனால் இது வரை அவர்கள் அந்த புகார்களை திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை என்கிறார் சாக்ஷி மாலிக்.

இப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அவர்கள் ஜுன் 15ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

  • ஜனவரி 18 அன்று மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசத் தொடங்கினர். முக்கிய வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இது குறித்து டெல்லி ஜந்தர் மந்தரில் முதன் முதலி குரல் எழுப்பினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். அப்போது அழுதுகொண்டே பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பிரிஜ் பூஷண் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அளித்ததாக புகார் தெரிவித்தார். ஆனால், மல்யுத்த வீராங்கனைகள் யாரும் அது போல் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்தார். மேலும் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனைக்கு உட்படவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • பின்னர் ஜனவரி 23 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசி ஐந்து பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.
  • ஏப்ரல் 21 அன்று மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை.
  • ஏப்ரல் 23 - இரண்டாவது முறையாக ஜந்தர் மந்தரில் தர்ணா தொடங்கியது.
  • ஏப்ரல் 24 - பாலம் 360 காப் எனப்படும், பல கிராமங்களின் ஒன்றியக் குழுவின் தலைவர் சௌத்ரி சுரேந்திர சோலங்கி ஜந்தர் மந்தர் சென்று, போராட்டத்துக்கு ஆதரவளிக்க மற்ற காப் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  • ஏப்ரல் 25 - பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி வினேஷ் போகட் மற்றும் 6 மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக, பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
  • டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததது. அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டது.
  • பின்னர், பிரிஜ் பூஷணுக்கு எதிரான தனது கூற்றை புகார் அளித்த 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை மாற்றினார்.
  • மூன்று வீராங்கனைகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
  • விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களை சந்தித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: