டி20 உலக கோப்பை: 1992 அரையிறுதி அற்புதத்தை மீண்டும் நிகழ்த்திய பாகிஸ்தான்

டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் ஷதாப் கான் மற்றும் அணி வீரர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவும் இங்கிலாந்தும் ஆடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் ஆடும்.

நியூஸிலாந்து அணி பலமானது என்று கூறுவதெல்லாம் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கும் வரைதான் என்று வாசிம் அக்ரம் கூறியிருந்தார். சிட்னி மைதானம் அதற்கு இன்னொரு சாட்சியாகிவிட்டது.

பாகிஸ்தான் அணி முதல் ஓவரை சந்தித்தபோது, ஒரு ரன் எடுத்திருந்த பாபர் ஆஸம் தட்டிவிட்ட பந்து நியூஸிலாந்து விக்கெட் கீப்பரின் கையைத் தழுவிச் சென்றது. அப்போதே நியூஸிலாந்தின் வெற்றியும் நழுவிப் போய்விட்டது.

அரையிறுதிக்குத் தகுதி பெறுமா என்று கருதப்பட்ட அணி கடைசி நிமிடத்தில் காட்சிகளையெல்லாம் மாற்றி அரையிறுதிக்குள் நுழைந்தததுடன், இதோ இன்று இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.

பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது போல இன்னும் கோப்பை வெல்வதுதான் பாக்கியிருக்கிறது.

ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான்

திணறடிக்கும் பந்துவீச்சு, துல்லியமான பேட்டிங் என போட்டியின் தொடக்கம் முதலே ஆக்கிரமித்து வந்த பாகிஸ்தான் அணி இன்னொரு முறை உலக கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

ஒரேயொரு போட்டியில் தங்கள் மீதான அனைத்து விமர்சனங்களையும் துடைத்து எறிந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணி தோற்கும், பிறகு காணாமல் போகும், அதன் பின்னர் எங்கிருந்தோ வந்து கோப்பையை வெல்லும் என்று சொல்வார்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி அப்படித்தான் இருந்தது.

உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி வென்றதில்லை என்ற வரலாற்றை கேன் வில்லியம்ஸால் இன்றும் மாற்றி எழுத முடியவில்லை.

1992 உலக கோப்பை முதல் பாகிஸ்தான் அணியைப் பழி தீர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை.

டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

'யூஸ்டு பிட்ச்' என்று கூறப்படும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட களத்தில் ஆடுவது - இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் பேட்டிங்கில் அப்படியொரு சிரமத்தை காண முடியவில்லை.

ஏனென்றால் அதன் பிறகு பாபர் ஆஸமும் ரிஸ்வானும் சேர்ந்து பந்து வீச்சாளர்களைத் திணற வைத்தார்கள். அடிக்கடி பந்துகள் பவுண்டரிகளைத் தாண்டிக் கொண்டிருந்தன.

இந்தத் தொடரில் முதல் முறையாக நீடித்து நின்று ஆடியது இந்த இணை.

பாபர் ஆஸம் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்
டி20 கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

சோதனை கட்டத்தில் நியூஸிலாந்து

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசிப் போட்டியில் ஆடியே அணிகளே இதிலும் களமிறங்கின.

முதல் ஓவரிலேயே ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த அணியைச் சோதனைக்கு உள்ளாக்கினார்.

அந்தத் தருணத்திலேயே பாகிஸ்தான் ரசிகர்களின் ஆராவாரம் சிட்னி மைதானம் முழுவதும் கேட்டது.

ஹாரிஸ் ராஃப் வீசிய பவர் பிளேயின் கடைசிப் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.

டி20

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் போது நியூஸிலாந்தின் டிம் செளதி, அவரை ரன் அவுட் செய்ய முயன்றபோது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தனது மட்டையை தரையில் படச் செய்தார்.

இந்த் தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் நியூஸிலாந்து அணிக்கு ஆறுதலாக இருந்தது கேப்டன் வில்லியம்சனும் அவருடன் இணை சேர்ந்த மிட்சலும்தான்.

இவர்கள்தான் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்கள்.

17 ஆவது ஓவரில் கேன் வில்லியம்ஸன் 46 ரன்களை எடுத்திருந்தபோது சாஹீன் ஷா அப்ரிடி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று போல்டானார்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. டேரில் மிட்சல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்திருந்தார். 

இந்தப் போட்டியில் ஷாஹின் ஷா அப்ரிடியின் பந்துகள் விக்கெட்டுகளை நோக்கி அம்புகள் போலப் பாய்ந்து கொண்டிருந்தன.

நான்கு ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்தின் அடித்தளத்தை நொறுக்கியவர் அவரே.

 152 ரன்கள் இலக்கை எட்டும் பணியே சலனமே இல்லாமல் செய்து முடித்தது பாகிஸ்தான் அணி. பாபரும் ரிஸ்வானும் சேர்ந்து 105 ரன்கள் என்ற பெருங் கோட்டையைக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.

ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் ஆஸம் 53 ரன்களும் எடுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள் படிப்படியாக ரன் சேகரிக்க, கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

30 ஆண்டு உலக கோப்பை அரையிறுதி வரலாறு

இதற்கு முன் மூன்று முறை உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதி இருக்கின்றன.

ஆனால், ஒருமுறை கூட நியூஸிலாந்து வென்றதில்லை.

1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில்.

இப்போது நான்காவது முறையாக அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியிருக்கிறது பாகிஸ்தான்.

1992-இல் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது. 

அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூஸிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூஸிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. 

 இந்த விஸ்வரூப மாற்றத்தைத்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். நியூஸிலாந்துடனான போட்டியில் அதுவே நடந்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: