நிகத், நீது, ஸ்வீட்டி மற்றும் லவ்லீனா: இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் எழுதிய 'தங்க வரலாறு'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீப்தி பட்வர்தன்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
நிகத் ஜரீன் தனது 12ஆவது வயதில் தடகளப் போட்டியில் பங்கேற்க நிஜாமாபாத் சென்றார். அப்போது வரை அவர் ஒரு இளம் வீரராக மற்ற தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டார்.
நிகத் அங்கு குத்துச்சண்டை தவிர பல விளையாட்டுகளில் பங்கேற்றார். ஆனால் அவரது எண்ணம் ஒரு விஷயத்தில் நிலைத்திருந்தது.
அவர் தன் தந்தை முகமது ஜமீல் அகமதுடன் அங்கு சென்றார். அவர் தன் தந்தையிடம், "குத்துச்சண்டை என்பது ஆண்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டார். குத்துச்சண்டையுடன் நிகத்தின் உறவு இந்த அப்பாவித்தனமான கேள்வியுடன் தொடங்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நிகத் தங்கப் பதக்கம் வென்றார். இது மட்டுமல்லாமல் மேலும் மூன்று பெண் குத்துச்சண்டை வீரர்களும் தங்கப் பதக்கங்களை வென்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற சாதனையை சமன் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 50 கிலோ லைட் ஃப்ளைவெயிட் பிரிவின் இறுதிப் போட்டியில், நிகத் ஒருதரப்பாக அமைந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் வியட்நாமின் நகுயாம் தி டாமை தோற்கடித்தார்.
நிகத் ஜரீன் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகும்.
ஞாயிற்றுக்கிழமை லவ்லீனா போர்கோஹைன் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் முதல் வெற்றியை பெற்றுத்தந்தார்.
75 கிலோ பிரிவில் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கரை தோற்கடித்து உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
ஒரு நாள் முன்னதாக, 48 கிலோ மினிமம் எடைப் பிரிவில் நீது கங்கஸ் தங்கப் பதக்கத்தையும், ஸ்வீட்டி பூரா 81 கிலோ லைட் ஹெவிவெயிட் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்கள்.
தங்கப் பதக்கத்துடன் கூடவே இந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு பரிசுத்தொகையாக தலா 82.7 லட்சம் ரூபாய் காசோலையும் கிடைத்தது.
இந்த நான்கு பேரின் அபார வெற்றியின் காரணமாக இந்திய அணி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 இல், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
"இது ஒரு வரலாற்று சாதனை. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் இன்று தெரிந்த தன்னம்பிக்கை இதற்கு முன்பு எப்போதும் காணப்படவில்லை. சில வீரர்கள் முதல் சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு இறுதி வரை போராடினார்கள்,” என்று இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய குத்துச்சண்டை சங்கத் தலைவர் அஜய் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
எதிர்கால நம்பிக்கை பற்றி குறிப்பிட்ட அவர், "இங்கு வெற்றி பெறாத குத்துச்சண்டை வீரர்களிடமும் வரும் நாட்களில் உலக சாம்பியனாகும் திறன் உள்ளது. அவர்களில் சிலர் ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வரும் நாட்களில் சாம்பியன்களாக ஆவார்கள்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
2006ஆம் ஆண்டில் படைக்கப்பட்ட வரலாறு
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்கள் உலக சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை.
2006 ஆம் ஆண்டில் இந்தியா முதல் முறையாக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை நடத்தியது. அப்போது 46 கிலோ பிரிவில் எம்.சி மேரி கோம், 52 கிலோ பிரிவில் சரிதா தேவி, 63 கிலோ பிரிவில் ஜென்னி ஆர்.எல் மற்றும் 75 கிலோ பிரிவில் லேகா கே.சி. இந்தியாவுக்காக தங்கம் வென்றனர்.
இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்கள் உலக அளவில் பிரகாசித்தது அதுவே முதல் முறை.
உண்மையை சொன்னால் 2006 ஆண்டின் இந்த சாம்பியன் குத்துச்சண்டை வீரர்கள் சர்வதேச அளவில் இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்களின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.
இதன் பிறகு, எம்.சி மேரி கோம் ஆறு முறை உலக சாம்பியனானார். மேலும் அவரது வெற்றி இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டையை பிரபலமாக்கியது.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மகளிர் குத்துச்சண்டை முதல் முறையாக பதக்க விளையாட்டாக சேர்க்கப்பட்டது. லண்டன் ஒலிம்பிக்ஸில், ஃப்ளைவெயிட் பிரிவில் எம்சி மேரி கோம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆனால் இந்த வெற்றிப் பயணத்தை இந்தியாவால் தொடர முடியவில்லை. இந்திய குத்துச்சண்டை சங்கத்தில் நிர்வாக சிக்கல்களின் காலம் தொடங்கியது.
2012 டிசம்பரில் தேர்தல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து உலக குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்தது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உலக குத்துச்சண்டை சம்மேளனத்தின் விதிகளின்படி இந்தியா தனது விளையாட்டு கூட்டமைப்பை உருவாக்க முடிந்தது.
இடைப்பட்ட காலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்தது. எந்தவொரு போட்டிகளும் உள்நாட்டு மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படவில்லை. கூடவே இந்தியக் கொடியுடன் சர்வதேச போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நிச்சயமற்ற நிலையில் இருந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு கிடைத்த ஆதரவு
2016 ஆம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சிங் தலைமையில் இந்திய குத்துச்சண்டை சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்திய குத்துச்சண்டை மீண்டும் மீட்சிப்பாதைக்கு வந்தது.
அஜய் சிங் தலைமையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கூட்டமைப்பிற்குள் தொழில்சார் கலாசாரம் வளர்ந்தது. மாநில மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.
இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியபோது, பல்வேறு வயதுப் பிரிவினருக்கான போட்டிகளும் தொடங்கின.
இந்திய குத்துச்சண்டையில் சர்வதேச அளவிலான பயிற்சியாளர்கள் மற்றும் துணை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். குத்துச்சண்டை வீரர்கள் அதிக வாய்ப்புகளை பெறத் தொடங்கினர் மற்றும் வெளிநாடுகளில் முகாம் நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.
இந்த முகாம்கள் முற்றிலும் சிறப்பாக இருந்தாக சொல்ல முடியாது.
ஆனால் இது நிச்சயமாக வீரர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. அதன் பிறகு குத்துச்சண்டை வீரர்கள் குறிப்பாக பெண் குத்துச்சண்டை வீரர்கள், ஒரு சிறிய உதவியால் என்ன சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டினார்கள்.
உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இந்தியா
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
குத்துச்சண்டை உலகில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, துருக்கி, க்யூபா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.
2020 டோக்யோ ஒலிம்பிக்ஸிற்கு இந்தியா தனது குத்துச்சண்டை வீரர்களின் மிகப்பெரிய அணியை அனுப்பியது. இந்தியாவுக்காக ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் போட்டியிட்டனர்.
69 கிலோ எடைப்பிரிவில் லவ்லீனா போர்கோஹைன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத்தந்தார். இதன் பிறகு சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
2022 மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று பதக்கங்களைப் பெற்றது.
52 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் தங்கப் பதக்கத்தையும், ஃபெதர் வெயிட் பிரிவில் மனிஷா மௌனும், லைட் வெல்டர்வெயிட் பிரிவில் பிரவீன் ஹூடாவும் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த செயல்திறன் நிச்சயமாக ஊக்கமளிப்பதாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா நடத்திய போட்டி
இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது பலத்தை உலகின் முன் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
போட்டியின் 12 பிரிவுகளிலும் இந்தியா தலா ஒரு குத்துச்சண்டை வீரரை களமிறக்கியது.
அணி தேர்வு குறித்த சர்ச்சை, ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளை விளையாட அனுமதித்ததால் 11 நாடுகள் போட்டியை புறக்கணித்தது, போட்டிக்கு ஒலிம்பிக் தகுதி அந்தஸ்து கிடைக்காதது போன்ற அனைத்தும் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் அமுங்கிப்போனது.
உலக இளைஞர் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்ற நீது கங்கஸ், குத்துச்சண்டையின் மையப்பகுதியான பிவானியிலிருந்து வந்தவர்.

பட மூலாதாரம், BFI MEDIA
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆக்ரோஷமான தொடக்கத்தை ஏற்படுத்தினார். நடுவர் போட்டியை நிறுத்தவேண்டிய அளவிற்கு முதல் மூன்று போட்டிகளையும் அவர் வென்றார்.
அரையிறுதியில் அவர் முதல் நிலை வீராங்கனையான அலுவா பலிக்பெகோவாவை எதிர்கொண்டார். கடந்த முறை பலிக்பெகோவா, நீது கங்காஸை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரையிறுதி ஆட்டத்தில் நீது 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். நீது கங்காஸின் ஹீரோவும், இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங் இறுதிப் போட்டியில் பார்வையாளர்களில் ஒருவராக இருந்தார்.
அவரது முன்னிலையில், நீது 5-0 என்ற கணக்கில் மங்கோலிய வீரர் லுட்சைகன் அல்டான்செட்ஸை தோற்கடித்து தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை அதுவும் தங்கத்தை வென்றார்.
இந்த வெற்றிக்குப் பிறகு நீது கங்காஸ் மீடியாக்களிடம், "கடந்த ஆண்டு என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை, எனவே இந்த முறை எனது குறைபாடுகளை சரிசெய்து சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் பதக்கத்தை பெற்றேன்" என்று கூறினார்.
ஸ்வீட்டி பூரா மற்றும் லவ்லீனாவின் செயல்பாடு
மறுபுறம், ஸ்வீட்டி பூராவுக்கு இந்த தங்கப் பதக்கம் ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ளது. இது அவரது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். 2014 இல் பூரா ஜெஜு, சிட்டி சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கொரோனா நெருக்கடியின் போது, பூரா குத்துச்சண்டையை விட்டுவிட்டு தனது பள்ளி நாட்களின் விளையாட்டான கபடிக்கு திரும்பினார் என்பதும் சுவாரஸ்யமானது.
சில மாதங்கள் குத்துச்சண்டையில் இருந்து விலகி இருந்த பிறகு, குத்துச்சண்டை தான் தனது காதல் என்பதை பூரா உணர்ந்தார்.
புது உற்சாகத்துடன் குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பிய அவர், தனது உடற்தகுதிக்காக நிறைய உழைத்தார். பூரா 2018 உலக சாம்பியனான வாங் லினாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
"உலக சாம்பியனாக வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி நன்றாக இருந்தது. எனது திட்டத்தின்படி நான் செயல்பட்டேன். போட்டிகள் முன்னேறிச் சென்றபோது எனது ஆட்டமும் மேம்பட்டது. என் உடல் தகுதியும் நன்றாக இருந்தது,” என்று 30 வயதான புரா கூறினார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லீனா போர்கோஹெய்னுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
அசாமைச் சேர்ந்த லவ்லீனா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதைத் தவிர, 2018 மற்றும் 2019 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற இருந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தின் நிறத்தை மாற்ற லவ்லீனா விரும்பினார்.
இருப்பினும், டோக்யோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, அவரது ஃபார்ம் சற்று குறைந்தது. 2022 உலக சாம்பியன்ஷிப்பில், லவ்லீனாவால் பிரீமியர் காலிறுதிக்கு அப்பால் முன்னேற முடியவில்லை மற்றும் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் அவரது பயணம் கால் இறுதி வரை மட்டுமே நீடித்தது.
இந்த முறை லவ்லீனா அதிக எடை பிரிவில் தோன்றி அற்புதமாக செயல்பட்டார். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இறுதிப் போட்டியில் ஒரு சுற்றில் தோல்வியடைந்த அவர் பின்னர் அற்புதமாக விளையாடினார்.
"கடுமையான சண்டையாக இருந்தது. அதனால், அதற்கேற்ப திட்டமிட்டோம். முதல் இரண்டு சுற்றுகளிலும் ஆக்ரோஷமாக விளையாடியதால், கடைசி சுற்றில் கவுன்டர் அட்டாக்கில் கவனம் செலுத்தப்பட்டது. 2018 மற்றும் 2019ல் வெண்கலப் பதக்கம் வென்றேன். எனவே பதக்கத்தின் நிறம் மாறியது ஒரு நல்ல உணர்வை தருகிறது,” என்று போட்டிக்கு பின் அவர் கூறினார்.
நிகத்தின் சவால்
மாற்றப்பட்ட எடைப் பிரிவில் அதாவது 50 கிலோ பிரிவில் நிகத் ஜரீனும் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க களம் இறங்கினார். இந்த எடைப் பிரிவில்தான் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும்.
கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அனைவரின் பார்வையும் 26 வயதான நிகத் ஜரீன் மீது இருந்தது. ஆனால் அவருக்கு முன்னால் மிகவும் கடினமான சவால் இருந்தது.
நிகத் மாற்றப்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அவர் தரவரிசை பெறாத வீராங்கனை மற்றும் 12 நாட்களுக்குள் ஆறு போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது.
அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் நிகத், மேரி கோமின் நிழலில் நீண்ட காலம் இருந்தார். ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த கற்றுக்கொண்டார்.
ஆக்ரோஷமான முறையில் போட்டியிட்டு நிகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டியை எட்டினார்.
நிகத்தின் மேல் உதடு இரண்டாவது சுற்றில் அறுபட்டு வலியில் துடித்தார்.
"மேல் உதட்டில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நிலையில் மருத்துவரை அழைத்திருக்கவேண்டும். மேலும் விளையாட்டை சிறிது நேரம் நிறுத்தியிருப்பார்கள். ஆனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தொடர்ந்து முழு வலுவுடன் போட்டியை தொடர்ந்தேன். உன்னால் முடியும் நிகத் என்று மனதில் சொல்லிக்கொண்டேன். அது கடைசிப் போட்டி. எனவே சக்தியை மிச்சப்படுத்த அவசியம் இல்லை. எனவே முழு மூச்சுடன் போராடினேன்,” என்று இந்த போட்டிக்கு பிறகு அவர் கூறினார்.
இறுதிப் போட்டியில், நிகத் ஒருபோதும் பின்நோக்கிப் பார்க்காமல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
தொடர்ந்து இரண்டு உலக சாம்பியன்ஷிப்களில் தங்கப் பதக்கம் வென்ற நிகத், பல ஆண்டுகளுக்கு முன்பு குத்துச்சண்டை பற்றி தனது தந்தையிடம் கேட்ட கேள்விக்கு சொந்தமாகவே சிறந்த பதிலை தந்துள்ளார் என்பதே உண்மை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












