'100 நாள் வேலை திட்டத்தை மோதி அரசு திரிசூலம் கொண்டு தாக்குகிறது' - தமிழக அரசின் பொருளாதார ஆலோசகர் ஏன் இப்படி கூறினார்?

காங்கிரஸ், மோதி, பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இக்பால் அஹமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வேலை உறுதியளிப்புத் திட்டமான மன்ரேகா என்று அழைக்கப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான பட்ஜெட் குறைப்பு மற்றும் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஆகியவற்றைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் சமூக ஆர்வலருமான ஜீன் ட்ரேஸ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு ஆதரவாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு(MNREGA) மோதி அரசாங்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

பிபிசி-யுடனான சிறப்பு உரையாடலில், ஜீன் ட்ரேஸ், மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தின் மீது 'திரிசூல' தாக்குதல் நடத்துவதாகக் கூறினார். திரிசூலத்திற்கு மூன்று கூர்முனைகள் இருப்பது போல, இந்த அரசும் மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது என்பது அவர் கருத்து.

ஒருபுறம் அரசு தனது பட்ஜெட்டை ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்தது, இரண்டாவதாக, இத்திட்டத்தில் வேலை கிடைக்க ஒரு டிஜிட்டல் செயலியின் பயன்பாட்டைக் கட்டாயப்படுத்துகிறது. இது கிராமப்புறங்களில் சில இடங்களில் செயல்படுவதில்லை என்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கால தாமதம் ஏற்படுகிறது.

இவற்றுடன் மூன்றாவதாக, பிப்ரவரி முதல் ஊதியம் வழங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் புதிய முறை தொழிலாளர்களுக்கு சிக்கலாக மாறி, அவர்களின் ஊதியம் தாமதமாகி வருகிறது.

மக்களவையில் பிப்ரவரி 7 ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, NMMS செயலி மூலம் தொழிலாளர்களின் வருகையைக் குறிக்கும் பொறுப்பை ஏற்க 'தோழர்கள்' ஊக்குவிக்கப்படுவதாகக் கூறினார்.

செயலியை சீராக மாற்றுவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

100 நாள் வேலைத் திட்டத்தின் 10 சிறப்பம்சங்கள்

  • 100 நாள் வேலைத் திட்டத்தின்(MNREGA) மூலம் வேலை வாய்ப்புரிமைச் சட்டம், ஆகஸ்ட் 2005 இல் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்டம் முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்டது.
  • இத்திட்டம் முதலில், இந்தியாவின் 625 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டில், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இது செயல்படுத்தப்பட்டது.
  • இதன் கீழ், கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 100 நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவது கிராம பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • வேலை தேடுபவருக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வேலை கொடுக்கப்பட்டுக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால் விண்ணப்பதாரருக்கு வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது.
  • மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி 2023 வரை, நாடு முழுவதும் 15,06,76,709 தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள்.
  • மறுபுறம், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 29,72,36,647.

புதிய அமைப்பில் இருக்கும் தொடக்க நிலைச் சிக்கல்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா என்று பிபிசி கேட்டபோது, அதற்கு பதிலளித்த ட்ரேஸ், "அரசாங்கம் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய முறையைக் கொண்டுவருகிறது. முன்னதாக ரொக்க ஊதியம் வழங்கப்பட்டது. இதையடுத்து, தபால் நிலையங்கள் மூலம் பணம் செலுத்தும் பணி துவங்கியது.

பின்னர் EFMS மற்றும் NEFMS திட்டங்கள் வந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியான பணம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்குத் தனித்தனியாக பணம் வழங்கப்பட்டது. இப்போது அரசாங்கம் முகம் அடையாளம் காணும் முறையை அறிமுகப்படுத்துவது பற்றி பேசுகிறது.

இப்படியாக, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து அதை மேம்படுத்தவுள்ளதாகக் கூறுகிறது. புதிய முறையை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் பேசும் போதே, வேறு ஒரு புதிய முறையைக் கொண்டு வருகிறது. இது தான் கடந்த 12 ஆண்டுகளாக நடக்கிறது,” என்று விளக்குகிறார்.

காங்கிரஸ், மோதி, பொருளாதாரம்

பட மூலாதாரம், MINT

படக்குறிப்பு, பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரேஸ்

செயல்படாத எதிர்க்கட்சி

ட்ரேஸ் சொல்வது போல், எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை.

இதன் காரணமாகவே சில தினங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரைச் சந்தித்து இந்த விவரங்களைத் தெரிவித்து அவர்களிடம் உதவி கோரி முறையிட்டனர்.

எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைக்குச் செவி மடுத்து ஆதரவு தெரிவித்திருந்தாலும், இனி என்ன மாதிரியான செயல்பாடு இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

100 நாள் திட்டம் மீது அரசு போர் தொடுப்பதாக ட்ரேஸ் கூறியது ஏன்?

ஜீன் ட்ரேஸ் உட்பட பல சமூக செயல்பாட்டாளர்கள், 100 நாள் வேலை திட்டத்திற்கான பட்ஜெட்டை அரசாங்கம் குறைத்துள்ளதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்குப் பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மன்ரேகா கோரிக்கை அடிப்படையிலான ஒரு திட்டம். தேவையின் அடிப்படையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும். மாநிலத்திலிருந்து அதிக தேவை கோரப்பட்டால், பாராளுமன்றத்தில் கூடுதல் கோரிக்கை வைக்கப்படும்." என்று விளக்கினார்.

தேவை அதிகரித்தால் பட்ஜெட் அதிகரிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

“கடந்த ஆண்டு பட்ஜெட்டில், மன்ரேகாவுக்கு ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு, பின்னர் ரூ.89,400 கோடியாக மாற்றப்பட்டது. இறுதியாக, கடந்த ஆண்டு அதற்கு 98,468 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.”

நீங்கள் ஏன் அரசாங்கத்தின் இந்தக் கூற்றுடன் உடன்படவில்லை என்று டிரேஸிடம் கேட்டபோது, "98 ஆயிரம் கோடி செலவழித்த போதிலும், கடந்த ஆண்டு 10-15 ஆயிரம் கோடிகள் பற்றாக்குறை இருந்தது" என்றார்.

மன்ரேகா சட்டத்தின் கீழ் தான் தேசிய வேலைவாய்ப்பு நிதியம் உள்ளது என்று அவர் கூறுகிறார். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் கால தாமதமின்றி அதை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு நிதியுடன் ஒரு நிதியம் இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. ஆனால் அரசாங்கம் அதை பட்ஜெட் அடிப்படையிலானதாக மாற்றியுள்ளது என்கிறார்.

"தேவைப்படும்போது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் அதிகரிக்கிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை. தொடக்கத்தில் வழங்குவது குறைவாக இருந்து பின்னர் அது அதிகரிக்கப்படுகிறது.

ஆனால் அதற்குள் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதுடன், நிலுவைத் தொகையும் அதிகரிக்கிறது. இந்த நிலுவைத் தொகை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. முதலில் குறைந்த ஒதுக்கீடு, பணம் செலுத்துவதில் தாமதமும் இருந்தது. அதனுடன் நிலுவைத் தொகையும் குவிந்து கிடக்கிறது. அதாவது, இது ஒரு ஆபத்தான சுழற்சியாக மாறுகிறது” என்று ஜீன் ட்ரேஸ் விவரிக்கிறார்.

காங்கிரஸ், மோதி, பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் ஆட்சியின் போதே பலவீனம்

2005 இல் தொடங்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயணம் பற்றி ட்ரேஸிடம் கேட்டபோது, "இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதன் வெற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட விவாதிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தில், திட்டத்தைப் பரவலாக்குவது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதில் தொழில்நுட்பப் பயன்பாடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோதே தொடங்கப்பட்டாலும், இப்போது அது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக அது சிக்கலாகி வருகிறது. அதனாலேயே அது தன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது. அதேசமயம் அரசாங்கம் ஒரு விதத்தில் தொழில்நுட்ப மாயையில் சிக்கியுள்ளது.

இதன் மூலம் எல்லாவற்றையும் தீர்க்க முடியும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சிக்கல்களை மட்டுமே உருவாக்குகிறது,” என்றார்.

பட்ஜெட் பற்றாக்குறையால், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறைப்பு

100 நாள் வேலைத் திட்டத்துடன் சேர்ந்து, பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பட்ஜெட் ஒதுக்கீடும் குறைந்து வருவதாக ஜீன் ட்ரேஸ் கூறுகிறார். பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறைக்கப்படுகின்றன என்று அரசாங்கம் வாதிடுகிறது.

அரசாங்கத்தின் வாதத்தில் என்ன தவறு என்று ஜீன் ட்ரேஸிடம் கேட்டபோது, "பொருளாதாரம் வளர்ந்து வருவதாக அரசு சொல்கிறது. ஊதியம் அதிகரிக்கவில்லை என்று அரசின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான செலவு அதிகரித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், பொருளாதார வளர்ச்சியின் பயன் என்ன? மிகுந்த வறுமையில் உள்ள ஏழைகளுக்கு ஏன் சிறிது நிதியுதவி வழங்கப்படவில்லை. பல நாடுகள் அதைச் செய்கின்றன, எனவே ஏன் இந்தியா அதைச் செய்ய முடியாது?" என்று கேட்கிறார்.

அரசாங்கம் திட்டங்களை குறைக்கிறது என்றால், எதிர்க்கட்சிகள் ஏன் அதை ஒரு பிரச்னையாகக் கையிலெடுக்கவில்லை? இதற்கு பதிலளித்த ஜீன் ட்ரேஸ், “அனைத்து அரசியல் கட்சிகளும் மிரட்டப்படுகின்றனர்.

100 நாள் வேலை விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அதிக குரல் எழுப்பினால், அவர்கள் மீது விசாரணை நடத்தப்படலாம். சிபிஐ, வருமான வரி அல்லது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்,” என்றார்.

காங்கிரஸ், மோதி, பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் ஏன் மன்ரேகா தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து பேசுவதற்காக ஜீன் ட்ரேஸ் சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, லாலு பிரசாத் கட்சியின் ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர், “நாங்கள் 100 நாள் வேலை போன்ற பிரச்னைகளை கையிலெடுத்தால் எங்களுக்கு என்ன நிலை ஏற்படுமோ” என்று அஞ்சியதாகக் கூறுகிறார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சி காலத்தின்(UPA-1) போது ஊரக வளர்ச்சி அமைச்சராக மன்ரேகா திட்டத்தைத் தொடங்கினார்.

கடந்த சில ஆண்டுகளில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அடிப்படையில் பாஜக தனது வாக்காளர்களின் பெரும் படையை உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் ஆய்வாளர்களும், கடந்த உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு இந்தப் பயனாளர்களின் வர்க்கம் பெரும் பங்காற்றியதாக நம்புகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராகச் அரசாங்கம் செயல்படுகிறது என்றால், தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்று ஜீன் ட்ரேஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜீன் ட்ரேஸ், "பொதுமக்களை உறங்கச் செய்கின்றனர். ஜனநாயகம் அழிக்கப்படுகிறது, இதற்கு எதிர்வினை எதுவுமில்லை” என்றார்.

இது எதிர்க்கட்சிகளின் தோல்வியும், ஆளுங்கட்சியின் பிரசார இயந்திரத்தின் வெற்றியும் ஆகும் என்றார். ஆனால் அரசின் பல திட்டங்களால் சாமானியர்களும் பல நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

காணொளிக் குறிப்பு, பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய பேச்சுக்கு ராகுல் வீட்டுக்கு வந்த போலீஸ் - காங்கிரஸ் கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: