'சீமான் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்' - நீதிமன்றத்தில் என்ன நடந்தது? டாப்5 செய்திகள்

இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-4 ல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு பிப்.19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி, வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். நேற்று இவ்வழக்கு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதும், சீமான் ஆஜராகவில்லை.

அப்போது அவர் நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர்கள் விளக்கினர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, (நேற்று) மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் வழக்கை அன்றே (நேற்று) தள்ளிவைக்க (பாஸ் ஓவர்) கோரினர். அதன்மீதான விசாரணை நடந்தபோது, சீமான் ஆஜராகாத காரணம் குறித்த மனுவை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் இன்று (ஏப்.8) கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "தமிழகத்தின் தினசரி மின் தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இது மே மாதத்தில் அதிகபட்சமாக 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என மின்வாரியம் கணித்துள்ளது.

ஆனால் தமிழக மின்வாரிய ஆதாரங்களான அனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம் என மொத்தம் 18,038.05 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் மீதமுள்ள மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.

ஏப்ரல் மே மாத தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 2,610 மெகாவாட் மின்சாரம் தினமும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரத்துக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள 1300 மெகாவாட் மின்சாரம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த கொள்ளையை நெதர்லாந்தில் இருந்தபடி கண்டுபிடித்த வீட்டு உரிமையாளர்

சென்னையில் உள்ள தனது வீட்டில் அத்துமீறி யாரோ நுழைகிறார்கள் என்பது குறித்த எச்சரிக்கையை நெதர்லாந்தில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு செல்போனில் எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கட்ரமணன் தனது மனைவியுடன் நெதர்லாந்தில் உள்ள தனது மகளை காண சென்றிருந்தார். ஞாயிற்றுகிழமை இரவு அவரது செல்போனில் ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. பூட்டிய அவரது வீட்டில் சந்தேகம்படும்படியான நடவடிக்கைகள் நடப்பதற்கான எச்சரிக்கை அவருக்கு கிடைத்தது. உடனே பக்கத்துவீட்டு நண்பருக்கு அவர் தகவல் தெரிவித்தார். பக்கத்துவீட்டுக்காரர் நேரில் சென்று பார்த்த போது, வெங்கட்ரமணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்துப் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீச் ரோந்து குழுவினர் சுற்றுவட்டாரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த கமலகண்ணன் (65), ஆரி பிலிஃப் (57) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆறு சவரன் தங்க நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை போலீஸார் அவர்களிடமிருந்து கைப்பற்றினர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 தள கட்டடங்களுக்கு சுயசான்று முறை அறிமுகம்

சுயசான்றிதழ் மூலம் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்ததாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்ட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதித் துறை 2,500 சதுர மீட்டர் மற்றும் 2500 சதுர மீட்டர் கட்டிடங்களுக்கான திட்டத்தை தயார் செய்யும்.

குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும்.

ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் பேரவையில் பேசினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியீடு

இலங்கையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 2.17 கோடி பேர் இருக்கின்றனர் என்றும், 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 14 லட்சம் அதிகரித்துள்ளது என்றும் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட "குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024" அறிக்கை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது.

15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது.

நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.

சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது.

மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.