லாலா லஜபதி ராய் மீது விழுந்த லத்தி அடிகளுக்கு திட்டமிட்டு பழிவாங்கிய பகத் சிங் - ஓர் அலசல்

- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு பதவியில் இருந்து வெளியேறிய பிறகு 1925ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு பெரும் பகுதியினர் சுதந்திர கோரிக்கையை உரத்த குரலில் எழுப்பினர்.
வங்காளத்தில் பிபின் சந்திர பால், மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர், பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். அவர்கள் பின்னர் 'கரம் தல்' என்று அழைக்கப்பட்டனர்.
அவர்கள் இணைந்து உள்நாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், இந்தியாவில் வெளிநாட்டுப் பொருட்களை குறிப்பாக வெளிநாட்டு ஆடைகளைப் புறக்கணிக்கவும் இயக்கம் நடத்தினர். கிழக்கு வங்காளத்தின் லெப்டினன்ட் கவர்னர் லான்சலாட் ஹேயர், பரிசால் என்ற இடத்தில் மான்செஸ்டரில் தயாரிக்கப்பட்ட துணியை வாங்க விருப்பம் தெரிவித்தபோது அதற்கு தேசியவாதத் தலைவரான அஸ்வனி குமார் தத்தாவிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.
வங்காளத்தில் பொது இடங்களில் 'வந்தே மாதரம்' பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டபோது, பஞ்சாபில் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. லாலா லஜபதி ராய் இதற்குத் தலைமை தாங்கினார்.
அடுத்து வந்த நாட்களில், வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஆங்கிலேயர் எதிர்ப்பின் கோட்டையாக மாறியன. அங்கிருந்த தலைவர்கள் பிபின் சந்திர பால், பாலகங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதிராய் ஆகியோருக்கு 'லால்-பால்-பால்'(Lal, Bal, Pal) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பஞ்ச நிவாரண பணியில் முக்கிய பங்கு
1882இல் 17 வயதில், லாலா லஜபதி ராய் ஆர்ய சமாஜில் உறுப்பினராகி சமூக சேவை செய்யத் தொடங்கினார். சுவாமி தயானந்த சரஸ்வதியுடன் இணைந்து ஆர்ய சமாஜத்தை பஞ்சாபில் பிரபலமாக்கினார். அவர் தயானந்த் ஆங்கிலோவேதிக் (DAV) பள்ளிகளையும் மேம்படுத்தினார்.
1896இல் மத்திய இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயன்றதாக செய்திகள் வெளியாகின.
லாலா லஜபதி ராய் பஞ்சத்தில் அனாதையான குழந்தைகளுக்காக ஒரு பிரசாரத்தைத் தொடங்கினார். அவர் ஜபல்பூர் மற்றும் பிலாஸ்பூர் பகுதியில் இருந்து சுமார் 250 ஆதரவற்ற குழந்தைகளை பஞ்சாபிற்கு அழைத்து வந்து ஆதரவற்றோர் இல்லங்களில் அடைக்கலம் கொடுத்தார்.
லாலா ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதைத் தவிர ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருந்தார். இத்தாலிய அரசியல்வாதிகளான மெஸ்ஸினி மற்றும் கரிபால்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை உருது மொழியில் எழுதினார். 'வந்தே மாதரம்' என்ற உருது வார இதழையும், 'தி பீப்பிள்' என்ற ஆங்கில வார இதழையும் வெளியிடத் தொடங்கினார் லாலா லஜபதி ராய்.

பட மூலாதாரம், Getty Images
பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
காங்கிரஸில் உறுப்பினராகி பஞ்சாபில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்ற லாலா லஜபதிராய் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்) அனுப்பப்பட்டார். லாலாஜி ஒரு சிறப்பு ரயில் மூலம் அங்கு அனுப்பப்பட்டார். அதில் எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டன. சிறையில் அவர் சரியாக நடத்தப்படவில்லை.
"லாலா லஜபதி ராய் ஒரு சிறிய அறையில் வைக்கப்பட்டார். அவருக்கு தூங்குவதற்கு ஒரு கட்டில், ஒரு நாற்காலி மற்றும் ஒரு மேஜை கொடுக்கப்பட்டது. ஆனால் படிப்பதற்கு எந்த செய்தித்தாளும் அளிக்கப்படவில்லை. யாரையும் சந்திக்க அவர் அனுமதிக்கப்படவில்லை.
முடி வெட்டுவதற்கு முடி திருத்துபவரை அழைக்குமாறு கெஞ்ச வேண்டியிருந்தது. அவரது அறை இருட்டாக இருந்தது. பலமுறை கேட்ட பின்னரே அறையில் வெளிச்சத்திற்காக இரண்டு மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டது.
உடைகள் மற்றும் மருந்துகளைத் தருமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருந்தது," என்று லாலா லஜபதி ராயின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டாக்டர் லால் பகதூர் சிங் சௌஹான் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், GLOBAL VISION PUBLISHERS
1914ஆம் ஆண்டில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக உலக அளவில் அனுதாபத்தைத் தூண்டும் நோக்கத்துடன் லாலா லஜபதி ராய் முதலில் பிரிட்டனுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் அமெரிக்காவிற்கு சென்றார்.
முதல் உலகப் போர் தொடங்கியதால் அவர் 1920 வரை அமெரிக்காவில் தங்க வேண்டியதாயிற்று. அவர் இந்தியா திரும்பியதும், கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லட்சுமி இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் அவர் நிறுவினார்.
இதனுடன் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸையும் நிறுவி அதன் முதல் தலைவரானார். 1921இல் அவர் servants of the people societyஐ நிறுவினார்.
1922இல், சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, லஜபதி ராய்க்கு அது பிடிக்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாட்டால் அவர் சில காலம் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

பட மூலாதாரம், PNB
ஜின்னாவுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஆட்சேபமும் இல்லை
லாலா லஜபதி ராயின் பிம்பம் ஓர் இந்து தலைவர் என்று இருந்தாலும் முகமது அலி ஜின்னாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
ஒத்துழையாமை இயக்கத்திற்கு முந்தைய நாட்களில், இருவரும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் காங்கிரஸில் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தபோது, ஜின்னா காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால் லஜபதி ராய் அஸெம்ப்ளி உறுப்பினரானபோது, இந்து-முஸ்லிம் பிரச்னைகள் குறித்து பலமுறை ஜின்னாவுடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
"லாலா லஜபதி ராயும் ஜின்னாவும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்தனர். ஆனால் எந்த விஷயங்களில் தங்கள் கருத்துகள் ஒத்துப்போவதில்லை, எந்த அளவிற்கு தாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்ய முடியும் என்பதை இருவரும் அறிந்திருந்தனர்,” என்று ’லஜ்பத் ராய் லைஃப் அண்ட் வொர்க் ‘ என்ற லாலாஜியின் வாழ்க்கை வரலாற்றில் ஃபிரோஸ் சந்த் எழுதுகிறார்.
”அதில் சைமன் கமிஷன் விவகாரமும் ஒன்று. அஸெம்ப்ளி கூட்டத் தொடரின்போது ஜின்னா அடிக்கடி லாலா லஜபதி ராயின் அறைக்குச் செல்வார். சில நேரங்களில் இருவரும் மதன் மோகன் மாளவியாவிடம் பேச அவரது அறைக்குச் செல்வார்கள்.
இந்து-முஸ்லிம் விவகாரங்களில் லாலாஜிக்கும் ஜின்னாவுக்கும் இடையே உடன்பாடு காணப்படவில்லை. ஆனாலும் மற்ற விஷயங்களில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்தது.”

பட மூலாதாரம், PUBLICATION DIVISION
லாகூர் தெருக்களில் இறங்கினார்
1927இல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது, அதில் ஓர் உறுப்பினர் கூட இந்தியர் இல்லை என்று கூறி காங்கிரஸ் அதை எதிர்த்தது. லஜபதி ராய் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இட்டாவாவில் இருந்தார். சைமன் கமிஷன் தனது சொந்த ஊரான லாகூர் செல்வதாகத் தகவல் கிடைத்ததும் அதை எதிர்க்க அவர் உடனடியாக லாகூர் சென்றார்.
லாகூர் ரயில் நிலையத்தில் சைமன் இறங்கியவுடன், மக்கள் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி 'சைமன் கோ பேக்' என்று கோஷமிட்டனர். லாலா லஜபதி ராய் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.
"பொதுமக்கள் தங்கள் உயிரின் மீதான பற்றுதலை விட்டு இங்கு வந்துள்ளனர். உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள், நான் என் வேலையைச் செய்கிறேன்," என்று லாலாஜி கூறினார். ஆனால் ஆர்பாட்டக்கார்களைத் தாக்க போலீஸ் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
காவல்துறை தலைவர் ஸ்காட், லாலாஜியை லத்தியால் அடித்தார்
கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகத் தடியடி நடத்த காவல்துறைக்கு உத்தரவு வந்தது. ஃபிரோஸ் சந்த் தனது புத்தகத்தில், "மூத்த போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் கூட்டத்தின் மீது லத்தி சார்ஜ் செய்வதில் முன்னணியில் இருந்தார்.
அவருடன் உதவியாளர் ஜான் சாண்டர்ஸும் இருந்தார். அவரது இலக்கு குடையைப் பிடித்தபடி வாக்கிங் ஸ்டிக்குடன் நின்றிருந்த லாலா லஜ்பத் ராய். அவர் பிரிட்டிஷ் காவல்துறையின் லத்திகளை தைரியமாக எதிர்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கிருந்து ஓடவில்லை, போலீசாருக்கு பதிலடி கொடுக்க கூட்டத்தைத் தூண்டவில்லை. அவரது ஆதரவாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஆனால் பிரிட்டிஷ் போலீசார் லாலாஜியை குறி வைத்து தடியடி நடத்தினர். இதற்கிடையில் தடியால் அடித்த பிரிட்டிஷ் அதிகாரியின் பெயரை லாலாஜி கேட்டார். அதற்கும் தடியடியே பதிலாகக் கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
தடியடி நிறுத்தப்பட்டபோது லாலா லஜபதி ராய்க்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஆயினும் திரும்பிச் சென்று ஊர்வலத்தை அவர் முன்னின்று வழிநடத்தினார்.
மாலையில், பாட்டி கேட்டிற்கு வெளியே காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாகூர் மக்கள் ஒரு கண்டனக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்தக் கூட்டத்திலும் லாலா லஜபதி ராய் கலந்து கொண்டு அங்கிருந்தவர்களிடம் தனக்கு நடந்ததைப் பற்றிக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
லாலா லஜபதி ராய் மக்களின் தைரியத்திற்கு நன்றி தெரிவித்து, வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் பதியப்பட்ட ஒரு வாக்கியத்தை உச்சரித்தார்.
"என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி என்பது நிரூபணமாகும்" என்று அவர் கூறினார்.
“எதையும் செய்யவேண்டாம் என்று தான் தடுத்து நிறுத்திய இளைஞர்கள், தான் ஒருவேளை இறந்துவிட்டால், அந்த இளைஞர்கள் அதற்கு எதையாவது செய்யத் தீர்மானித்தால் தன்னுடைய ஆன்மா எங்கிருந்தாலும் தொடர்ந்து அவர்களை ஆசீர்வதிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

போலீஸ் சொன்னது பொய் என்று நிரூபித்தார்
மறுநாள் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் போலீசார் குற்றமற்றவர்கள் என முடிவானது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ராவல்பிண்டி கமிஷனர் டி.ஜே.பாய்ட் தலைமையில் மற்றொரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
லாலா லஜபதிராய் மற்றும் அவரது தோழர்கள் இந்த விசாரணைக் குழு முன் ஆஜராக மறுத்துவிட்டனர். தாக்குதலுக்குப் பிறகு, மருத்துவர்கள் லாலா லஜபதி ராயை பரிசோதித்தபோது, அவரது மார்பின் இடது பக்கத்தில் இரண்டு இடங்களில் ஆழமான காயங்களைக் கண்டறிந்தனர்.
சம்பவம் நடந்த 29 மணி நேரத்திற்குப் பிறகு அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது. அது மறுநாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது. இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் தனது நாளிதழில் தெரிவித்துள்ளார். அன்றைய அவரது நாளிதழின் தலைப்பு 'சட்டத்தின் காவலர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்' என்பதுதான்.
"ரயில்வே தொழிற்சாலை பள்ளி வளாகத்தின் வெளியே ஐந்தடி தள்ளி கம்பி வேலி போடப்பட்டது. அந்த வேலியை உடைக்கும் எண்ணம் எனக்கோ எனது சக ஊழியர்களுக்கோ இல்லை. நானும் எனது தோழர்களும் உடைக்க முயன்றோம் என்று விசாரணைக் குழு கூறுகிறது. கும்பல் மீதான அவர்களின் கோழைத்தனமான தாக்குதலை நியாயப்படுத்த சொல்லப்படும் ஓர் அப்பட்டமான பொய் அது," என்று அவர் அந்தச் செய்தியில் எழுதியுள்ளார்.
"இந்த அறிக்கையை யார் தயாரித்திருந்தாலும், அவர் ஒரு பெரிய பொய்யர் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் தவறு செய்திருந்தால், அவர் என் மீது வழக்கு பதிவு செய்யலாம். இத்தகையவர்களின் உதவியுடன் நாட்டை நிர்வாகம் செய்யப் போகிறாரா என்று நான் கவர்னரிடம் கேட்க விரும்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த லாலாஜி மாநாட்டில் கலந்துகொண்டார்
பலத்த காயம் அடைந்தாலும், லாலா லஜபதி ராய் தனது பணியை நிறுத்தவில்லை. நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றார். அவர் மாநாட்டில் கலந்து கொண்டது மட்டுமின்றி அங்கு உரையும் நிகழ்த்தினார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு வலி அதிகமாகி டெல்லியை விட்டு லாகூருக்கு வர வேண்டியதாயிற்று.
"ஆரம்பத்தில் லத்தியால் எனக்கு ஏற்பட்ட காயம் அவ்வளவு மோசமாக இல்லை என்று தோன்றியது. ஆனால் அது என் முழு உடலையும் ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனக்கு காய்ச்சல் இருந்ததால் திங்களன்று என்னால் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச முடியவில்லை," என்று அவர் தனது செய்தித்தாளில் எழுதினார்.
"சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராடியபோது அடிபட்ட பிறகும் லாலா லஜபதிராய் டெல்லியில் காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்தார். அப்போதும் அவர் உடலில் காயங்கள் இருந்தன. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் அவர் வேலை செய்வதை நிறுத்தவில்லை,” என்று இதைப் பற்றி ஜவஹர்லால் நேருவும் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
அவருக்கு நல்ல ஓய்வு தேவை என்ற மருத்துவர்களின் ஆலோசனைக்கு அவர் செவிமடுக்கவில்லை.

பட மூலாதாரம், PENGUIN
அதிகரித்த மார்பு வலி
"லாலா ஜிக்கு தீபாவளியைக் கொண்டாடுவதில் விருப்பம் அதிகம். ஆகவே நவம்பர் 12 தீபாவளி தினத்தன்று, அவர் தனது நண்பர்கள் சிலரை இரவு உணவிற்கு அழைத்தார். ஆனால் எப்போதும் இருப்பதைப்போல அவரது குரலில் தெம்பு இருக்கவில்லை.
அவரது நண்பர்கள் அவரது படுக்கையறையில் அமர்ந்திருந்தனர். அவர் படுக்கையில் படுத்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்." என்று லாலா லஜ்பத் ராயின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஃபிரோஸ் சந்த் எழுதுகிறார்.
"நவம்பர் 16 காலை, அவரது மருத்துவர் என்.ஆர். தரம்வீர் அவரைப் பார்க்க வந்தார். மாலையில் கார் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்படி டாக்டரிடம் கூறினார். ஆனால் மருத்துவர் வருவதற்கு முன்பே அவர் நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டார்.
அவர் திரும்பிய பிறகு மருத்துவர் அவரை பரிசோதித்தபோது, சோர்வு அல்லது காயம் காரணமாக உடல் முழுவதும் வலி இருப்பது தெரிந்தது. மார்பின் வலது பக்கம், முதுகுத்தண்டு அருகில் வலி அதிகமாக இருந்தது. மருத்துவர் அவருக்கு ஆஸ்பிரின் மருந்து கொடுத்தார். இரவு 11 மணிக்கு அவரிடம் விடைபெற்றுக் கொண்டார்,” என்று ஃபிரோஸ் சந்த் குறிப்பிடுகிறார்.
லாலா காலமானார்
நவம்பர் 17 அன்று காலை சிலர், லாலாவின் வேலைக்காரர்கள் குடியிருந்த பழைய வீட்டிற்கு ஓடி வந்தனர். வேலையாட்கள் அப்போது கண் விழுத்திருக்கவில்லை. பின்னர் இவர்கள் லாலாஜியின் அறைக்கு ஓடியபோது, அவரது மனைவி, மகன் மற்றும் மகள் அவரது படுக்கையைச் சுற்றி நிற்பதைக் கண்டனர்.
அனைவரும் மருத்துவருக்காகக் காத்திருந்தனர். மருத்துவர் வந்து லாலா லஜபதிராய் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
அக்டோபர் 30 மதியம் லாலாஜியின் உடல் மீது விழுந்த போலீஸ் லத்தி அடிகளே மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் அனைவரும் கருதினர். சில நிமிடங்களில் இந்தச் செய்தி மின்னல் போல் லாகூர் முழுவதும் பரவியது.
சுற்றிலும் துக்க அலை பரவியது. லாலா லஜபதி ராய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் ராவி ஆற்றின் கரையை நோக்கி சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பகத்சிங் பழிவாங்கினார்
லாலாஜி மீது தடியடி நடத்தியவர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஸ்காட், லாகூரிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார். லாலா லஜபதி ராய் இறந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு டிசம்பர் 17ஆம் தேதி மாலை மாவட்ட காவல்துறை அலுவலகம் முன்பாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் ஸ்காட்டை கொல்ல விரும்பினர். ஆனால் ஸ்காட்டின் நெருங்கிய உதவியாளர் சாண்டர்ஸ் இந்தத் தாக்குதலுக்கு இலக்கானார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பகத் சிங், ஷிவராம் ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர், பிரிட்டிஷ் காவல்துறை மேலதிகாரியாக இருந்த ஜான் சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற நாள் 1928 டிசம்பர் 17. அவர்களுடைய உண்மையான நோக்கம், ஜேம்ஸ் ஸ்காட் என்ற காவல்துறை அதிகாரியைக் கொலை செய்வதாகத்தான் இருந்தது.
இந்த முயற்சிக்காக பகத் சிங் மற்றும் அவரது குழுவினர் எப்படித் திட்டமிட்டார்கள் என்பதைப் பற்றி விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
"பகத் சிங் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் கொன்றதற்காக அல்ல, மாறாக நாட்டு மக்களின் பார்வையில் லாலா லஜபதி ராயின் மரியாதையை மீட்டெடுத்ததால் பிரபலமானார்.
அவர் ஓர் உதாரணமாக மாறினார். சில மாதங்களில் பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் அவரது பெயர் ஒலிக்கத் தொடங்கியது," என்று ஜவஹர்லால் நேரு எழுதினார்.
1907இல், பிரிட்டிஷ் அரசு லாலா லஜபதி ராய் மற்றும் அஜீத் சிங் ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்றியது. இருவரும் ஒரே கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறைகூட அவர்கள் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
விடுவிக்கப்பட்ட பின்னர் இருவரும் ஒரே ரயிலில் லாகூர் அழைத்து வரப்பட்டனர். அந்த அஜீத் சிங்கின் மருமகன்தான் பகத் சிங். பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழிவாங்கினார் பகத் சிங்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












