You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக - பாமக மோதல் ஏன்? கூட்டணி தொடருமா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக குறித்துப் பேசியதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க, விவகாரம் இரு கட்சிகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகளில் இது பாதிப்பை ஏற்படுத்துமா?
புத்தாண்டு தினத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுக நான்காக உடைந்திருக்கிறது. தி.ம.க மீது மக்களுக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அடுத்து நாம்தான் இருக்கோம். மற்றவர்கள் எல்லாம் வெறும் சத்தம்தான்" என்று பேசினார்.
அவருடைய இந்தப் பேச்சுத்தான் அதிமுகவை கொந்தளிக்க வைத்துள்ளது. திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஏறி வந்த ஏணியை மறக்கலாமா? ஜெயலலிதா இல்லையென்றால் பாமகவே வெளியில் தெரிந்திருக்காது," என்றார்.
மேலும், "ஜெயலலிதா கூட்டணி வைத்ததால்தான் பா.ம.கவுக்கு அங்கீகாரமே கிடைத்தது. அதற்கு முன்பு அந்தக் கட்சிக்கு அங்கீகாரமே கிடையாது. 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம்தான் கிடைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 5 இடங்களை ஒதுக்கப்பட்டன. அதில் 4ல் வெற்றிபெற்றார்கள். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பாமகவுக்குக் கிடைத்தது. இப்படி நன்றி மறந்து பேசினால், தமிழக மக்கள், அதிமுகவினர் மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிக்காரர்களே மதிக்க மாட்டார்கள்.
2001 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கு 27 இடங்களை ஜெயலலிதா வழங்கினார். அதில் 20 இடங்களில் வெற்றிபெற்றனர். இப்படி அதிமுக தயவால்தான் சட்டமன்றத்தில் நுழைந்தது. நாடாளுமன்றத்தில் நுழைந்தது. மத்திய மந்திரி பதவிகளைப் பெற்றது. அதிமுகவின் தயவையெல்லாம் பெற்றுவிட்டு, இப்போது அதிமுக நான்காக உடைந்துவிட்டதாகச் சொன்னால் சரியா?
அன்புமணி வகிக்கும் எம்பி பதவி யார் கொடுத்தது? அதிமுகதான் அவரை எம்.பியாக அடையாளம் காட்டியது. அதையெல்லாம் மறந்துவிட்டுப் பேசலாமா? இனியும் எங்களைச் சீண்டினால், தக்க பதிலடி தருவோம்" என்கிறார் ஜெயக்குமார்.
அன்புமணியின் கருத்துக்கு அதிமுக இவ்வளவு ஆவேசமாக பதிலளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியெதென்றால், அதைவிட ஆச்சரியம் பாமகவின் பதிலடி. உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு, அதிமுகவிற்கு பாமக உதவிய தருணங்களைச் சுட்டிக்காட்டினார்.
"அதிமுக பிளவுபட்டிருக்கிறதென்பது சாதாரண குழந்தைக்குக்கூட தெரிந்த விஷயம். இதனை நாங்கள் எங்கள் கட்சிக் கூட்டத்தில் பரிமாறிக் கொள்கிறோம்.
இதைப் பற்றி ஜெயக்குமார் பேசும்போது 1998ல் பாமகவுக்கு நாங்கள்தான் சீட் கொடுத்தோம், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு நாங்கள்தான் காரணம் என்கிறார். அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் எந்த வகையில் காரணம்? முதலில், இவர் யார்?
உடன்படிக்கையின்படி அந்த இடம் பாமகவுக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தை யாருக்கு வழங்குவதென்பதை கட்சித் தலைமை முடிவுசெய்து, அன்புமணி ராமதாஸுக்கு வழங்கியது.
எங்களால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களானார்கள், சட்டமன்ற உறுப்பினர்களானார்கள் என்று சொல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், 1996ஐ அவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். ஆட்சியிலிருந்த அதிமுக பெற்ற இடங்கள் நான்கு. தனித்து நின்ற பாமக பெற்ற இடங்களும் நான்கு.
1998ல் அ.தி.மு.க. பலவீனப்பட்டிருந்தபோது, தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்து ஜெயலலிதா கூட்டணி அமைத்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
எப்போதெல்லாம் அதிமுக பலவீனப்பட்டு, உயிர் போகக்கூடிய நேரமாக இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் உயிர் வழங்கக் கூடியவர்களாக பாமகவினர் விளங்கியிருக்கிறோம். 1998ல் அந்த முடிவை எடுக்கவில்லையென்றால், அதிமுக பெரும் சரிவை சந்தித்திருக்கும். 2001ல் கூட்டணி வைக்க ராமதாசுக்காக ஜெயலலிதா வழிமேல் விழிவைத்து காத்திருந்தார்.
'எங்களால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது, எங்களால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார், ஜெயக்குமார் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்' என நாங்கள் ஒருபோதும் சொல்வதில்லை. ஆகவே, ஜெயக்குமார் பாமகவை விமர்சிக்கும்போது, கடந்த காலத்தில் பாமகவின் பங்களிப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்.
ஜெயக்குமார் சொன்னதை அவருடைய தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். ஆகவே உரிய விளக்கத்தை எடப்பாடி கே. பழனிசாமி அளிக்க வேண்டும்.
கூட்டணி குறித்துப் பேச நேரம் இன்னும் வரவில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகத்தான் எல்லா கட்சிகளும் அது குறித்து முடிவெடுப்பார்கள். நாங்கள் கட்சியைப் பலப்படுத்தும் பணியை செய்கிறோம்.
கூட்டணிக் கட்சிகள் தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம். ஒரு தலைவர் ஒரு கருத்துச் சொல்லிவிட்டார் என்பதற்காக அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.
மக்கள் நலனுக்கான விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்போம். இந்த சூழல் உருவாக காரணமான ஜெயக்குமார் குறித்து, அதிமுகதான் விளக்கமளிக்க வேண்டும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டி வந்தது. அப்போது ஆட்சியைத் தக்கவைக்க 9 இடங்களில் அதிமுக வெல்ல வேண்டியிருந்தது. ஆகவே, நாங்கள் பலமாக இருந்த வட மாவட்டங்களில் போட்டியிடாமல் அவர்களுக்கு ஆதரவளித்தோம். 'அதன் மூலம் இரண்டு ஆண்டுகள் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக தொடர நாங்கள் காரணமாக இருந்தோம். ஜெயக்குமார் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருக்கவும் நாங்கள்தான் காரணம்' என்று சொல்ல மாட்டோம்.
ஒரு கூட்டணியில் இருக்கும் இருவரும்தான் பயனடைகிறார்கள். அ.தி.மு.கவினர் தங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லையென்றால் ஏன் நீதிமன்றம் செல்கிறார்கள்? இதை நினைவூட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது ஜெயக்குமார்தான்" என கடுமையாக ஜெயக்குமாரை விமர்சித்தார் வழக்கறிஞர் கே. பாலு.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை, கடந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.கவுடன்தான் தேர்தலைச் சந்தித்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, 7 இடங்களில் போட்டியிட்டது.
ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
2024ஆம் ஆண்டின் நாடளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் கூட்டணி கணக்குகளைப் போடத்துவங்கிவிட்டன. அதன் ஒரு பகுதிதான் பாமகவின் இந்தப் பேச்சு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா.
"பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தாங்கள் தனித்து நிற்பதாகச் சொல்வார்கள். தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி குறித்துப் பேசுவார்கள். 2016ல் அவர்கள் தனித்து நின்றபோது 5.5 சதவீத வாக்குகளைப் பெற்றார்கள்.
வடக்கு - மேற்கு மாவட்டங்களில் பல தொகுதிகளில் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யக் கூடிய சக்தியாக பாமக இருக்கிறது. ஆகவேதான், தேர்தல் நெருங்கும்போது பாமக இதுபோல பேசுகிறது. ஆனால், இப்போது அதிமுக எதிர்வினை ஆற்ற ஆரம்பித்திருக்கிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் வெளியேறினால் அந்தக் கூட்டணியில் இடம்பெற பாமக விரும்பலாம். ஆகவேதான் திமுக மீதான விமர்சனத்தைக் குறைத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால், அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொல்லக்கூடும்." என்கிறார் துரை கருணா.
அதிமுகவை பொருத்தவரை தங்கள் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை; எடப்பாடி கே. பழனிசாமி தரப்புதான் இன்னும் பலமான தரப்பு என்பதைக் காட்டவே இதுபோல எதிர்வினை ஆற்றுகிறது. தேர்தல் நெருங்க நெருக்க காட்சிகள் தெளிவாகும் என்கிறார் துரை கருணா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்